Skip to main content

புத்த மதத்தால் இலங்கையும் சீனாவும் இணைகிறதா? - இலங்கை பத்திரிகையாளர் சோமீதரன்

Published on 31/10/2018 | Edited on 31/10/2018

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிரதமராக இருந்த இரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சேவை பிரதமராகியிருக்கிறார் அதிபர் மைத்திரி பாலசிறிசேன. ராஜபக்சே... இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றதன் பின்னணியில் இருந்த இலங்கை முன்னாள் அதிபர். அவர் மீண்டும் பதவிக்கு வந்திருப்பது என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும், தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து இருக்கிறதா? பல கேள்விகளை இலங்கையைச் சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் சோமீதரனிடம் வைத்தோம்.     

 

someetharan


 

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து இரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு மீண்டும் மஹிந்த இராஜபக்சே பதவி ஏற்று இருக்கிறார். இதனால் இலங்கை தமிழர்களுக்கும் இங்கிருக்கும் தமிழர்களுக்கும் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஒரு இலங்கை பத்திரிகையாளராக உங்கள் பார்வை ? 
 

இதை வெறும் இராஜபக்சேவின் மேல் இருக்கும் அச்ச உணர்வாக மட்டும் பார்க்க முடியாது. அவருடன் சேர்ந்து அவரின் சகோதரர் கோத்தபய இராஜபக்சே மேலான அச்சமும் உருவாகியிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். காரணம், இரணில் அரசில் அமைச்சராக இருந்த முன்னாள் இராணுவ தளபதி, போர் நடந்த போது சரண் அடைந்தவர்களை கொலை செய்தது, போரின்போது கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போனது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டது போன்ற குற்றசாட்டுக்களை கோத்தபய இராஜபக்சே மீது வைத்தவர். ஆனால், மஹிந்த இராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார் என்ற செய்தி வந்த அரை மணி நேரத்தில் மஹிந்த இராஜபக்சேவை குற்றம் சாட்டிய அதே ராணுவ தளபதி சந்திக்கிறார். அவருடன் கோத்தபய இராஜபக்சேவும் இருந்தார். இப்படி இருக்க மக்களுக்கு இருக்கும் அச்சம் என்பது இயல்பானதுதான்.
 

 

ss

 

மைத்திரிபால சிறிசேன மற்றும் இரணில் ஆகியோரது கூட்டு அரசில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருந்தது. மக்கள் மத்தியில் அச்ச உணர்வும் குறைந்திருந்தது. அதேசமயம் அரசியல் தீர்வு கிடைத்ததா என்றால் நிச்சயமாக இல்லை. இதற்கு முன் இராஜபக்சே ஆட்சி வரையில் வெள்ளை வேன் எனும் ஒரு கலாச்சாரம் இருந்தது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமெனாலும் கடத்தப்படலாம், கொலை செய்யப்படலாம். ஆனால் இந்த ஆட்சியில் அதுபோன்ற நிலை இல்லாமல் இருந்தது. மீண்டும் இராஜபக்சே பதவிக்கு வருவதால் அந்த அச்சம் மக்கள் மத்தியில் வருவது இயலபான விஷயம்தான். 

 


இரணில் விக்ரமசிங்கே, தான் பிரதமர் பதவியை விட்டுத்தரப்போவதில்லை என்கிறார், அதேசமயம் மஹிந்த இராஜபக்சே பிரதமர் பதவியை ஏற்றார் என்ற செய்தியும் வருகிறது. இது ஒரு குழப்பமான நிலைப்பாடாக இருக்கிறதே, இதை எப்படி பார்க்கிறீர்கள் ?
 

ஒருவர் பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தை நடத்திக்கொண்டு இருந்த பிரதமர். அன்று மாலை அலுவலகப் பணிகளை பார்த்தவர், அவருடன் இருந்த அதிகாரிகளுக்கும் அன்று மாலை வரை அவரைத்தான் பிரதமராக நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், மாலை வீட்டுக்குச் சென்று செய்தியைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, புதிதாக ஒரு பிரதமர் பதவி ஏற்றார் என்று. அவருடன் இருந்த அமைச்சர்கள், அவரின் அமைச்சரவை எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. அப்போது நாடளுமன்ற கூட்டத்தொடரும்கூட நடந்து கொண்டிருந்தது.
 

புதிய பிரதமர் பதவி ஏற்றார் எனற செய்திவந்து ஒரு மணி நேரம் கழித்துதான் அதிபரிடமிருந்து அறிக்கை ஒன்று வருகிறது, 'புதிய பிரதமர் பதவி ஏற்றார், பழைய பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்' என்று. ஆனால், அதில் எந்தக் காரணத்திற்காக, ஏன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை குறிப்பிடவில்லை. இது எல்லாவற்றிற்கும் மேல் அவரை பதவியில் இருந்து நீங்குமாரும்கூட எந்த அறிவிப்பும் அவருக்குத் தரப்படவில்லை.  

