Skip to main content

மழலைக் குரலும் இவரே... விரக குமரியும் இவரே...

Published on 23/04/2018 | Edited on 24/04/2018

மிமிக்கிரியை பாடலில் உபயோகித்து ‘குழந்தை முதல் குமரி  வரை’ என்று 60 ஆண்டுகளில் 48000 பாடல்கள், 17 மொழிகள், 4 தேசிய விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்று இந்திய சினிமாவின் இசை அரசிகளில் முதன்மையானவராகவும் தென்னிந்தியாவின் கவிக்குயிலாகவும் திகழ்பவர் எஸ்.ஜானகி அம்மா. இந்த இசைக்குயில் இப்பூவுலகுகில் மலர்ந்து இன்றோடு 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏப்ரல் 23 - எஸ்.ஜானகி அம்மா பிறந்த தினம் இன்று.
 

janaki birthday

 

1938-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் பிறந்த எஸ்.ஜானகி, தனது மூன்றாவது வயதிலேயே மேடை ஏறினார். இவரது திரைப்பயணம் 1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில் 'பெண் என் ஆசை பாழானது’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் ஆரம்பமானது. இவர் அறிமுகமான முதல் ஆண்டே தமிழ்,தெலுங்கு,மலையாளம் உட்பட  ஆறு மொழிகளில் நூறு பாடல்களுக்கும் மேல் பாடினார்.

 

இவரின் குரல் மக்களின் செவிகளிலும், மனதிலும் சென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது 1962-ஆம் ஆண்டு எஸ்.எம் சுப்பையா நாயுடுவின் இசையில் ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே தேவா' பாடலின் வாயிலாகத்தான். இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத பாடகியாக உருவெடுத்தார். பாடகியாக மட்டும் இருந்தவர் 1989-ஆம் ஆண்டு 'மௌனப் போராட்டம்' என்ற தெலுங்கு திரைப்படத்திற்கு இசையமைக்கவும் செய்தார். ஜானகி அம்மாவின் குரல் வளம் என்பது எந்தவொரு பாடகருக்கும் இனி அமைவது என்பது நிச்சியம் கடினமே. ‘மௌன கீதங்கள்’ திரைப்படத்தில்  'டாடி டாடி ஓ மை டாடி' என்று சிறுவன் குரலிலும், கிழவி குரலில்  'பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா' என்று குரலை மாற்றிப்பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். 

 

 

janaki birthday



ஜானகி அம்மாவின் குரலை சரியாக உபயோகித்தவர் இசைஞானி இளையராஜா என்றால் மிகையாகாது. பதினாறு வயதினிலே படத்தில் 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே', மௌன ராகத்தில் 'சின்ன சின்ன வண்ணக்குயில்', மூன்றாம் பிறையில் 'பொன்மேனி உருகுதே', தளபதியில் 'சின்னத்தாயவள்' என்று இவரது குரலை காதல், தனிமை, காமம், தாய்மை என்று அனைத்து நிலைக்கும் உபயோகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் இளையராஜா, ஜானகி, எஸ்.பி.பி ஆகியோரது கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜானகி எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கான உச்சரிப்போடு பாடும் திறன் கொண்டவர். பதினாறு வயதினிலே படத்தில் ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, தேவர் மகன் படத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்களுக்காக தமிழில் மட்டும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளப் பாடல்களுக்காக தலா ஒரு தேசிய விருதையும் பெற்றுள்ளார். கேரளா,தமிழ்நாடு,ஆந்திரா மற்றும் ஒடிசா என்று நான்கு மாநிலத்திடமும் சேர்த்து 32 அரசு விருதுகள் இவரை அவ்வப்போது கௌரவித்துக் கொண்டேயிருந்தன. தமிழக அரசு 1986ஆம் ஆண்டு  கலைமாமணி விருது வழங்கி இவரை பெருமைப்படுத்தியது.2009-ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் வழங்கியது.
 

​    ​janaki amma birthday


ஜானகி அம்மாவின் இந்த அறுபது ஆண்டு இசைப் பயணத்தில் எம்.எஸ்.வி,இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என்று நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். இவரின் இசைப்பயணத்தை போற்றும் வகையில் இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான 'பத்ம விபூஷன்' விருது 2013-ஆம் ஆண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டது. “இந்த விருது எனக்கு காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது" என்று தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிப்படுவதை மத்திய அரசுக்கு உணர்த்தி விருதை புறக்கணித்த துணிச்சல்மிக்க ஜானகி, எத்தனை விருதுகள் என்னை கௌரவித்தாலும் "என் ரசிகர்கள்தான் என் விருதுகள்" என்று கூறி ஒருமுறை நெழிந்தார். 

சுமார் பத்தாண்டுகள் பாடாமல் இருந்த ஜானகி, 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தின் 'அம்மா அம்மா' என்ற சோக பாடலை பாடி அனைவரையும் அழவைத்தார். ஆண்டுகள் கழித்து பாடினாலும், பாடலின் உணர்வை தன் குரல் மூலம் ரசிகர்களுக்குள் எளிதாக கடத்தும் அபூர்வ திறன் மட்டும் அவருக்கு அப்படியே இருந்தது. இறுதியாக 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான '10 கல்பநகள்' என்ற படத்தில் 'அம்மபூவினு' என்ற பாடலுடன் ஓய்வு பெற்றார். இசைத்துறையை விட்டு விலகினாலும், தாலாட்டு முதல் தனிமை வரை ஜானகி அம்மாவின் குரல் தான் ஆதரவாகவும்,அரவணைப்பாகவும் முக்காலமும் இருக்கும் என்பதை எவறொருவராலும் மறுக்கவே முடியாது.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

பண்ணைபுரம் கொண்டுசெல்லப்படும் பவதாரிணியின் உடல்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
Bhavatharini's body being taken to pannaipuram

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் பவதாரணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது இன்று தேனி எடுத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனியில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் அவரது தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் நினைவிடத்திற்கு இடையே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பண்ணைபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.