பனியோ, புகையோ

காலையில் கண் விளித்து வழக்கம்போல ஆபிசிற்கு கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தால் எங்கும் பனி எதிலும் பனி. சாலை ஓரங்களில் பார்த்தால் எரிந்து ஓய்ந்து, புகைந்து கொண்டிருந்த நிலையில் கிடக்கும் பொருட்கள். சமூக வலைத்தளங்களில் எல்லாம் பனி மூட்டத்தை காட்டும் புகைப்படங்களும், வீடியோக்களும்தான். சாலையில் வண்டி ஓட்டிச்செல்வது மேகங்களுக்கு நடுவே செல்வதற்கு சமமாக இருந்தது. அப்படி ஒரு பனி. இதனால் பல இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இதற்கு பனி மட்டும் காரணமல்ல. "பழையன கழிதலும் புதியன புகுதலும் அதுதான் போகி" என்று வீட்டில் இருக்கின்ற பழசு பட்டதையெல்லாம் காலை நான்கு மணிக்கே எழுந்து எரித்துள்ளனர். போகிக்கு பழைய பொருட்களை எரித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது போல, இருக்கின்ற டயர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் என்று நமக்கும், இந்த பூமிக்கும் ஆகாத பொருட்களே எரிக்கப்பட்டிருக்கிறது. இந்த போகி ஸ்பெஷலால் 12 பிளைட்களை ஊருக்குள்ளேயே வரவிடவில்லை இந்த பனியும், புகையும் .

டெல்லியில்கூட கடந்த மாதத்தில் மூடு பனியாகவே இருந்தது. அது மூடு பனி இல்லை, காற்று மாசு அடைந்துவிட்டது என்றனர் ஆய்வாளர்கள். இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள்கூட அந்த மூடுபனியை காரணம்காட்டி மூச்சு திணறல், மூச்சு விடமுடியவில்லை என்று புகார் செய்தனர். இன்று சென்னையில் ஏற்பட்டிருக்கும் இந்த மூடுபனிகூட காற்று மாசு அடைந்ததால் ஏற்பட்டதானாம். காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவியை வைத்து பார்த்ததில் டெல்லியைவிட சென்னை மணலி அதிகமாக காற்று மாசு அடைந்திருக்கிறது. "பர்டிகுலேட் மேட்டர்" என்றால் கொஞ்சம் திடப்பொருளும், திரவப்பொருளும் காற்றுடன் கலப்பது. இந்த பர்டிகுலேட் மேட்டரின் மதிப்பு 2.5 ஆக இருக்கும்போது காற்றில் மாசு 60க்கு கீழாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் மணலியில் 834 அளவிலும், ஆலந்தூரில் 368 என்ற அளவிலும் இருக்கிறது. இதனால் காற்று மாசு அடைந்திருப்பதுடன் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் நிறைய பிரச்சனை ஏற்படும். புவி வெப்பமயம் ஆவதால் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளியை டெல்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை பிறப்பித்தனர். அந்த வெடிகளின் விற்பனையையே நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், இத்தனை நாள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நாமும் ஒருபுறம் என்றால், சுற்றுசூழல் மற்றோருபுறம். இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
-சந்தோஷ் குமார்