Skip to main content

ஐ.சி.யூ.-இல் ஆதித்தமிழரின் தோல் பாவை கூத்து; உயிரூட்டப்படுமா?

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

street drama life

 

‘தந்தான தான... தந்தான தான...’ ‘ஏலேலோ ஏலேலோ ஐலசா...’ என்று சந்தோசத்தையும் ‘கஞ்சிக்கலயம் சொமந்து கரைமேல வாரபுள்ள கண்ணுல வெள்ளமென்ன சொல்லடியாத்தா’ என்று துக்கத்தையும் நாற்று நடும்போதும் களை பறித்தலின் போதும், தெம்மாங்கு பாட்டால் வெளிப்படுத்தி நம் ஆதிகாலத் தமிழர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்வர். இன்றைய மலிவு மகிழ்ச்சி சாதனங்களான டி.வி., ரேடியோ, டிஜிட்டல் யுகமல்ல அக்காலம். பொழுதுபோக்கு அம்சம் என்னவென்று வார்த்தைகளே அறியாத காலத்தில், தங்களின் களைப்பை போக்க, உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை ஏற்றிக் கொள்ள தெம்மாங்கும் தெருப்பாடல்களுமே வடிகாலாய் இருந்தன.

 

காலப்போக்கில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர்கள் வேலைப்பளுவின் உடல் சோர்வைக் களைய அந்திமயங்கும் வேளையில் கிராமத்து தெருக்களில் ஆடல் பாடல் தெம்மாங்குகளை பொம்மலாட்டம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். படுதா போன்று கட்டிய திரைச்சீலையின் பின்னே கயிறுகளால் கட்டப்பட்ட மரப்பொம்மைகளை இயக்கி ஆட வைப்பதும், ஓடவைத்து அதற்கு பின்னணியாக பாவைக் கூத்துக்களைப் பாடி மக்களை களிப்புறச் செய்வார்கள் பொம்மலாட்டக் கலைஞர்கள். ஆலையில்லாத ஊரில் இதுப்பைப் ’பூ’ சர்க்கரை என்பதைப் போன்று நிழற்பட அரங்கம் (சினிமா தியேட்டர்) இல்லாத காலத்தில் இந்தப் பொம்மலாட்டக் கலையே மக்களுக்குப் பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தது.

 

street drama life

 

இதையடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கூத்துக் கலைஞர்கள் கதாபாத்திரங்களை தோலில் வரைந்து காட்சிப்படுத்தி வாடிய மக்களைக் கலகலப்பாக்கி இருக்கிறார்கள். அதன் மூலம், ராமாயாணம், மகாபாரதக் கதைகளை பின்னணியாக ஏற்ற இறக்கத்தோடு பேசி நடத்திய தோல்பாவைக் கூத்திற்கு ஆதிகால மக்களிடம் நல்ல வரவேற்பிருந்திருக்கிறது. காலப்போக்கில் இந்தக் கிராமிய தோல் பாவை கூத்திற்கு நல்ல வரவேற்பிருந்ததால் கிராமங்கள் தோறும் தோல் பாவை கூத்துக்கள் அந்தி நேரத்தில் அமர்க்களப்பட்டன.

 

பழமையான கூத்து என்றாலும், இயற்கை மணம் மாறாமலிருக்கும் இந்தக் கலையை சினிமா, தொலைக்காட்சி, வளர்ச்சியையும் தாண்டிய டிஜிட்டல் யுகம், தோல் பாவைக் கூத்துக்களை ஓரங்கட்டினாலும், 60 ஆண்டுகளுக்குப் பின்பும் தோல் பாவை கூத்து மறையாமல் இன்றளவும் கிராமப்புறங்களின் ஓரங்களில் நடைபெற்று வருவது தமிழனின் கலைகள் மண்ணுக்குள் செல்லவில்லை என்பதற்கு சாட்சியாக நிற்கிறது.

 

street drama life

 

மக்களின் ரசனைகள் கைவிட்டாலும், ஆதித் தமிழர்களான தங்களின் முன்னோர்களின் தோல்பாவைக் கூத்துக் கலையை தன் குடும்பத்தார் சகிதம் 50 வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிற தோல் பாவை கூத்து கலைஞரான ராஜூவின் வயது 74. சுமார் 20 கலைக் குடும்பங்கள் நெல்லையில் வசித்தாலும், இன்றளவும் அதற்கு உயிரூட்டும் வகையில் வருமானமில்லா விட்டாலும், கிடைத்தது போதும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்று தோல் பாவை கூத்தை நடத்தி வருகிற ராஜூ கலை ஆர்வம் மங்காமல் சொன்ன கூத்தின் காட்சி அமைப்பு சிரமங்கள், அதற்காகப் பட்ட பாடுகள் புருவங்களை உயர வைக்கின்றன.

