மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனிடம் வலதா, இடதா என கேட்டபோது, 'மய்யம்' என கூறியதும், கொள்கை பற்றி கேட்டால், 'மக்கள் நலனே எங்கள் கொள்கை' என கூறியதும் பல கேள்விகளை எழுப்பியது. அந்தக் கேள்விகளுடன் மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா அவர்களுடனான நேர்காணல்...
நீங்கள் நடித்த திரைப்படங்களிலும் சரி, இயல்பு வாழ்க்கையிலும் சரி ஒரு துணிச்சலான பெண்ணாகவே இருந்திருக்கிறீர்கள். தற்போது வந்திருக்கும் அரசியல்துறையிலும் நாங்கள் உங்களை துணிச்சலான ஒரு பெண்ணாக எதிர்பார்க்கலாமா?
நான் முதன் முதலில் நடிக்க வந்தபொழுது, அவ்வளவாக பேசவே மாட்டேன். எல்லோரும் பேசு, பேசு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். "கொட்டி, கொட்டி குளவி ஆச்சு" என்று சொல்வார்களே அதுபோலத்தான் நான் பேச ஆரம்பித்தேன். அதுவும் மனதில் பட்டத்தை யோசிக்காமல் பேசிவிடுவேன். நான் எந்த துறைக்கு சென்றாலும் அப்படித்தான் பேசுவேன், இல்லையென்றால் எனக்கு தூக்கம் வரவே வராது. அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, நடிகராக இருந்தாலும் சரி. நான் அப்படித்தான் இருப்பேன்.
நீங்கள் எம்ஜிஆருடன் இருந்து பழகி இருக்கிறீர்கள், அவர் அரசியலையும் பார்த்து இருக்கிறீர்கள். அப்போதெல்லாம் வராத அரசியல் பயணம் தற்போது வருவதற்கு என்ன காரணமாக இருக்கும்?
நீங்கள் பிறந்தவுடன் உங்கள் தாயிடம் பேட்டி எடுத்துவிட்டீர்களா, இல்லைதானே. முதலில் பள்ளி சென்றிருப்பீர்கள், பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படித்து பின்னர் இந்த வேலைக்கு வந்திருப்பீர்கள். அதுபோலத்தான் நானும் எனக்கு எம்ஜிஆர் அவர்களது ஆட்சி அப்போது அவ்வளவாக தெரியாது. போக, போகதான் அவர் மக்களுக்கு, அதுவும் ஏழை மக்களுக்கு செய்த உதவிகள் எல்லாம் தெரியவந்தது. என்னதான் காமராசர் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தாலும், அது எம்ஜிஆர் காலத்தில்தான் மாணவர்களை அதிகம் படிக்க ஈர்த்தது. அதேபோன்று நான் படித்தது கும்பகோணத்தில் அங்குதான் அவரும் படித்தார். அதுவும் எனக்கு அவர் மீது ஒரு பற்றை கொண்டுவந்தது. எனக்கு தமிழில் ஆர்வம் வருவதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர் கலைஞர் அவர்கள் தான். நான் படித்த பள்ளி ஆங்கில வழிக்கல்வி, இரண்டாவது மொழியோ சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தின் மீது எனக்கு பற்று எல்லாம் ஒன்றுமில்லை, அதை படித்தால் மார்க் அதிகமாக எடுக்கலாம் என்ற ஒரு ஆசையில் எடுத்தேன். இவர்களை தொடர்ந்து எனக்கு ஜெயலலிதா அம்மாவின் மீதும் அன்பு உண்டு. அவரும் நான் படித்த பள்ளியில் இருந்து வந்தவர் போன்ற பல காரணங்களில் ஒற்றுமைப்பட்டோம், எங்களை பார்த்தவர்களும் எங்கள் இருவருக்கும் உள்ள சில ஒற்றுமைகளை பார்த்து என் நடிப்பை எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களோ என்னை அங்கீகரிக்ககூட இல்லை. இத்தனைக்கும் அவர் எனது சொந்தக்காரரிடம்தான் நாட்டியம் பயின்றார். கலைஞர் அவரது வீட்டில் ஒரு பெண்ணாக என்னை பார்த்தார். இதையெல்லாம் தாண்டி மக்கள் நீதி மய்யத்தில் என் சிந்தனையை கேட்கவும், அவர்கள் தவறு செய்தால், நீங்கள் செய்வது தவறு என்று கூறும்போது அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கும் ஒரு கட்சியாக இது இருப்பதாலும், பல்வேறு துறையை சார்ந்த வல்லுநர்கள் இருப்பதாலும், எனக்கு இதில் சேர்ந்து அரசியலுக்கு வர தோன்றியது.
எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் மறைந்துவிட்டனர். கலைஞர் அவர்கள் தற்போது ஓய்வில் இருக்கிறார். தமிழகத்தின் இந்த ஆளுமைகள் இல்லாத இடத்தை தற்போதுதான் பிடிக்க முடியும் என்று நடிகர்கள் நினைப்பதாக பேசப்படுகிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து?
அறிஞர் அண்ணாவில் தொடங்கி, புரட்சி தலைவி அம்மா வரை எல்லோரும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள்தான். அவர்கள் ஒன்றும் ராக்கெட் சயின்டிஸ்ட் இல்லை. அது அவர்களுடைய வேலை, பேட்டி எடுப்பது உங்கள் வேலை, மற்றபடி உங்களுக்கு எனக்கும் இரண்டு கைகள், கால்கள் தான் உள்ளது. ஏன் அப்படி எல்லாம் ஒப்பிடுகிறீர்கள். அரசியலில் ஒரு மாற்றம் தற்போது தேவைப்படுகிறது, இல்லை என்று சொல்கிறீர்களா. நல்லது செய்ய வேண்டும் என்று யாருக்கெல்லாம் தோணுகிறதோ அவர்கள் எல்லாம் தேர்தலில் நிக்கட்டும், மக்களுக்கு பிடித்தால் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். எங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று தற்போது தோன்றியிருக்கிறது, அதற்கு வரவேற்பு கொடுங்களேன். கமல் சார், எனக்கு தெரிந்து பல வருடங்களாக கருத்துக்களை பதிவு செய்தும், மக்களுக்கு அவரால் முடிந்த நல்லது செய்தும் வருகிறார். உங்களுக்கு எல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை, கமல் சாரின் ரசிகர் மன்றம் என்பது மக்கள் சேவை மன்றமாகத்தான் இருந்தது. அதன்மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கமலும், அவரது ரசிகர்களும் செய்து வந்திருக்கிறார்கள். அவருக்கு எப்போதும் சமூக சிந்தனை உண்டு, அதற்கு ஒரு சுற்றுப்புறம் எல்லாம் பார்த்துதான் வரமுடியும். தற்போதாவது, வந்திருக்கிறார் சந்தோசம், என்பது என்னுடைய நினைப்பு.
தற்போது சினிமா துறையில், உச்சபட்ச நடிகர்களான ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருகிறார்கள். அதில் கமல் கட்சியே தொடங்கிவிட்டார், ரஜினி உறுதி அளித்துவிட்டார். நீங்கள் இவ்விருவர் உடனும் நடித்து இருக்கிறீர்கள், ஆனால் கமலுடன் இணைந்து இருப்பதற்கு என்ன நோக்கமாக இருக்க முடியும்?
எனக்கு தெரிஞ்சு, சிந்தனை செய்து உடனடியாக, சுயமாக முடிவெடுத்து வருவபவர் கமல். அதுனால அவர்கிட்ட இணைந்து தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன், ஊழலற்ற ஆட்சி செய்வேன் என்று சொல்லும் ஒரு அரசியல்வாதிதான் எனக்கு வேண்டும், கடைசியாக, புத்திசாலியான ஒரு அரசியல்வாதி வேண்டும். அதுதான் கமலஹாசன். அதனால்தான் நான் அவருடன் இணைந்து கொண்டேன். நான் மற்றவர்களை பற்றி சொல்லவில்லை, என் தலைவர் இவ்வாறு எல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். நான் இதில் மற்றவர்களை யாரும் புத்திசாலி இல்லை என்று சொல்லவில்லை. இதில் யார் அதிக புத்திசாலிகளோ அவர்கள் வெல்லட்டும். நீங்கள் புத்திசாலி என்றால், நான் முட்டாளில்லை. என்னுடைய கருத்தும் உங்களுடையதும் பொருந்தினால், நான் உங்களுக்கு புத்திசாலி அவ்வளவுதான். ஜனங்கள் எத்தனை காலம்தான் முட்டாள்களை பார்த்து ஏமாறுவார்கள். நான் விழித்துக் கொண்டது போல் அனைவரும் விழித்துக் கொள்வார்கள்.
