ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது சென்னை YMCA மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த விழா அரங்கும் மேடையும் முழுவதும் கருப்பு நிறம் மிகுந்து காணப்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு மேடையில் சிவப்பு விளக்குகள் மின்னுகின்றன. ரஜினிகாந்த், பா.ரஞ்சித் உள்ளிட்ட பெரும்பாலான படக்குழுவினர் கருப்பு உடையில் வருகை தந்துள்ளனர். தயாரிப்பாளர் தனுஷ் வெள்ளை சட்டை அணிந்துள்ளார்.
'செம வெயிட்டு' பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. அதில் கருப்பு நிறம் குறித்து பெருமையான வரிகள் இருந்தன. முன்பு வெளிவந்த காலா டீசரிலும் 'கருப்பு உழைப்பின் வண்ணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 'கருப்பர் நகரின் தலைவருடா' போன்ற வரிகளும் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. அதன் வழியில் இப்பொழுது பாடல் வெளியீட்டு விழாவில் கருப்பு நிறம் பிரதானமான இருக்கிறது.
இது, 'காலா' படத்தின் கதையினால் 'தீம்'மாக வடிவமைக்கப்பட்டதா அல்லது இதற்கு வேறு காரணமும் இருக்கிறதா என்று பேசப்படுகிறது. ரஜினி, தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்தே அவர் பாஜகவின் கைப்பாவை என்றும், காவி நிறத்தோடு தொடர்பு படுத்தியும் வந்தனர். அவர் ஆன்மீக அரசியல் பற்றி பேசிய போது அது அதிகரித்தது. இந்த பிம்பத்தைப் போக்க ரஜினி இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விழாவுக்கு ரஜினி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.