 

ஆட்டின் தோலைப் பதப்படுத்தி ரோமங்கள், கொழுப்புகளை அகற்றிய பின் அதைக் காயவைத்து, அவுரி இலை, முள் கற்றாழை, கள்ளிப்பால் போன்றவற்றின் கலவையால் வரும் வர்ணங்களைக் கொண்டு நாங்களே கதாபாத்திரங்களின் ஓவியங்களை வரைகிறோம். இந்த தோல் பாவைகள் அழியாது கிழியாது. ராமாயணம், மகாபாரதம், நல்லத்தங்காள், அரிச்சந்திரா போன்ற இதிகாசப் புராணங்களின் கதைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு என்பதால் அந்தக் கதாபாத்திரங்களை வரைவோம். 150 ஆண்டுகால பழமையான பாவைகளைக் கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பாவைகள் எங்களிடமிருக்கு. பெரிய மொடாவில் விளக்கெண்ணெய் ஊற்றி திரிவைத்து தீபமேற்றி, அந்த வெளிச்சத்தின் பின்னே தோல் திரையைக் கட்டி கதாபாத்திரங்களைக் காட்சிப்படுத்துவோம். அதன் பின் பெட்ரோமாக்ஸ் விளக்கு, பயன்பாட்டுக்குப் பின் இப்ப 100 வாட்ஸ் 500 வாட்ஸ் பல்புகளை பயன்படுத்தி தோல் பாவைக் கூத்து நடத்துகிறோம்.

 

street drama life

 

இதில் மக்களுக்கு வெகுவாகப் பிடித்த ராமாயணம், நல்லத்தங்காள், அரிச்சந்திரன் மயான காண்டம் போன்ற கதைகளை காட்சிப்படுத்தி வழக்கமான பின்னணியாக ஹார்மோர்னியம், தவில் போன்றவைகளை பாடல் வசனங்களுக்கு ஏற்ப இசையமைத்து வாசிப்போம். பாவைகளைக் காட்சிப்படுத்தும்போது அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப குரலை மாற்றிப் பேசுவோம். முக்கியமா நல்லத்தங்காள் கதை அடுத்து நாட்டை இழந்த அரிச்சந்திர மகாராசா மயானம் காப்பார். மயான காண்டத்தில், அவர் மனைவி சந்திரமதி மகன் லோகிதாசன் உடலை மயானம் கொண்டு வருகையில், அரிச்சந்திரனுக்கும், சந்திரமதிக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் போராட்டங்களை பாவைக் காட்சிகளோடு பின்னணி இசைக்குரலுடன் காட்சிப்படுத்துகிறபோது காட்சியைக் காணும் பெண்கள் கண்ணீர் விட்டு அழுததும் உண்டு. அப்படி ஒரு வரவேற்பு மக்களிடம்.

 

இப்ப காலத்திற்கேற்ப பாணியை மாற்றியும் உள்ளோம். மகனை பள்ளிக்கு அனுப்ப கதியற்ற தந்தை அவனை வேலைக்கு அனுப்புகிறார் இதையறிந்த பள்ளி தலைமையாசியார் அவனை பள்ளிக்கு அழைத்து வந்து படிக்க வைக்கிறார். நல்லா படிச்ச அந்த மாணவன் டாக்டராகிவிடுகிறான். மக்களுக்கு இலவசமாகவே வைத்தியம் செய்யும் அந்த டாக்டர் மாணவன் பிரசவ வைத்தியத்திலும் முன்னேறிவிடுகிறான். இப்படி காலத்திற்கேற்ப பாவைகளைக் காட்சிப்படுத்துவதிலும் வரவேற்பிருக்கு. ஆனா என்னதான் முன்னோர்களின் கலையை ஐந்து தலைமுறையாக நாங்கள் நடத்தி வந்தாலும் குடியிருக்க வீடின்றி ஒண்டி வருகிறோம். தமிழகம் முழுக்க பட்டி தொட்டியெல்லாம் தோல் பாவை கூத்து நடத்தி வந்தாலும், போதுமான வருமானமில்ல. தொழிலை விடவும் மனசில்ல. அரசாங்கம் இந்தக் கலையின் மேல் பார்வையைத் திருப்பி, பள்ளி கல்லூரிகளில் நடத்த ஏற்பாடு பண்ணுனா, இந்தக் கலையும் உயிரோடு வளரும். கலைஞர்களின் வயிறும் பசியாறும்யா. என்றார். வற்றிப் போன உடைந்த குரலில்.

 

 

சார்ந்த செய்திகள்