 


சில மாதங்களுக்குமுன் உள்ளாட்சித் தேர்தலில் இராஜபக்சே வெற்றி பெற்றார். அதன் தாக்கத்தினால் இது நடந்திருக்குமா ?
 

தமிழர்களின் பார்வையில்தான் இராஜபக்சே என்பவர் மிகவும் கொடூரமானவர். ஆனால் சிங்களர் பார்வையில் சிங்களப் போரை நடத்தி முடித்த, வெற்றிபெற்ற ஒரு நாயகனாகத்தான் பார்க்கப்படுகிறார். அதனால் அந்த நேரத்தில் அங்கு அசைக்கவே முடியாத நபராகத்தான் இராஜபக்சே இருந்தார். அதேசமயம் சிங்களத்தில் இருக்கும் சில அரசியல் பேசும் நபர்கள் இராஜபக்சேவின் தவறுகளை பற்றி பேசுவார்கள். ஆனால், இன்னமும் அங்கிருக்கும் பாமர மக்கள் இராஜபக்சேவை ஒரு வீரனாகவும் நாயகனாகவும்தான் பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் அவர், அவரின் பதவிக்காலம் 2016-ன் இறுதியில் முடியும் முன்பே, இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தேர்தலை அறிவிக்கிறார்.  அதே சமயம் அதிபராக ஒருவர் மூன்று முறை இருக்கலாம் என்று அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்கிறார். காரணம் அவர் ஏற்கனவே இரண்டு முறை அதிபராக பதவியில் இருந்துவிட்டார். மூன்றாவது முறையாகவும் அவர் பதவிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் செய்கிறார். அதனால்தான் முன்கூட்டியே தேர்தலையும் அறிவிக்கிறார். ஆனால் அப்போது இராஜபக்சேவின் கட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன, தான் பொது வேட்பாளராக நிற்பதாக அறிவித்தார். அதன் விளைவாக இராஜபக்சே அரசிற்கு எதிராக இருக்கும் தமிழ் தேசியக் கட்சிகள், மற்ற தமிழ் கட்சிகள் மற்றும் இராஜபக்சேவின் எதிர் கட்சியாக இருக்கும் இரணில் ஆகியோரெல்லாம் சிறிசேனாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதனைவைத்து ஆட்சியை பிடிக்கிறது மைத்திரிபால சிறிசேனாவின் அரசு.

 

இதற்குப் பின்னால் வேறு ஏதாவது வெளிப்புற காரணங்கள் இருக்கிறதா?
 

நிச்சயமாக, இதனை இயல்பாக நடந்தது என்று சொல்ல முடியாது. காரணம், இந்தப் பிராந்தியத்தை தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள சீனாவும், அமெரிக்காவும் முயல்கிறது. அதற்கு இலங்கையை தன் கைக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதேபோல் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு இந்தியாவுக்கும் இலங்கையை தன்னகத்தே வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதனால்தான் போர் நடக்கும்போது இரணுவ உதவி, ஆயுதம், ரேடார்கள் பயிற்சி போன்றவற்றை இந்தியா செய்தது. போர் நேரத்தில் அத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர், தீ-க்கு இரையாக்கப்பட்டனர். அதற்கு எதற்குமே இந்திய அரசாங்கம் செவி சாய்க்காமல், 2008 - 2009 போர் நேரத்தில் சிறிய கண்டனமும்கூடத் தெரிவிக்காமல், இந்தியா வெளிபடையாகவே ’இலங்கை எங்கள் நட்பு நாடுதான்’ என்று சொன்னது. அதற்கு காரணம் இலங்கை போர் தொடர்பாக கண்டனம் தெரிவித்தால் இலங்கைக்குள் சீனாவோ பாகிஸ்தானோ வந்துவிடும். அப்படி நடந்துவிடக்கூடாது என்றுதான் இந்திய அரசு இலங்கையை நட்பு நாடு என்று அறிவித்தது. ஆனால் நிஜத்தில் போர் முடிந்தவுடன் இராஜபக்சே இந்தியாவை முற்றிலுமாக புறம் தள்ளிவிட்டு சீனாவுடன் நெருங்கிவிட்டார். இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் செயற்கையாக ஒரு நகரத்தை உருவாக்குகிறார்கள், அதன் மொத்த பிராஜக்ட்டும் சீனாவிடம் செல்கிறது. அதேபோல் கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் ’ஷங்காய்’ எனும் ஹோட்டல் கட்டப்படுகிறது. அதுவும் முழுக்க சீனாவிடம் போகிறது.

 


இவையெல்லாம் நடப்பதன் பின்னணியில் மத ரீதியாக இலங்கையும் சீனாவும் ஒத்துப்போவதை காரணமாகப் பார்க்கலாமா ?
 


