காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 16-ந் தேதி தனது தீர்ப்பை கூறியது. நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரி யில் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதில் 14.75 டி.எம்.சி.யை குறைத்து, கர்நாடகம் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. வழங்கு மாறு தனது தீர்ப்பில் கூறி உள்ளது. காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கு குறைக்கப்பட்டு இருப்பது, தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பற்றி ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக அரசு நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட 30 அரசியல் கட்சிகளுக்கும், 9 அரசியல் அமைப்புகளும், 14 விவசாய சங்கங்களும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டதாக அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி ,நக்கீரன் இணையதளத்திற்கு விரிவாக பேட்டி கொடுத்தார். அவை அப்படியே உங்கள் பார்வைக்கு...
காவிரி நதிநீர் உரிமைக்காக நேற்றைய தினம் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியின் தலைவர் ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், தமிழிசை சவுந்தரராஜன், சீமான், G.K வாசன், திருமாவளன், G.K மணி, தனியரசு, கருணாஸ், வேல்முருகன், பேராசிரியர் காதர் மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தோழர் பாலகிருஷ்ணன், தோழர் முத்தரசன் ஆகியரோடு நானும் கலந்து கொண்டேன்.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகவே இருந்தது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் மகிழ்ச்சி பெறக் கூடிய வகையில் நேற்றைய நிகழ்வு அமைந்தது என்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவது, முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்கள் இயக்கங்கள், உழவர் இயக்கங்கள் என்று பலதரப்பட்டவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சம்பரதாயத்திற்கு கூடி ஒரு மணி நேரத்தில் கூட்டத்தை முடித்துவிடாமல், மதிய உணவு இடைவேளைக்கான ஒரு மணி நேரத்தை உள்ளடக்கி 7 மணி நேரம், கூட்டம் நடைப்பெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை இந்தக் கூட்டம் நடைப்பெற்றதுதான் இதன் சிறப்பு. மற்றொரு சிறப்பு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தொடர்ந்து 7 மணி நேரம் இருந்து அனைவருடைய கருத்துக்களையும் உள்வாங்கியது. இது கருத்துரிமையை மதிக்கும் செயலாகவும், ஒரு ஜனநாயக பன்பாக இருந்ததற்காகவும் உண்மையிலேயே இந்த அரசை பாராட்ட வேண்டும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி இந்த பாராட்டை பெற்றிருக்கிறார் என்பது உண்மை.
இதையெல்லாவற்றையும்விட மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று தமிழ்நாட்டு மக்களிடம் இருந்தது. நம்முடைய தலைவர்களெல்லாம் கருத்து வேறுபாடுகளைத்தாண்டி கைக்குலுக்கி மகிழ மாட்டார்களா? என்ற ஏக்கம் இருந்தது. நேற்றைய தினம் அந்த ஏக்கம் தீர்த்துவிட்டதாக நான் கருதுகிறேன். ஏன் என்று சொன்னால், முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் அடிக்கடி சிரித்துப் பேசிக்கொண்டார்கள். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோடும், துணைத் தலைவர் துரைமுருகனோடும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொள்வதும், சிரித்துக்கொள்வதுமாக இந்த அவை இருந்தது.
அதேபோன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விவசாய போராளி ரெங்கநாதன் ஆகியோர் புள்ளி விவரங்களோடு பேசும்போது, முழு அவையும் குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்குமே அந்த அமைதியோடு கூர்ந்து கவனித்தது. இப்படி ஓவ்வொருவரின் கருத்துக்களையும் எல்லோரும் உற்றுநோக்கியது ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் 2 மணி முதல் 3 மணி வரை மதிய உணவு இடைவெளியின்போது பல்வேறு கட்சியினரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியினை பரிமாறி நலம் விசாரித்துக்கொண்டார்கள். வெவ்வேறு கொள்கை உடையவர்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டதை பார்க்க முடிந்தது. அதுவும் துரைமுருகன் அமைச்சர்கள் உட்பட அனைவருடனும் சென்று பேசி கலகலப்பாக இருந்தார். என்ன சைவ உணவு மட்டும்தானா? அசைவ உணவு இல்லையா என்று அவர் தமாஸாக கேட்க, காவிரிக்காக கூடிய கூட்டத்தில் அசைவ உணவு போட்டுவிட்டால், நீங்கள் அதையே விவாதமாக்கி விடுவீர்களே என அமைச்சர்கள் C.V. சண்முகமும், துரை கண்ணுவும் சிரித்துக்கொண்டே பதில் அளித்தனர். இதை கேட்டதும், அந்த இடத்தில் எல்லோருமே சிரித்தோம்.
சீமானுக்கு தமிழக அரசியல் தலைவர்களை ஒரு இடத்தில் சந்திப்பது இதுதான் முதல் முறை. அவரும், அவரால் விமர்சிக்கப்பட்டவர்களும் கை குலுக்கி கொண்டதையும், அன்பு பாராட்டியதையும் பார்க்க முடிந்தது. இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகளெல்லாம் அங்கு இருந்தது.
