"என்னால் மட்டும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளை தொடர முடிந்தால் எப்படி இருக்கும்?"
கார்ல் மார்க்ஸின் கனவாக இது இருந்தது. அது கனவாகவே தொடர்ந்தது. அந்த அளவுக்கு அவரை வறுமை ரவுண்டுகட்டி அடித்துத் துவைத்தது.
உலகை புரட்டிப் போட்ட 'மூலதனம்' நூல் எழுதப்பட்ட சூழ்நிலையை அறிந்தால், அது நிஜமாகவே ஒரு மனித விஞ்ஞானச் சாதனையாகும்.
1848 ஆம் ஆண்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது. அவர்கள் வாழ்க்கைக்கு வழியில்லை. 1852 ஆம் ஆண்டு மார்க்ஸின் பெண் குழந்தை இறந்தது. அதை அடக்கம் செய்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. அவர்களுடைய வறுமையை புரிந்துகொள்ள இதுவே போதும்.
வறுமையின் கொடுமையால், தனது விஞ்ஞான ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு குறைவான ஊதியத்துக்காவது வழியைத் தேட வேண்டிய நிலைக்கு மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
நியூயார்க் டெய்லி டிரிபியூன் என்ற அமெரிக்கப் நாளிதழுக்கு வாரந்தோறும் இரண்டு கட்டுரைகள் எழுதினார். பல வருடங்கள் அவர் ஓய்வில்லாமல் உழைத்தார். ஆனால் இந்தக் குறைவான ஊதியம் கூட மார்க்ஸுக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஏனென்றால் பத்திரிகையின் ஆசிரியர், மார்க்ஸ் எழுதிய எல்லாக் கட்டுரைகளையும் வெளியிட மாட்டார். வெளியிடப்பட்ட கட்டுரைக்கு சன்மானமாகக் கொடுத்த குறைந்த தொகையையும் அவர் வெட்கமின்றி அடிக்கடி குறைத்துவிடுவார்,
மார்க்ஸ் குடும்பத்துடன் ஏங்கெல்ஸ்
"பத்திரிகை வேலையில் எனக்குக் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு, அனுபவமற்ற எழுத்தாளரைக் காட்டிலும் குறைவாகவே நான் சாப்பிட்டேன்" என்று மார்க்ஸ் எழுதியிருக்கிறார்.
இதன் காரணமாக, அவர் தன்னுடைய ஆராய்ச்சியை எப்போதாவதுதான் செய்ய முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில்தான், தொடர்ச்சியாக பல மாதங்கள் தனது ஆராய்ச்சியைத் தொடர முடிந்தால் எப்படியிருக்கும் என்று அவர் கற்பனையில் மிதக்கத் தொடங்கினார். அது அவர் கைக்கு எட்டாத ஆனந்தத்தின் சிகரமாக இருந்தது.
வருடங்கள் ஓடினாலும், மார்க்ஸையும் அவர் குடும்பத்தையும் வறுமை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தது. 1861ஆம் ஆண்டு மார்க்ஸ் பத்திரிகை நிருபர் வேலையையும் தன்னுடைய முக்கிய வருமானத்தையும் இழந்தார். இதையடுத்து, சில சமயங்களில் அவர் வாரக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே போவதில்லை, ஏனென்றால் அவருடைய உடைகள் அடகுக்கடையில் இருந்தன. மூலதனம் நூலுக்காகத் தயாரித்துக் கொண்டிருந்த புள்ளிவிவரக் கணக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டார். தன்னுடைய கடன் பட்டியலை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரொட்டிக் கடைக்காரருக்கு, இறைச்சிக் கடைக்காரருக்கு, வீட்டின் உடைமையாளருக்கு.... கடன் கொடுத்தவர்ளுக்கு பயந்து முதலாவது அகிலத்தின் “பயங்கரமான” தலைவர், மறைந்து கொள்வதும் உண்டு. மார்க்ஸ் அந்த கடன்காரர்களை அரக்கர்கள் என்று கருதினார்.
சில சமயங்களில் நிலைமை நம்பிக்கையற்றதாக இருக்கும். அதிகமான மன வலிமையையும் துரதிர்ஷ்டமான சமயங்களில்கூட நகைச்சுவையை ரசிக்கின்ற சிறப்பான திறமையையும் கொண்டிருந்தார் மார்க்ஸ். வீட்டில் அவருடைய மனைவி ஜென்னியிடமிருந்து வரும் எதிர்த்தாக்குதலை சமப்படுத்துவதற்காக மௌனமாக இருப்பார். சில சமயங்களில் அவரும் பொறுமையிழந்து விடுவார். தன்னுடைய குடும்பத்தின் வறுமை, கடன்கள், மனைவியின் நோய், தன்னுடைய உடல்நலமின்மை ஆகிய துன்பங்களை வர்ணிக்கின்ற பொழுது "பிசாசு ஆட்டுவிக்கிறது” என்று மார்க்ஸ் கசப்பாக எழுதியிருக்கிறார். இந்தத் துன்பங்களில் பொன்னான நேரம் வீணாகிறது என்று வருத்தப்படுவார்.
