கொடநாடு கொலை வழக்கில் மேலதிக விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்கள், பல புதிய தகவல்களை தாமாக முன்வந்து சொல்கின்றனர். இதை எதிர்த்து ஆளுநரிடம் முறையிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்த மேலதிக விசாரணையை எதிர்த்து சட்டமன்றத்திலும் குரல் எழுப்பினார்.
இந்நிலையில் எடப்பாடி தொகுதியை உள்ளடக்கிய சேலம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் காணொளி பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "நான் எனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கொடநாடு கொலை வழக்கின் உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என தெரிவித்தேன். அந்த வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. விரைவில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்'' எனத் தெரிவித்தார். முதல்வருடைய பேச்சுக்கு ஒரு பின்னணி உள்ளது என்கிறார்கள் வழக்கை நன்கறிந்தவர்கள்.
கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம், இந்த வழக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு எதிரானது என்பதால் மிகக் கவனமாகத் தகவல்களை சேகரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சதீசன், தீபு உட்பட கேரள மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளிகள், எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுடன் ஒரு டீல் பேசியிருக்கிறார்கள். இந்த வழக்கை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்யவும், அதில் எடப்பாடிக்கு எந்த தொடர்பும் இல்லை என நிரூபிக்கவும் குற்றவாளிகளுக்கு பல லட்சங்கள் தர இளங்கோவன் முன்வந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், காக்கநாடு சுற்றுலாத்தலத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது என அந்த குற்றவாளிகள் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்கள். அந்த குற்றவாளிகளைக் கொத்தாக தூக்கிய கொடநாடு போலீஸ், விசாரணையில் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த திலீப் என்பவரை, தங்களது ஸ்டைலில் உரித்தெடுத்திருக்கின்றனர்.
திலீப் இதுவரை கொடநாடு குற்றவாளிகள் பட்டியலிலோ சாட்சிகள் பட்டியலிலோ இடம்பெற்றதில்லை. அவரிடம் நடத்திய விசாரணை, அந்த சந்திப்பில் இடம்பெற்ற குற்றவாளிகளிடம் நடைபெற்ற விசாரணையைவிட பயனுள்ளதாக இருந்திருக்கிறது. திலீப்பும் இன்னொரு ரியல் எஸ்டேட் புரோக்கரும், குற்றவாளிகள் இளங்கோவனைச் சந்திப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். அவர்களிடம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து தருமாறு இளங்கோவன் கேட்டுக் கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் தரப்பிலும் எடப்பாடியிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வரும் என ஆசை காட்டப்பட்டதால் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசப்பட்டபடி பணம் பரிமாறப்படாததால் குற்றவாளிகள் எடப்பாடிக்கு ஆதரவாக பேட்டியளிக்குமாறு இளங்கோவன் சொன்னதைச் செய்யவில்லை என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானை போலீசார் கையிலெடுத்திருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக கொடநாடு கொள்ளைச் சம்பவம் நடந்த எஸ்டேட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள்? ஜெயலலிதாவின் அறைக்கு எப்படிச் சென்றார்கள்? அங்கிருந்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு டிரைவர் கனகராஜ் எப்படி எஸ்கேப்பானார்? அவர் எங்கு சென்று கனகராஜின் சகோதரரான தனபாலைச் சந்தித்தார்? தனபாலிடமிருந்து புதிய செல்போன்களைப் பெற்றுக்கொண்டு, கொடநாடு சம்பவத்தின்போது உபயோகித்த செல்போனை கனகராஜ் தனபாலிடம் கொடுத்து எப்படி அழிக்கச் சொன்னார்? தனபாலைச் சந்தித்த பிறகு சேலம் மாவட்டம் ஆட்டையம்பட்டிக்கு சயானும் கனகராஜும் எப்படிச் சென்றார்கள்? அங்கிருந்து சயானை விட்டுப் பிரிந்த கனகராஜ், சேலம் இளங்கோவனுக்கு நெருக்கமானவரிடம் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை எங்கே ஒப்படைத்தார்? எனக் கொள்ளை நடந்த இடங்களையும் அதில் தொடர்புடைய பகுதிகளையும் காண்பிக்கச் சொல்லி சயானை கடந்த ஒரு வாரமாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அத்துடன் இதுவரை சாட்சியமாக சயான் சொன்னதைத் தவிர என்னவெல்லாம் நடந்தது? கனகராஜ் எதற்காக கொடநாட்டில் கொள்ளையடித்தார்? அங்கு கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் எவை? அவற்றை கனகராஜ் எப்படி எடப்பாடி வசம் ஒப்படைத்தார்? அவர் மரணமடையும்போது எந்த நிலையில் இருந்தார்? அப்பொழுது என்ன பேசினார்? என ஒவ்வொரு அணுவாகப் பிரித்து சயானிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசாரணை வேகத்தைப் பார்த்த சயான், நான்தான் இந்த வழக்கில் மறு விசாரணை கோரினேன். என்னை இப்படி கொடுமைப்படுத்துகிறீர்களே என குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷிடம் கதறியுள்ளார்.
