பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து ஆறு மாதம் நீக்கி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எப்போதும் பெண்களை மதிக்கும் கட்சி என்றும், அவர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, " இவர் என்ன குரல் கொடுக்கப் போகிறார். தப்பு செஞ்சவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்தவர்கள் பாராட்டுகிறார்கள் என்று வேறு சொல்கிறீர்கள், யார் எதற்காகப் பாராட்டுகிறார்கள்.
சரியான முடிவை அண்ணாமலை என்ன எடுத்துவிட்டார், கே.டி.ராகவனை நாளைக்குக் கட்சியில் சேர்த்துப்பாரா அண்ணாமலை? அவருக்கும் இன்னும் ஆறு மாசம் முடியவில்லையா? அண்ணாமலைக்கு தன்பயம் அதிகம் வந்துவிட்டது. தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் இயங்குவதைக் கூட அவர் விரும்பவில்லை. பாஜகவில் வேறு யாரும் தன்னைத் தாண்டி வளர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அவரை வாட்டி வதைக்கின்றது. காயத்ரி, சூர்யா ஆகிய இருவரும் முருகனுடைய ஆதரவாளர். முருகனுக்கு பாஜக அலுவலகத்தில் தனி அறை போட்டாச்சு. அண்ணாமலைக்கு எப்போது ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது.
இந்தப் பேட்டியை எடுத்துக்கொண்டு நீங்கள் வீடு போய்ச் சேருவதற்குள் அண்ணாமலையில் பதவியைப் பறித்தால் கூட ஆச்சரியமில்லை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகத் தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற தகவல் பாஜகவில் இருந்தே கசிந்துகொண்டு இருக்கிறது. அண்ணாமலை குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராகச் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள், அப்படி என்றால் அவர் மோகன் பகவத்துக்கு எதிராகத்தான் செயல்பட வேண்டும், கேள்வி கேட்க வேண்டும். அதை எல்லாம் அவர் ஒரு போதும் செய்யமாட்டார். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக அவருக்கு வேண்டாத நபர்களுக்கு எதிராக சில வாய்ப்புக்கள் அமையும் போது அவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கட்சிகளில் இது ஒன்றும் புதிதல்ல. பல மாநில தலைவர்களைத் தேசிய கட்சிகள் பார்த்துள்ளது. எனவே இந்தப் பதவி என்பது அவருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எனவே அதை வைத்து சில அரசியல் ஆட்டங்களை ஆடலாம் என்று கூட அவர் முயற்சி எடுக்கலாம். ஆனால் அவருக்கே எதிராகக் கள சூழ்நிலை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே அவரின் அரசியல் விளையாட்டுக்கள் நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. விரைவில் அவர் பதவிப் பறிக்கப்படக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அவரின் இந்தப் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை" என்றார்.