Skip to main content

"பிஸியா இருக்கேன்னு சொன்ன ராம் ஜெத்மலானியை வற்புறுத்தி வரவைத்த வைகோ" - நினைவுகளை பகிரும் துரை வைகோ!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Durai Vaiko

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மத்திய அரசு காலம் தாழ்த்திவருவதாகக் கூறி சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி தன்னுடைய சிறப்பு அதிகாரம் மூலம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவ்வழக்கில் முதலில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பின் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தத் தண்டனைக் குறைப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கும் வைகோவுக்கும் பெரும் பங்கு உண்டு. பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் இந்த வழக்கிற்குள் ராம்ஜெத்மலானி எப்படி வந்தார் என்பது குறித்து பகிர்ந்துகொண்டார்.   

 

”காலதாமதமான தீர்ப்பாக இருந்தாலும் இதை மகிழ்ச்சியான செய்தியாகவே பார்க்கிறோம். பேரறிவாளன் தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விடுதலையாகியுள்ளார். எங்கள் தலைவர் வைகோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இந்தப் பிரச்சனையை தலைவர் வைகோ கையாண்டுள்ளார். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச்சங்கிலி போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள் எனப் பல வகைகளில் தலைவர் வைகோவின் பங்களிப்பு இந்த விவகாரத்தில் இருந்தது.

 

பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டதும் அந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைவர் வைகோ, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை அணுகி இந்த விவகாரத்தில் நீங்கள் ஆஜராக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் ரொம்பவும் பிஸியாக இருந்ததால் இந்த வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த மூன்று பேர் உயிர் உங்கள் கையில்தான் இருக்கு, நீங்க எனக்காக ஆஜராக வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்ட பிறகே ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜரானார். 

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய சிறப்பான வாதத்திறமையால் மூவரின் தூக்குத்தண்டனையை தற்காலிகமாக ராம்ஜெத்மலானி நிறுத்தினார். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக பல அமர்வில் ராம்ஜெத்மலானியுடன் தலைவர் வைகோ கலந்துகொண்டார். இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி மாபெரும் சட்டமேதை. அவருடைய அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். ஆனால், தலைவர் வைகோவிற்காக சென்னை வரை வந்து வாதாடினார். ராம்ஜெத்மலானியின் வாதத்திறமையால் மரண தண்டனை தீர்ப்பை ஆயுள்தண்டனையாகக் குறைத்தார். 

 

அதன் பிறகு, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மூலம் இந்த வழக்கில் ஒரு விடை கிடைத்திருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு”. இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

 

 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.