Skip to main content

தத்துக்கொடுத்த தாய்! தேடி அலையும் மகன்கள்! 40 வருட பாசப் போராட்டம்!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கிப் பார்த்த திரைப்படம் கண்ணத்தில் முத்தமிட்டால். தத்தெடுக்கப்பட்ட ஒரு எழுத்தாளரின் மகள் அவளது தாய், தந்தையைக் காண எண்ணி ஏங்கும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். 2016ல் வெளியான லயன் திரைப்படமும் இதேபோன்ற கதைக்களத்தை மையமாக எடுக்கப்பட்டு, குழந்தைக் கடத்தலுக்கு எதிரான கருத்தை ஆழமாக பதிவுசெய்தது. இதில் லயன் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதும் கூட.

 

dhanam


 

 

 

அவற்றைப் போலவே ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தங்களைத் தத்துக்கொடுத்த தாயை இரண்டு மகன்கள் தேடிவரும் உருக்கமான செய்தி வெளியாகியிருக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்தவர் டேவிட் கிலெண்டால் நீல்சன். இவரது உண்மையான பெயர் சாந்தகுமார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜன.25, 1978ல் தனலட்சுமி-கலியப்பெருமாள் தம்பதிக்குப் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. குடும்பச் சூழலின் காரணமாக இந்த இருவரையும் பெற்றோர் மெட்ராஸ் கிறிஸ்டைன் குழந்தைகள் காப்பகத்தில் 1978ல் விட்டுவிட்டனர். இதில் கைக்குழந்தையாக இருந்த டேவிட் 1979ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியால் தத்தெடுக்கப் படுகிறார். 
 

ஆண்டுகள் வேகமாக கடந்தோடின. டேவிட்டை அவரது வளர்ப்பு பெற்றோர் நல்ல முறையில் வளர்த்தெடுத்திருந்த சூழலில், தன்னைப் பெற்ற தாய் தந்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் ஏற்படுகிறது. தனது வளர்ப்பு பெற்றோரின் உதவியுடன் தன்னைப் பற்றிய விவரங்களை ஆராயத் தொடங்குகிறார். 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனக்கு ஒரு சகோதரர் இருந்தார் என்றும், அவர் பெயர் மானுவேல் ராஜன் என்பதையும் கண்டுபிடித்து, அவரையும் தேடி அடைகிறார். 2013ல் இருவரும் சந்தித்துவிட, இருவருமாக சேர்ந்து தமது பெற்றோரைத் தேடி வருகின்றனர். 
 

குழந்தைக் கடத்தலைத் தடுப்பதற்காக போராடிவரும் அருண் தோஹ்லே மற்றும் அஞ்சலி பவார் ஆகியோரின் உதவி கிடைக்க, இவர்களைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியைப் படித்த காப்பகம் நடத்திவரும் ஒரு கிறித்தவ பெண், தனலட்சுமியின் புகைப்படம் கிடைக்க உதவி செய்திருக்கிறார். கடந்த நாற்பது ஆண்டுகளில் தன்னைப் பெற்ற தாயை முதன்முறையாக பார்ப்பதாக வியந்து நெகிழ்ந்த டேவிட், இந்தப் புகைப்படத்தை போஸ்டரில் சேர்த்து வண்ணாரப்பேட்டை பகுதியில் தேடத் தொடங்கியபோது, கோவிந்தராஜன் என்பவர் தனலட்சுமியைத் தெரியும் என்று கூறியிருக்கிறார். அவர் எண்ணூருக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் தந்திருக்கிறார். எண்ணூரிலும் இப்போது தேடுதலைத் தொடர்கின்றனர் தாய் தனலட்சுமியின் இரண்டு மகன்கள். 
 

இந்தத் தேடுதலில் தனலட்சுமி கிடைத்து, மகன்கள் மனம் மகிழும் அந்த அழகிய தருணத்திற்காக உங்களைப் போல நக்கீரனும் காத்திருக்கிறது.