தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் அலப்பறைகள் தொடங்கிவிடும். சாலையில் நடந்துசெல்வது முதல் வென்று சபைக்கு செல்வதுவரை அனைத்திலும் தனது முகத்தை பதிய வைக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் செய்வது கொஞ்ச நஞ்சமல்ல.
வேட்பாளர்கள் மட்டுமல்ல வேட்பாளருடன் வருபவர்களும், வேட்பாளர்களுக்கு இணையாகவே சேட்டைகள் செய்வர். இன்று வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள். அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல்செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களிலேயே பல பிரச்சனைகளும், சண்டைகளும் நடந்துவருகின்றன. அதுமட்டுமில்லை ஆளாக்குவந்து தங்களது வேட்பாளருக்கு வேட்புமனு வேண்டும் என நிறைய வேட்புமனுக்களையும் வாங்கி சென்றுள்ளனர். வேட்புமனுக்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு தொகுதியில் தங்களது வேட்பாளருக்கு எனக்கூறி 12 வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளனர். வேட்பாளருக்கு நெருக்கமாக இருக்கிறோம் என காட்டிக்கொள்வதற்காகவே இப்படி செய்கின்றனர் எனவும், இப்படியாக 100 வேட்புமனுக்கள் கொடுக்கப்படுகிறது, அதில் பாதிகூட தாக்கல் செய்யப்படுவதில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் வேட்புமனுதாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர், 'கள் இறக்க அனுமதி பெற்றுத் தருவேன்' என்று கூறினார். மேலும் அவர், 'மதுவால் உடல்நலம் கெடுகிறது. கள் என்பது, உணவின் ஒரு பகுதி, என்ற தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அடுத்து வந்த வேட்பாளர் 'வீட்டுக்கு 10 லிட்டர் பிராந்தி கொடுப்பேன்' என்றவாறு மனு தாக்கல் செய்தார். அடுத்து, அந்தியூர் சுயேட்சை வேட்பாளர் ஷேக்தாவூத். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர், ''வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும், தலா 10 லிட்டர் பிராந்தி கொடுப்பேன் என்றார், மேலும் அவர், மருந்து சாப்பிடுவதை போல் அளவாக குடித்தால், ஆரோக்கியமாக வாழலாம் என்றும் அறிவுரை கூறினார்.
தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கத்தினர், ஹைட்ரோ கார்பன், சாகர் மாலா போன்ற திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விளைநிலங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை மக்களவைத் தொகுதிகளில் தலா 100 வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தனர். தரங்கம்பாடி, கீழையூரைச் சேர்ந்த விவசாயி ஏ. சாமித்துரை(63) மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அவர் அரை நிர்வாணக்கோலத்தில், கையில் ஏர் கலப்பையுடன் வந்ததைக் கண்ட காவல்துறையினர், அவர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதியளிக்கவில்லை. பின் ஏர் கலப்பையை வெளியே விட்டுவிட்டு, சட்டையை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர், மதுரை மீனாட்சியம்மன் வேடமணிந்து வேட்புமனு தாக்கல்செய்ய வந்தார். உடன்வந்த இரண்டு திருநங்கைகளும் கிறித்துவர், இஸ்லாமிய வேடமணிந்து வந்திருந்தனர். திருநங்கைகளுக்கு சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதை உணர்த்ததான், நான் மீனாட்சியம்மன் வேடமணிந்தும், என்னுடன் வந்த திருநங்கைகள் இஸ்லாமிய, கிறிஸ்துவர் வேடமணிந்து இணைந்து வேட்புமனு தாக்கல் செய்யவந்துள்ளோம்’’ என்றார். இவர் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தென்சென்னை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் அம்மா மக்கள் தேசிய கட்சியின் நிறுவனர் குப்பல்ஜி தேவதாஸ். சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அவர், டெபாசிட் தொகையான ரூபாய் 25 ஆயிரத்தையும் ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 என சில்லரையாகவே கொண்டுவந்தார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் லுங்கி, சட்டையுடன், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, கையில் நண்டுகளையும் எடுத்துக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நர்மதா. அவர் கொண்டுவந்த நண்டுகளை பறிமுதல் செய்தபிறகு அவரை காவல்துறையினர் அனுமதித்தனர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவவில்லை என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளைக் கூறி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் மேற்கொண்டு கைதானவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வந்தார் அரசன். வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, ரூ.12,500ல் ரூ.500 குறைந்துள்ளது. இதனால் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி சென்றுள்ளார். பணம் எப்படி குறைந்தது எனக் கேட்பதற்காக, அவரது மனைவியை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். அப்போது அவரது மனைவி, காய்கறி வாங்குவதற்காக ரூபாய் 500ஐ எடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பத்மராஜன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு தேர்தல் மன்னன் என்ற பெயரும் உள்ளது. அதற்கு காரணம் இந்த வேட்புமனு இவருக்கு 200வது முறை. சேலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும், வேட்புமனு தாக்கல் செய்து விடுவார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிதன் என்பவர் பின்னோக்கி நடந்தபடி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் கடந்த 26 ஆண்டுகளாக பின்னோக்கி நடந்து வருகிறேன். இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை மனுதாக்கல் செய்துள்ளேன். வேட்பு மனுவில் சாதி என கேட்கப்பட்ட இடத்தில் ‘மனித சாதி’ என்று குறிப்பிட்டுள்ளேன். இதனால் எனக்கு டெபாசிட் கிடையாது. இருந்தாலும் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி உள்ளேன்.
இப்படியாக பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. இப்போதுதான் வேட்புமனுதாக்கல் நடக்கிறது. இன்னும் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, இறுதி முடிவு என பலவிஷய்ங்கள் உள்ளன. இதிலெல்லாம் என்னென்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.