தமிழகத்தில் பாஜக வாய்ப்புகளை ஆய்வு செய்கிறார் ஆளுநர் : விஜயதாரணி தாக்கு
கோவையில் தமிழக ஆளுநர் நேற்று மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த அலோசனையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நக்கீரன் இணையதளத்திற்கு இதுதொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதாரணி கருத்து தெரிவிக்கையில்,

புதுச்சேரி போன்ற இடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் துணை நிலை ஆளுநர்களின் இதுபோன்ற செயல்களையே எதிர்க்கிறோம். அப்படியிருக்கும்போது தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மரியாதை இல்லாமல் செய்கிறார். சட்டமன்றத்திற்கு ஒரு மரியாதை உள்ளது. அதற்கு அவர் மதிப்பளிக்கவில்லை. வேண்டுமென்றே அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை தாண்டி இப்படி செய்கிறார்.
பிறரின் சட்ட ரீதியான உரிமைகளுக்குள் புகுந்து ஆட்சியை கபளீகரம் செய்வதில் பாஜகவின் நபராக செயல்படுகிறார். ஏற்கனவே மத்திய அரசும், பாஜகவும் இங்குள்ள ஆட்சி, ஆளும் கட்சிக்குள் பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி ஆட்சியையும், கட்சியையும் கபளீகரம் செய்வதற்கு பல்வேறு தொந்தரவுகள், அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஆளுநரின் செயல்பாடு பெரிய உள்நோக்கம் நிறைந்ததாக உள்ளது. பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. ஆய்வு செய்வதாக ஆளுநரின் செயல்பாட்டால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோடியின் செல்லப்பிள்ளைகள் என கூறப்பட்டது தற்போது தலைகீழாக மாறிப்போனது. ஆளுநர் மூலமாக அவர்களுக்கும் செக் வைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ஆளும் கட்சி இன்று பிளவுப்பட்டு இருக்கிற நிலையில் இந்த விசயத்திலாவது இவர்கள் புத்திசாலித்தனமாக ஒற்றுமையாக செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரின் செயல்பாட்டை எதிர்க்காததன் காரணம், தங்களுக்கும் தொந்தரவு வந்துவிடும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் மூலம் ரெய்டுகள் வந்துவிடும் என்ற பயத்தில் உள்ளனர். பாஜக தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசை விமர்சிக்க பயப்படுகின்றனர். அப்படி விமர்சனம் செய்த டி.டி.வி. தினகரன் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது என்பதை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.
புறவாசல் வழியாக ஆளும் அரசையும், ஆளும் கட்சியையும் பாஜக கபளீகரம் செய்வதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். வாக்களித்தது யாருக்காக, எதற்காக என்று மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்க்கட்சியாக உள்ள உங்கள் பணிகள் என்னவாக இருக்கும்
ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நிச்சயமாக ஆளுநருக்கு எதிராக குரல் கொடுக்க வாய்ப்புள்ளது. ஆளும் கட்சி ஆளுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் நிச்சயம் அவர்களுக்கு எதிராகவே அமையும் என்றார்.
-வே.ராஜவேல்