Skip to main content

பா.ஜ.க. அமைச்சர்களின் அறிவியல் லெவல்!

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

மத்திய அறிவியல் துறை அமைச்சரே பயங்கர பொய்யராக இருந்தால் நாட்டின் அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

 

மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 105ஆவது அறிவியல் மாநாட்டில் பேசும்போது கொஞ்சம்கூட ஆதாரமற்ற பொய்யை தெரிவித்திருக்கிறார்.

 

இத்தனைக்கும் இந்த மாநாட்டை பிரதமர் மோடிதான் தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்து பேசி அமர்ந்தபிறகு, ஹர்ஷ்வர்தன் பேசினார்.

 

Harsh

 

அப்போது, நோபல் பரிசுபெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் இ=எம்சி2 (E=mc2) என்ற புகழ்பெற்ற கோட்பாட்டைக் காட்டிலும், வேதங்கள் உயர்ந்தவை என்று, மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கூறியிருப்பதாக சொன்னார்.

 

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இறைமறுப்பாளராக வாழ்ந்தவர். அவர் எப்படி வேதங்களை உயர்ந்தவை என்று சொல்லியிருக்க முடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. ஆனால், பேசுவது அமைச்சராயிற்றே. யார் அதை மறுத்துப் பேச முடியும். பிரதமர் மோடியை விடுங்க. அவர் ஏற்கெனவே, உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் பிள்ளையாருக்குத்தான் செய்யப்பட்டது என்று கூறி அதிரவைத்தவர். அவருடைய அறிவியல் அறிவு பற்றி எல்லோருக்கும் தெரியும். அறிவியல் மாநாட்டுக்கு வந்திருந்த விஞ்ஞானிகளும் மவுன சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

 

E=mc2 என்பது ஆற்றல்=நிறைX(299,792,458 மீ/வி)2 என்று 1905 ஆம் ஆண்டு இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறினார். அவருடைய சார்பியல் கோட்பாட்டின் சிறப்பம்சமாக இது கருதப்படுகிறது.

 

அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஒரு மருத்துவர். அவர் தனது பேச்சில், எந்த வேதம் ஐன்ஸ்டீன் கோட்பாட்டைவிட சிறந்தது என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. அல்லது, ஹாக்கிங்ஸ் எந்த இடத்தில் இப்படி கூறியிருக்கிறார் என்றும் சொல்லவில்லை.

 

Harsh

 

இதைப்பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ‘மீடியா ஆட்களே இதைக் கண்டுபிடித்துப் போடுங்கள். அதை உங்கள் வேலையாகக்கூட வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்னிடம் உள்ள தகவலைத் தருகிறேன் என்றும் கூறினார்.

 

அமைச்சரின் இந்த பேச்சு உண்மை என்பதற்கு ஆதாரமாக, ஹாக்கிங் எந்த இடத்திலும் இப்படி பேசியதாக ஆவணங்கள் இல்லை. ஆனால், ஹாக்கிங் ஜோதிடத்தை ஏற்கமுடியாது என்று கூறியதற்கு ஆதாரம் இருக்கிறது என்று தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் கூறியிருக்கிறது.

 

2001 ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த ஐன்ஸ்டீன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஹாக்கிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அவர், ஜோதிடத்தை விஞ்ஞானிகள் நம்பாததற்கு காரணம், விஞ்ஞானிகளின் கோட்பாடுகளைப் போல அது சோதனைகளால் நிரூபிக்கப்படவில்லை என்று ஹாக்கிங் கூறினார். இதற்கான ஆதாரம் ஹிண்டு பத்திரிகையிடம் இருக்கிறது என்று அந்த பத்திரிகையே கூறியிருக்கிறது.

 

அறிவியல் மாநாடுகளில் இப்படிப்பட்ட கேலிக்குரிய கருத்துகள் பேசப்படுவது இது முதன்முறை அல்ல. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் மாநாட்டில், வேதங்களிலேயே ஆகாய விமானங்கள் பற்றி கூறப்பட்டிருப்பதாக பேசியிருக்கிறார்கள். நவீன வானவியலை வேதகால கற்பனைகளுடன் ஒப்பிடுவதை கிண்டல் செய்தாலும், அது தொடரத்தான் செய்கிறது.

 

ஹர்ஷ்வர்தனின் இந்தக் கருத்து முட்டாள்தனமானது என்று டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர் மயன்க் வாஹியா கூறியிருக்கிறார்.

 

ஹர்ஷ்வர்தன் எதன் அடிப்படையில் பேசியிருக்கிறார் என்றும் தி ஹிண்டு நாளிதழ் தேடிக்கண்டுபிடித்து செய்தியாக்கி இருக்கிறது.

 

அதாவது, ஹர்ஷ்வர்தன் பொறுப்பாக இருக்கும் அமைச்சரவைக்கு சொந்தமான முகநூல் பக்கத்தில், டாக்டர் சிவராம்பாபு என்பவர் எழுதிய புத்தகத்தில் ஐன்ஸ்டீன் கோட்பாட்டைக் காட்டிலும் வேதங்கள் உயர்ந்தவை என்று கூறியிருப்பதாக ஒரு பதிவு இருக்கிறது. அதை வைத்தே மத்திய அமைச்சராக இருப்பவர் பேசியிருக்கிறார். இதுதான் பாஜக அமைச்சர்களின் அறிவியல் லெவல்.