நீங்கள் பவுத்த மதத்தை குறிப்பிட்டு பேசுகிறீர்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இலங்கை பவுத்தம் முற்றிலும் வேறுபட்டது. இராஜபக்சே அதிபராக இருந்த போது திருப்பதி, குருவாயூர் போன்ற கோவில்களுக்கு வந்து சென்றார். இலங்கையில் கடந்த வருடம் நடந்த புத்த பூர்ணிமா விழாவிற்கு நரேந்திர மோடிதான் விருந்தாளி. அதேபோல் இங்கு மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் மைத்திரிபால சிறிசேனதான் விருந்தாளி. இரணில் விக்ரமசிங்கே தமிழ் நாட்டில் இருக்கும் திருநல்லாறு சனீஸ்வரன்  கோவிலுக்கு வந்து சனி மாற்றம் சரி இல்லை என்று சாமி கும்பிட்டுவிட்டு செல்கிறார். இராஜபக்சே ஆட்சி காலத்தில் ஆந்திராவில் புதிதாக புத்த விகாரம் ஒன்று கட்டப்பட்டது, அதற்காக இலங்கையில் இருந்து இரண்டு சிலைகள் கொண்டுவரப்பட்டு, தரப்பட்டது. இதுபோன்ற உறவில் இந்தியாவும் இலங்கையும் இருக்கிறது. ஆனால் நாம் இலங்கை அரசியலைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் அதனை தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.  இது முழுக்க முழுக்க இந்திய சீனா இடையேயான வெளியுறவு கொள்கையில் இருக்கும் பிரச்சனை. அதைவிட்டுவிட்டு புத்தன் என்பதால் சீனாவின் பக்கம் சாய்ந்தது, இந்து என்பதால் இந்தியா பக்கம் வரவில்லை என்று பேசிகொண்டிருக்கிறோம். ஆனால் அது அப்படி இல்லை என்பதற்கு சரியான சான்று இங்கு இருக்கிறது.


கொழும்பில் மிக உயரமான ஒரு டவரை தாமரை வடிவில் கட்டுகிறார்கள். தாமரை, இராஜபக்சே கட்சியின் சின்னம். அதனை கட்டியது யார் என்று பார்த்தால் சீனா. இது ஒரு உதாரணம்தான் இதுபோல் கொழும்பில் இன்று இருக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் போருக்கு பின்னாள் சீனா கட்டித்தந்தது. இது கூடப் பரவாயில்லை, கொழும்பு வீதிகளில் உள்ள பெயர் பலகைகளில் சீன எழுத்துக்கள் இருக்கிறது. 2000 கோடி ரூபாய் செலவில் ஒரு துறைமுகத்தை சீனா அரசு இலங்கையில் அமைக்கிறது. அடுத்தது அணுமின் நிலையம், என்று சீன அரசு இலங்கை முழுக்க இருக்கிறது. அதேபோல் முல்லிவாய்க்காலில் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லும் நந்திக் கடலில் மீன் பிடி ஆய்வு செய்யபோகிறோம், அதற்காக அதில் எங்களுக்கு இடம்கொடு என்று சீன அரசு கேட்கிறது. அன்மையில் இலங்கை காவல் துறையினர் சீன மொழி பயிற்சிக்காக உதவித்தொகையுடன் சீனா சென்று வந்தார்கள். இப்படி இலங்கையை, சீனா முழுக்க தன் கைக்குள் வைத்திருக்கிறது. 
 

Next Story

'ராஜபக்சே சகோதரர்களே காரணம்' - இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Rajapakse brothers are responsible'-Sri Lankan Supreme Court verdict

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

 

உலக அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக நாடுகள் ஒவ்வொன்றாக மீண்டு எழுந்து வந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இலங்கையில் மட்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களே போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவானது.

 

இது உலக அளவில் கவனம் பெறும் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக வெடித்தது. அமைச்சர்களின் வீடுகள், அதிகாரிகளின் வீடுகள் மக்களாலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறைகளும் வெடித்தது. அதனைத் தொடர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிகழ்வுகளும் நடந்திருந்தது.

 

இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உள்பட 13 பேருக்கு எதிராகத் தனியார் அமைப்பு ஒன்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவார்ட் உள்ளிட்டோரின் தவறான  நடவடிக்கைகள், அலட்சியம்தான் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

 

Next Story

இலங்கையில் துப்பாக்கிச் சூடு... தொடரும் பதற்றம்!

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

 Shooting in Sri Lanka ... Tension to continue!

 

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஏற்கனவே இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுப் பின்வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

அவரது ராஜினாமா கடிதம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே என்ன முடிவெடுப்பார் என்ற யூகங்கள் அங்கு கிளம்பியுள்ளது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை உருவாக்குவது தொடர்பான அம்சங்கள் இடம்பெற்ற நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் புதிய இடைக்கால அரசு நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் இலங்கை அரசிற்கு எதிராக போராடியவர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் குண்டர்களை வைத்து தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்  படுகாயமடைந்துள்ளனர். மஹிந்த ராஜபக்சே ராஜினாமாவைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பதால் தாக்குதல், துப்பாக்கிச் சூடு என கூடுதல் பதற்றம் கண்டுள்ளது இலங்கை.