ரிசார்ட் உரிமையாளருடன் சேர்ந்து கணவனை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறை அருகே கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரிஜோஷ். இவருக்கு வயது 37. இவருடைய மனைவி லிஜி. இவருக்கு வயது 29. அதே பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் ரிஜோஷ். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக ரிசார்ட் அருகிலிலேயே வசித்து வந்துள்ளனர். அப்போது ரிசார்ட் உரிமையாளருக்கும், லிஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி முதல் ரிஜோஷை காணவில்லை என்று அவரது உறவினர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரிஜோஷின் மனைவி லிஜியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது திருச்சூரில் இருந்தும், கோழிக்கோட்டில் இருந்தும் என் கணவர் எனக்கு போன் செய்து பேசினார். அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் எனது போனை பாருங்கள் என் கணவரிடம் பேசினேன் என்று அழுத்தமாக கூறியுள்ளார். இவருடைய பதிலை ஏற்காத ரிஜோஷின் பெற்றோர்களும், உறவினர்களும் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து புகார் கூறிவருவதால், லிஜி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக மீண்டும் விசாரிக்கலாம் என்று லிஜியை தேடி போலீஸ் வந்துள்ளனர். அப்போது ரிசார்ட் உரிமையாளர் வாசிம் அப்துல் காதரும் (27), லிஜி மற்றும் அவருடைய இரண்டு வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர். இதனால் போலீஸாருக்கு அதிக சந்தேகம் வந்துள்ளது.
பின்பு விசாரித்ததில் ரிசார்ட் உரிமையாளருக்கும், லிஜிக்கும் இடையே தொடர்பு இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர். பின்பு இவர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு மூணார் போலீஸார் ரிசார்ட்டை சுற்றி துப்பு துலக்கினர். அப்போது ரிசார்ட் அருகே இருக்கும் மழை நீர் சேகரிப்பு தொட்டி இருக்கும் இடத்தில் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இடத்தை போலீஸார் தோண்டிய போது ஒரு சாக்கு மூட்டை இருப்பதை கண்டுபிடித்தனர். பின்பு அந்த சாக்கு மூட்டையை பார்த்த போது ஒரு ஆண் சடலமாக கிடந்துள்ளார். விசாரணையில் அது ரிஜோஷ் என்று போலீஸார் உறுதிப்படுத்தினர். அதன் பின்பு பிரேத பரிசோதனைக்காக ரிஜோஷின் உடலை இடுக்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் ரிஜோஷ் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்று தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போலீஸார் ரிசார்ட் உரிமையாளர் வாசிம் அப்துல் காதரின் சகோதரர் மற்றும் நண்பர்களை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் வாசிம் அப்துல் காதர் ஒரு வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்றை தனது சகோதரனுக்கு அனுப்பியுள்ளார். அதில் ரிஜோஷ் கொலை வழக்கில் எனது சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு தொடர்பில்லை என்று கூறியுள்ளார். பின்பு வாசிம் அப்துல் காதர் மற்றும் லிஜியின் மொபைல் போன் சிக்னல் தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் தமிழக போலீஸாருக்கும் வாசிம் மற்றும் லிஜி போட்டோவை அனுப்பி வைத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.