சாப்பிடும் இடத்தில் எல்லாக் கட்சித் தலைவர்களும் கைக்கொடுத்து மகிழ்ந்தது மட்டுமில்லை. காவிரி விஷயத்தில் எல்லோருமே ஒன்றாக இருக்கிறோம் என்பதை கர்நாடகாவுக்கு நாம் காட்டுவோம் என்ற உணர்வை எல்லோரும் பகிர்ந்துகொண்டார்கள். காவிரியைப் பற்றிய கவலை அங்கு வந்த தலைவர்கள் எல்லோரிடத்திலும் இருந்ததை சாப்பிடும் இடத்தில் பேசிக்கொண்டபோது காண முடிந்தது.
அதுமட்டுமில்லாமல் நிகழ்வு முழுவதுமே ஒவ்வொருவரும் காவிரியைப் பற்றி பதிவு செய்யும்போது, அவற்றையெல்லாம் முதல் அமைச்சர் கூர்ந்து கவனித்தார். ஒரு கட்டத்தில் பாஜக சார்பில் தமிழிசையும், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரும் பேசும்போது இடைமறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உங்க இரண்டு கட்சியும் இந்த விஷயத்தில் பிரச்சனை பண்ணாமல் இருந்திருந்தால் காவிரியிலேயே பிரச்சனை வந்திருக்காது என்று சிரித்தப்படியே சொல்ல, அவையில் இருந்த அனைவரும் சிரித்து ரசித்தனர்.
வைகோ மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பேசும்போது முதல் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவரும் கூர்ந்து கவனித்தனர். மொத்தத்தில் அந்த அவை மாச்சார்யம் இல்லாமலும், வெறுப்புணர்வு இல்லாமலும் இருந்தது.
இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தமிழிசையை பார்த்து கி.வீரமணி, "எனது அன்பு மகள் தமிழிசை" அவர்களும் நம் கருத்தோடு இருக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதனை தமிழிசை மகிழ்ச்சியோடு வரவேற்றார். இப்படி நேற்றைய நிகழ்வு மகிழ்ச்சிகரமாகயும், உணர்வுப்பூர்வமான நெருக்கத்தோடு இருந்தது.
நான் பேசும்போது, "இந்த நேரத்தில் நாம் காவிரிக்காக பல தியாகங்களையும், கடமைகளையும் செய்த தலைவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். 1986ல் இதனை சட்டப்போராட்டமாக மாற்றிய எம்.ஜி.ஆர். அவர்களையும், கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்த முன்னாள் பிரதமர் திரு. வி.பி.சிங். அவர்களையும், காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களையும், காவிரிக்காக தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று சொன்னதும் ஒட்டுமொத்த அவையும் திரும்பிப் பார்த்தது. கூட்டம் முடிந்து வெளியே செல்லும்போது கி.வீரமணி, "எல்லோரையும் அரவணைத்து ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட பேச்சாக இருந்தது" என்று கைக்கொடுத்து என்னை வாழ்த்தினார்.
ஒரு கட்டத்தில் விவாதம் ரொம்ப நேரம் போய்க்கொண்டிருந்தது. இதனிடையே எல்லோருக்கும் சாண்ட் விஜ், டீ, பிஸ்கட் கொடுத்தார்கள். அப்போது துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மைக்கை பிடித்து, "அவையில் பாதிப்பேருக்கு மேல் சர்க்கரை இருக்கு... ரொம்ப நேரம் பசியோடு இருக்கோம்... உங்களோட கருத்துக்களை சுருக்கமாக சொல்லுங்க" என தமாஷாக சொல்ல... எல்லோருமே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இனிப்பான இந்த நிகழ்ச்சியில் இனிப்புகளை பரிமாரியிருக்கிறார்கள் என்று சரத்குமார் சொன்ன போதும்..., காவிரி மேல் உள்ள அக்கறையில் யாரும் சர்க்கரையை நினைக்கவில்லை என்று நான் சொன்னபோதும் சிரித்தார்கள். இப்படி அனைத்தும் நல்லதொரு நிகழ்வாக அமைந்தது.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும், சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட முடிவு எடுக்க வேண்டும், உச்சநீதிமன்றம் ஓரவஞ்சனை செய்திருக்கிறது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்ததாக அமைந்தது.
இவ்வாறு அந்த நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட தமிமுன் அன்சாரியிடம் ஒரு கேள்வி முன் வைத்தோம்.
நீங்கள் சொன்னதைப்போலவே மற்ற தலைவர்களும் நல்லதொரு கூட்டமாக அமைந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழக அரசு சார்பில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் ஏற்பட போவது கிடையாது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே தானாக மத்திய அரசு நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருக்கிறாரே.. என்றோம்.
எச்.ராஜா இப்படி பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அன்பு சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்துக்கு எதிராக எச்.ராஜாவின் கருத்து இருக்கிறது. இதற்கு பாஜக தலைமைதான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.