Skip to main content

ராகுல் ராஜினாமா கோழைத்தனமா?

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பது நிச்சயமாக கோழைத்தனம் இல்லை. இது காங்கிரஸுக்கு நல்லதே செய்யும். அதுமட்டுமின்றி, ராகுலின் இமைஜை அதிகரிக்கவும், மோடிக்கு சிக்கலையும் ஏற்படுத்த ராகுலின் இந்த பிடிவாதம் உதவும்.
 

rahul gandhi


ராகுல் ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பது தவறு என்று அந்தக் கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிக்குள்ளும் கருத்துகள் இருந்தாலும், தனது முடிவில் அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார்.

அதேசமயம், புதிய தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்திடம் இருந்து விடுவிக்கும் முயற்சியாகவே ராகுலின் முடிவை கருத வேண்டும். ஆனால், நேரு குடும்பத்தை அட்டாக் செய்யாமல் மோடி தனது சாதனைகளை சொல்லி ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில்கூட, காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவே காரணம் என்று அமித் ஷாவும் கூறியிருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்கும் முயற்சியில் நேருவின் பேச்சைக் கேட்காமல் முடிவெடுத்தது பட்டேல். அந்த முயற்சியில், பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை தனதுவசம் வைத்துக்கொண்டது.

1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்தியப் படைகள் பாகிஸ்தானை விரட்டி அடித்தபோதும், சர்வதேச தலையீட்டின்படி, அவரவர் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முடிவாக இருந்தது.
 

rahul gandhi


அதாவது, காஷ்மீர் இன்றுவரை சிறப்பு அந்தஸ்து பெற்ற பகுதியாகவே இரு நாடுகளிடமும் நீடிக்கிறது. அந்தச் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கத் துடிப்பது பாஜக. அப்படி அந்த சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 பிரிவை நீக்கினால், காஷ்மீர் இந்தியாவோடு இருக்காது என்று பரூக் அப்துல்லா பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.

அவரை இந்திய அரசியல் சட்டப்படி தேசத்துரோக குற்றத்தில் கைது செய்யமுடியாது என்பதே இன்றைய எதார்த்தம். அப்படி இருக்கும்போது எதற்கெடுத்தாலும் நேரு குடும்பத்தையும், இந்திரா குடும்பத்தையும் குறைகூறியே தங்கள் அரசியலை நடத்தும் மோடி இனி யாரை குறைகூறுவார்?
 

rahul gandhi


இனியும் நேரு குடும்பத்தைத்தான் மோடி குறைகூறுவார். காங்கிரஸின் தலைவராக யார் வந்தாலும், அவர்களை நேரு குடும்பத்தின் பொம்மைத் தலைவர்களாகத்தான் மோடி கூறுவார். மன்மோகன் சிங்கையும் பாஜக அப்படித்தான் அழைத்தது. இனி யார் வந்தாலும் அவர்களையும் அப்படித்தான் அழைக்கப் போகிறது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மோடி அரசுக்கு எதிராக மக்களை திரட்டவும் ராகுல் தொடர்ந்து ஏதேனும் செய்தே ஆகவேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களையும் இணைக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கட்சிப்பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்த நிலையில் ராகுல் மக்களிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். மக்களைச் சந்திக்கும் தலைவர்கள் என்றுமே தோற்றதில்லை. ராகுல் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும். மோடியே அந்த நிலையை உருவாக்குவார் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.