இப்படி வழக்கு விசாரணை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நகர்ந்து கொண்டிருப்பது எடப்பாடியை சங்கடப் படுத்தியுள்ளது. எப்படியாவது இந்த விசாரணையின் தீவிரத்தைக் குறைக்க வேண்டுமென எடப்பாடி ஒரு புதிய ஆயுதத்தை எடுத்துள்ளார். அந்த ஆயுதம், சயானுடன் சேர்ந்து கொள்ளையடித்த வாளையார் மனோஜ் என்கிற குற்றவாளி. தற்பொழுது ஜாமீன் பெற்று ஊட்டியில் தங்கியிருக்கும் வாளையார் மனோஜ், ஊட்டி நீதிமன்றத்தில் "எனது ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடையுங்கள்'' என மனு போட்டுள்ளார். "எனக்கு ஊட்டியில் சாப்பாடு கிடைக்கவில்லை. தங்கவும் இடமில்லை. எனவே என்னை மீண்டும் ஜெயிலுக்கு அனுப்புங்கள்'' என வாளையார் மனோஜ் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த், வாளையார் மனோஜுக்கு தினமும் உணவளிக்க ஒரு தொண்டு நிறுவனத்தை ஏற்பாடு செய்வதாக நீதிமன்றத்திடம் கூறியுள்ளார். வாளையார் மனோஜை மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால் மேலதிக விசாரணையின் வேகம் தடைபடும். ஒரு குற்றவாளி சிறையில் இருந்தால் வழக்கு விசாரணையை வேகமாக முடிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என்பதால் வாளையார் மனோஜை மறுபடியும் சிறைக்குள் அனுப்ப எடப்பாடி டீம் திட்டமிடுகிறது என்கிறார்கள் போலீசார்.
இதற்கிடையே வழக்கை விசாரிக்கும் டீமிலும், ஓட்டையைப் போட்டுள்ளார் எடப்பாடி. சயானிடம் வாக்குமூலம் பெறும் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷின் மனைவியும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மனைவியும் ஒன்றாகப் படித்தவர்கள். சுரேஷின் மனைவி மூலம் வேலுமணி இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை அப்டேட்டாகத் தெரிந்துகொள்கிறார். அத்துடன் நீலகிரி மாவட்ட புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டராக கொடநாடு கொள்ளை நடந்தது முதல் பதவி வகிப்பவர் சுபாஷிணி. இவர் சமீபத்தில் ஒரு ரகசிய இடத்தில் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். அத்துடன் கொடநாடு கொலை வழக்கில் மேலதிக விசாரணை செய்யும் டீம் எடுக்கும் முடிவுகளை, கிடைக்கும் புதிய ஆதாரங்களை எடப்பாடி தரப்புக்கு நேரடியாகக் கொடுக்கிறார். செல்போனை ஆராய்ந்தாலே தெரிந்துவிடும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், கொடநாடு கொலை வழக்கை இரண்டாகப் பிரித்து, கனகராஜ் கொலை வழக்கு, கொடநாடு கொள்ளை வழக்கு என டீல் செய்ய ஐ.ஜி. சுதாகர் முடிவெடுத்துள்ளார். இப்படி தடைகள் தாண்டிய ஓட்டமாக இருக்கும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஜீவனை, உளவுத்துறை ஆய்வாளர் சுபாஷிணியும், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷும் அடிக்கடி ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசுகிறார்கள் என வெடிகுண்டு தகவலை போலீசார் சொல்கிறார்கள். இந்த இருவரையும் பதவி நீக்கம் செய்யாவிட்டால் கொடநாடு வழக்கில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும் என அடித்துச் சொல்கிறார்கள் நீலகிரி மாவட்ட தி.மு.க.வினரும், இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்து நடத்திவரும் தி.மு.க. வழக்கறிஞர்களும்.