மென்மையும் பாசமும் நிறைந்த தந்தையாக மார்க்ஸ் இருந்தார். வறுமையின் கொடுமை தன் மகள்களைப் பாதிப்பதைப் பற்றி அவர் மிகவும் வேதனைப்பட்டார். சில சமயங்களில் அணிவதற்கு உடைகள் இல்லாமல் அவர்கள் பள்ளிக்கூடத்துக்குப் போகமுடியாத சமயங்கள் இருந்தன. 1862ஆம் ஆண்டு மார்க்ஸ் தனது உயிர் நண்பர் ஏங்கெல்சுக்குப் பின்வருமாறு எழுதினார்.
“நானும் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று ஜென்னி தினமும் சொல்கிறாள், உண்மையில் நான் அவளைக் குறைசொல்ல முடியாது, ஏனென்றால் இந்த நிலைமையில் நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமதிப்புக்களும் கடுந்துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை.”
எனினும் லண்டனில் மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தினருடைய வாழ்க்கை முற்றிலும் துன்பமயமாக இருந்தது என்று கூறிவிட முடியாது. மார்க்ஸ் தன்னுடைய துன்பங்களை வீரத்துடன் தாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை அகமும் முகமும் மலரப் பயன்படுத்தினார். இருள்படிந்த, கடுகடுப்பான, எரிந்து விழுகின்ற மனிதர் என்று மார்க்ஸைப் பற்றி முதலாளி வர்க்கப் பத்திரிகைகள் எழுதியதுண்டு. ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மார்க்ஸ் வேறுவிதமானவராக இருந்தார்.
அவர் தன்னுடைய இளமைப் பருவத்தைப் போலவே முதுமையிலும் நகைச்சுவை கலந்து பேசுவதை விரும்பினார். அத்தகைய உரையாடலை ரசித்தார். உடல்ரீதியான, மனரீதியான நோய்களுக்கு அது மிகச்சிறந்த மருந்து என்று அவர் கருதினார். மார்க்ஸ் அதிகமான வேதனையுடன் எங்கெல்சுக்கு எழுதிய கடிதங்கள் கூட நகைச்சுவையான செய்திகளுடன் தொடங்குகின்றன. மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் நடைபெற்ற மொத்தக் கடிதப் போக்குவரத்திலும் நகைச்சுவை கலந்திருக்கிறது.
"மார்க்ஸை கடுகடுப்பானவர் என்று கூறுகிறவர்களுக்கு, மார்க்ஸுக்கும் எனக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தைப் படிக்கின்ற வாய்ப்பு கிடைக்குமானால் அவர்கள் எல்லா உணர்வையும் இழந்து விடுவார்கள்" என்று ஏங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.
புரட்சிகரமான நிகழ்ச்சிகளைப் பற்றி, தொழிலாளர்களின் வெற்றிகளைப் பற்றி, முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடிகளைப் பற்றி செய்திகள் வரும் பொழுது மார்க்ஸ் குடும்பத்தில் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். உதாரணமாக, 1857ஆம் ஆண்டு அமெரிக்க நெருக்கடி வெடித்தபொழுது அதன் விளைவாக அவருடைய ஒரேயொரு வருமானத்துக்கான வழியான பத்திரிகைக்கு எழுதுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆனாலும், அந்த நெருக்கடியை வரவேற்று மார்க்ஸ் அதை உற்சாகமாகக் கொண்டாடினார். அவருடைய பழைய சக்தி திரும்பியது. அவர் இரண்டு மடங்கு சக்தியுடன் உழைத்தார். அதாவது பகலில் தன்னுடைய அன்றாட உணவுக்காகவும் இரவில் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியை முடிப்பதற்கும் பாடுபட்டு உழைத்தார். அவருடைய கணிப்புகள் பலிக்கும்போது அவர் கொண்டாட மாட்டாரா என்ன?
மார்க்ஸ் தன்னுடைய அறிவைக் கொண்டு முதலாளி வர்க்கத்துக்கு அடிமைப்பட்ட அறிவுஜீவிகள் நடத்துகின்ற வசதியான வாழ்க்கையை தன் குடும்பத்துக்கும் கிடைக்கும்படி செய்திருக்க முடியும். ஆனால் பணம் சம்பாதிக்கின்ற வழியாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது, அதைத் திரித்துக் கூறுவதைப் போலக் கேவலமானது என்று அவர் கருதினார். அதைக் காட்டிலும் செத்துப்போகக்கூட அவர் தயாராக இருந்தார்.
விஞ்ஞானத்துடன் தொடர்பில்லாத ஒரு நடவடிக்கையின் மூலம் வருமானம் பெறுவதற்கு அவர் விரும்பினார். ஆனால் அந்தத் துறையில் அவருடைய முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஒரு ரயில்வே அலுவலகத்தில் வேலைக்கு முயற்சி செய்தபொழுது, அவருடைய கையெழுத்து சரியில்லை என்று வேலை மறுக்கப்பட்டது.
எவ்வளவு நெருக்கடிகளும் சோதனைகளும் ஏற்பட்டாலும் மார்க்ஸ் தன்னுடைய லட்சியத்தை நோக்கி உறுதியாக முன்னேறினார். 'மூலதன'த்தை எழுதுவதற்கு இத்தனை வருடங்கள் அவசியமாக இருந்தன என்பது முக்கியமானதல்ல. இவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பங்களுக்கு இடையிலும் அந்த நூலை எழுதி முடித்ததுதான் சிறப்புக்குரியது.