Skip to main content

முதல்வரியில் பாராட்டு, மற்றதெல்லாம் கிழி... கிழி!!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

சமீப சில நாட்களாக நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகிற தமிழக எம்.பி.க்கள் ஆ.ராசா, தொல்.திருமா, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு என்று மட்டும் சில செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
 

o chidambaram nirmala sitharaman


இது நிர்மலா சீதாராமன் தயாரித்த பட்ஜெட்டுக்கு பாராட்டு என்பைதப் போல அர்த்தமாகிறது. ஆனால், நிஜம் என்னவென்றால், நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டை தமிழக எம்.பி.க்கள் அக்குவேறு ஆணிவேறாக கிழித்தெறிகிறார்கள். மொத்த வரவு எவ்வளவு? மொத்த செலவு எவ்வளவு? பற்றாக்குறை எவ்வளவு? எந்தெந்த வகையில் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டிருக்கிறது? என்கிற விவரமெல்லாம் குறிப்பிடாமல் வெறுமனே ஒரு பளபளப்பான அறிக்கையைப் போல பட்ஜெட் இருக்கிறது என்பதே பேசிய எம்.பி.க்கள் அனைவரின் கருத்தாக இருக்கிறது.

கார்பரேட்டுகளுக்கு சாதகமான இந்த பட்ஜெட்டில், ஏழை மாணவர்களுக்காகவோ, விவசாயிகளுக்காகவோ என்ன செய்யப்போகிறோம் என்ற விவரமே இல்லை என்றும், வேலை வாய்ப்புகளுக்காக என்ன செய்திருக்கிறோம்? வருவாய்க்காக என்ன செய்திருக்கிறோம், ஏற்கெனவே இருக்கிற 100 நாள் வேலைவாயப்புக்கும், கல்விக்கும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு ஏன் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் இல்லையே என்றெல்லாம் கிழித்து தொங்கவிடுகிறார்கள்.

திருமா தனது உரையில் ஒரே கிராமத்தை இரண்டு கிராமமாக ஆக்கி வைத்திருக்கிற நடைமுறையை மாற்ற இந்த பட்ஜெட் என்ன செய்திருக்கிறது? ஒரே ஊரில் ஊர்ப்பகுதி மக்களுக்கு ஒரு சுடுகாடு என்றும் தலித் மக்களுக்கு ஒரு சுடுகாடு என்றும் ஆக்கி வைத்திருப்பதை மாற்ற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று கேட்டார். அதையெல்லாம் விட்டுவிட்டு, முதன்முதலில் ஒரு பெண் நிதியமைச்சர் ஆகியிருக்கிறார் என்பதற்காக அவரை சில வார்த்தைகள் பாராட்டினால், அதையே தலைப்பாக்கி போடுவது எப்படி சரியாக இருக்கும்? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.