Skip to main content

திரிபுரா தீர்ப்பு எப்படி இருக்கும்? சிவப்பைத் தொட முடியுமா காவி?

Published on 16/02/2018 | Edited on 17/02/2018

நாளை மறுநாள் திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கப் போகிறது. அந்த மாநிலத்தில் 2013 சட்டமன்றத் தேர்தலில் 1.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது.

 

பாஜக அணுகமுறை என்றால் அது நேர்மையாகவா இருக்கும்? வழக்கம்போல பொய்யும் புனைச்சுருட்டும்தான் அதன் மூலதனமாக இருக்கிறது. கட்சியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சியையும், திரிணாமுல் காங்கிரஸையும் விலைக்கு வாங்கி தனது கட்சியாக்க பார்க்கிறது.

 

சட்டமன்றத்தில் ஒரு இடம்கூட இல்லாத பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, எதிர்க்கட்சி வேஷத்தை போட்டிருக்கிறது. இதற்காக அந்தக் கட்சி கொஞ்சம்கூட வெட்கமோ கூச்சமோ படவேயில்லை.

 

Manik

 

மாநிலத்தில் மூன்றுமுறை முதல்வராக இருந்தாலும் கையில் வெறும் ஆயிரத்து 500 ரூபாயை மட்டுமே வைத்திருக்கிற எளிமையான மக்கள் முதல்வரை வீழ்த்த, பணத்தை வாரியிறைக்கிறது பாஜக.

 

திரிபுரா கணக்குப்படி, 2013 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 36 சதவீத வாக்குகளைப் பெற்று, 10 இடங்களை மட்டும் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 46 சதவீத வாக்குகளுடன் 50 இடங்களை கைப்பற்றியது. பாஜக 1.5 சதவீத வாக்குளைப் பெற்றிருந்தது.

 

இப்போது அந்தக் கட்சி மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பேன் என்று கூறுகிறது என்றால் எந்த நம்பிக்கையில் பேசுகிறது?

 

கார்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக பிரிவினை அமைப்பு ஒன்றை உருவாக்கி, பழங்குடியின மக்களை திசைதிருப்புகிறது. தேசபக்தி, தேசியவாதம் பேசும் பாஜக தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்பின் அரசியல் முகத்துடன் கூட்டணி வைத்திருக்கிறது.

 

பழங்குடி மக்களுக்கு பண ஆசை காட்டுகிறது. எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களிடம் படாடோபத்தை புகுத்தி படமெடுத்து ஆட நினைக்கிறது. ஆனால், இதையெல்லாம் தனது அமைதியான பிரச்சார யுத்தியால், மக்களுடனான நெருக்கத்தால் முறியடிக்க முடியும் என்று முதல்வர் மாணிக் சர்க்கார் நம்புகிறார்.

 

1.5 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கத் தேவையான 31 இடங்களை பாஜக பெற முடியுமென்றால், அந்த வாக்குகள் எங்கிருந்து வரும். காங்கிரஸிலிருந்தா? திரிணாமுல் காங்கிரஸிலிருந்தா என்பது தெரியவில்லை.

 

பக்கத்து மாநில ஆட்களைக் கூட்டிவந்து கூட்டம் காட்டும் பாஜக, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திரிபுராவில் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, ஒடுக்கப்பட்ட உரிமையிழந்த மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டி எழுப்பிய வரலாற்றை மாணிக் சர்க்கார் கூறுகிறார். பழங்குடியின பெண்களையும், ஆண்களையும் அவர் சக தோழர்களாக பாவித்து பிரச்சாரம் செய்கிறார். பாஜக என்பது ரத்தத்தை உறிஞ்சும் அடிப்படைவாதக் கொள்கையைக் கொண்ட கட்சி என்று கூறுகிறார். வசந்தகாலத்தில் வரும் அரிதான சில பறவைகளைப் போல இன்று வருவார்கள். பின்னர் அவர்களைத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி உங்களுக்கு மத்தியிலேயே இருக்கிற கட்சி என்று அவர் பேசுகிறார்.

 

நாள் ஒன்றுக்கு 5 கூட்டங்களில் பேசும் மாணிக் சர்க்கார் ஏற்கெனவே இருக்கிற வாக்கு வங்கியை தக்கவைத்தாலே, ஆட்சியையும் தக்கவைப்பார் என்பது உறுதி என்கிறார்கள்.