மக்கள் நீதி மய்யம் மக்களுக்கு செய்யும் உதவிகள் அனைத்தும் சேவை போன்றுதான் உள்ளது. அதாவது ஒரு என்ஜிஓ போன்று, ஆதலால் இதன் மூலம் அடிப்படை அரசியல் மாறப்போவதில்லை என்கிறார்களே. இது போன்ற விமர்சனங்களை பற்றி?
ஏன் என்ஜிஓ மட்டும் தான் சேவைகள் செய்யவேண்டுமா, ஒரு அரசியவாதிக்கு சேவை மனப்பான்மை இருக்கவே கூடாதா. ஏன் ஹைடெக்கா ஒரு முன்னேற்றத்தை வரவேற்க மாட்டிங்களா. இதுவே சந்திரபாபு நாயுடு செய்தால் பாராட்டுகிறீர்கள், நாங்கள் செய்தால் விமர்சிக்கிறீர்கள்.
இல்லை, இது ஒரு எலைட் மக்களுக்கான அரசியலாக இருக்குமோ என்று விமர்சிக்கப்படுகிறது?
இது எப்படிங்க எலைட்டாக இருக்க முடியும், இது ஒரு நவீனமயமான வளர்ச்சி அவ்வளவதுதான். சரி நக்கீரன் என்ற பத்திரிகை முதலில் அச்சில்தானே நேர்காணல் வந்தது. ஏன் தற்போது வீடியோவில் எல்லாம் பதிவு செய்கிறீர்கள், நவீனமயமாகிவிட்டது என்றுதானே. அதுபோலத்தான் நாங்கள் செய்வதும்.
வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று உங்கள் தலைவர் சொன்னதை எவ்வாறு எதிர்கொள்ள போகிறீர்கள்?
நிச்சயம், படித்தவர்களை வைத்து படிக்காதவர்களுக்கு கற்பிக்க படவேண்டும். நீங்கள் விலை போகாதீங்க, எங்கள் தலைவருடைய நோக்கம் என்னவென்றால் ஓட்டுக்கு நாங்கள் உங்களை வாங்க மாட்டோம், பொருளாதாரத்தை வளர்ப்போம், உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம், அதன் மூலம் நீங்கள் பத்து பேருக்கு வாங்கிக்கொடுக்க முடியும். எல்லாருக்கும் வேலை வாய்ப்பு, எல்லாருக்கும் கல்வி இதுதான் எங்களின் கொள்கை. இது எப்போதாவது மாறும். என்ன மாறவே மாறாதா? தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லதே நடக்காதா? கண்டிப்பாக நடக்கும். நிச்சயம் நடக்கும் அது எங்களின் மூலமாக நடக்கும். எங்களிடம் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள் அவர்களை வைத்து இதுபோன்ற முறைகளெல்லாம் கற்பிக்கப்படும்.
கடந்த ஓராண்டு காலமாக நடிகர்கள் அல்லாதோர் ஆட்சி நடைபெற்று வருவது எல்லோருக்கும் விமர்சனத்தை அளிக்கிறது, அதற்கு முன்னர் மட்டும் நல்ல ஆட்சி இருந்ததா, அப்போது எல்லாம் வரவில்லையே?
அதற்குத்தான் சில விஷயங்கள் சொல்லப்படுகிறதே, அப்போ எனக்கு வரவேண்டும் என்று தோன்றவில்லை. இப்போதுதான் வரவேண்டும் என்று தோன்றியது. எனக்கு எப்போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் சாப்பிடுவேன். ஆனால், தற்போது எல்லோரும் பசியில் இருக்கின்றனர், அதனால் சாப்பாட்டை எல்லோருக்கும் அளிக்க வந்திருக்கிறோம்.