Skip to main content

பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிந்தால் வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த முடியமா..? - ஜியோ.டாமின் பதில்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

k


சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பியது. அந்தப் படத்தில் எதிரிகள் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளைப் பரப்பி நிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சினிமாவில் இடம்பெற்ற அந்தக் காட்சிகளைப் போலவே தற்போது வட மாநிலங்களில் நேரடியாக நடந்து வரும் சம்பவங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா நாடுகளைப் பாதித்த அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியா வந்துள்ளன. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் ஏன் கூட்டம் கூட்டமாக வருகின்றது, எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற நம்முடைய கேள்விக்குப் பதிலளிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ. டாமின். 

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ராஜஸ்தான் பகுதிகளில் இது நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பித்து பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளன. வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்புக்கு என்ன காரணம், எதனால் இது ஏற்படுகின்றது? 
 

 


வெட்டுக்கிளிகளின் பூர்விகம் என்று பார்த்தால் வட கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைச் சொல்லலாம். இந்த வெட்டுக்கிளிகள் எல்லாம் நம்முடைய விளை நிலங்களில் எப்படி நான்கு ஐந்து வெட்டுக்கிளிகள் நிலத்தைச் சேதப்படுத்துமோ அந்த வகையான வெட்டுக்கிளிகள் தான் இவை. இது அனைத்தும் எப்போது அதிரடியாக ஒன்று கூடுகிறது என்றால் கடுமையான வறட்சி ஏற்படுகின்ற போது பசுமையான பகுதிகளை நோக்கி தனிதனியாக இருக்கும் அந்த வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்கின்றன. இதனால் அவைகள் கூட்டம் கூட்டமாக நமக்குத் தெரிகின்றன. அப்படி அவைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தாவரங்களைச் சேதப்படுத்துகின்ற போது 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள் வெட்டுக்கிளிகளில் உற்பத்தி ஆகின்றது. 

அந்த வேதிப்பொருட்கள்தான் இந்த வெட்டுக்கிளிகளின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. இந்த வேதிப்பொருட்கள் எப்போது உற்பத்தி ஆகின்றதோ அப்போதிலிருந்து அந்த வெட்டுகிளிகளின் நடை, உணவுப் பழக்க வழங்கங்கள், வேகம் உள்ளிட்ட அனைத்தும் மாறிப்போகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் பொதுவாகவே 100-க்கும் மேற்பட்ட முட்டைகளைப் போடக்கூடியவை. ஒரு வறட்சி காலத்தில் இருக்கும் போது, அந்த வெட்டுக்கிளிகளுக்கு ஒரு மழைக்கான சிக்னல் கிடைக்கின்ற போது, நாம் இந்த இடத்தில் பல்கிப்பெருகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கின்றது.

இந்த வெட்டுக்கிழிகளை அழிப்பதற்காகச் சத்தம்போடுதல், பூச்சிக்கொல்லி அடித்தல் முதலியன செய்யப்படுகின்றது. இவையெல்லாம் பயன் தருமா? 
 

http://onelink.to/nknapp


எவ்வளவுக்கு இது பலன் தரும் என்பது தான் தற்போது இருக்கின்ற மிக முக்கியக் கேள்வியாக இருக்கின்றது. உலகம் முழுவதும் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பதுதான் நடைமுறையாக இருந்து வருகின்றது. நச்சுப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது அதனை ஒரளவு கட்டுப்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இது முழுமையான ஒரு தீர்வாக நிச்சயம் இருக்காது. ஏனென்றால் இந்த வெட்டுக்கிளிகள் எல்லாம் மண்ணுக்கு அடியில் தான் முட்டைகளை இடும். நீங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மேலே உள்ள வெட்டுக்கிளிகளை அழித்தால் கூட முட்டைகளில் இருந்து மீண்டும் வெட்டுக்கிளிகள் வர ஆரம்பிக்கும். அதையும் தாண்டி இவை பத்து பதினைந்து சதுர கிலோ மீட்டரில் இருக்கக் கூடியவை. அதே முறையில் இடப்பெயர்ச்சி அடையக்கூடியவை. இவ்வளவு பெரிய பரப்பளவில் நாம் கவனித்துப் பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வெட்டுக்கிளிகளை அழிப்பது என்பது சாத்தியம் குறைந்த ஒன்று. 

காட்டுப்பகுதிகள், மலைப்பகுதிகள், மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் கூட இதன் பரவல் இருக்கலாம். இதெல்லாம் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதில் உள்ள சிக்கல்களாக இருக்கின்றது. பெரும்பாலும் இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட மாலத்தியான் பூச்சிக் கொல்லிகளைத்தான் அரசும் பரிந்துரை செய்துள்ளது. இதில் மற்றும் ஒரு சிக்கல் இருக்கின்றது. இந்த மாலத்தியான் என்னவென்று பார்த்தால் அவைகள் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அவைகளை அழிக்கக் கூடியவை. இந்த கெமிக்கலை நீண்ட காலம் பயன்படுத்தினால் அவை நன்மை செய்கின்ற பூச்சிகளையும் அவித்துவிடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது. அவ்வாறு நடந்தால் அது பெரும் ஆபத்தாக முடியும். பெரிய பூச்சிகளான வெட்டுக்கிளிகளே இதில் அழிக்கப்படும் என்றால் விவசாயிகளுக்கு நன்மை தரும் பல்வேறு பூச்சிகளும் இதில் அழிந்துபோக வாய்ப்பு இருக்கின்றது. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகளில் அதிக கவனம் வைக்க வேண்டும்.