எட்டு மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வால் மறைந்த பள்ளி மாணவி அனிதாவுக்கு திரைத்துறையினர் நடத்திய இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு இயக்குனர்கள் பலர் அவர்களது கருத்துகளை பேசினர். அந்தக் கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தும், இயக்குனர் அமீரும் கலந்துகொண்டனர். அமீர், தனது கருத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போது, இயக்குனர் ரஞ்சித்துக்கு அவரது கருத்துக்களில் முரண் ஏற்பட்டது. அமீர் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறி மைக்கைப் பிடித்து இவர் பேசினார். அப்போது இயக்குனர் ராமும் வந்து ரஞ்சித்துக்கு ஆதரவாகப் பேசி சமாதானம் செய்தார். மேலும் ரஞ்சித் "தமிழர்கள் சாதியால் பிரிவுபட்டு இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றார். அமீரும் அது ஒத்துக்கொள்ளக் கூடிய ஒன்றுதான் என்றார். இவர்கள் இருவரின் பேச்சும் அப்போது அப்போது விவாதிக்கப்பட்டது. சீமான் ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதற்கு பின்னர் ரஞ்சித்துக்கும் அமீருக்கும் கருத்து வேறுபாடு என்பது போன்ற தோற்றம் நிலவியது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இவர்கள் இருவரும் ஒன்றாக கச்சநத்தம் கொலைக்கு எதிரான கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டனர். முதலில் இயக்குனர் ரஞ்சித், 'சாதி என்பது நம்மை எப்படி ஆள்கிறது, அது கிராமங்களில் வேறாக ஊன்றி நிற்கிறது' என்பதைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு, 'அயோத்திதாச பண்டிதரே தமிழனுக்கு சாதி இல்லை, அதை முதலில் தூக்கி எறிகிறவன்தான் தமிழன் என்கிறார்' என்று பேசினார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் பேசுகையில், "நான் ஒரு இசுலாமியன், எனக்கு இந்த சாதி சூழலே தெரியாது. நான் வளர்க்கப்பட்டதே அதெல்லாம் தெரியாமல்தான்" என்று கூறினார். பின்னர், எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மேடையில் நடந்த கருத்து முரணை இன்னொரு மேடையில்தான் சரி செய்யவேண்டும் என்று இயக்குனர் ரஞ்சித்தை மேடைக்கு அழைத்தார்.
ரஞ்சித்தை அழைப்பதற்கு முன் இயக்குனர் அமீர் பேசும்போது எல்லோரும் அவரவர்களின் சாதி சான்றிதழை கிழித்து எறியத் தயாரா என்று கேட்டிருந்தார். அதைக் குறிப்பிட்ட ரஞ்சித், "நீங்கள் சாதி சான்றிதழைக் கிழித்து வா என்று சொல்கிறீர்கள், அதில் எத்தனை பேரின் உரிமை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாதா? அது ஒன்றும் சலுகை அல்ல, பல போராட்டங்கள், இழப்புகளுக்குப் பிறகு பெற்றிருக்கும் உரிமை" என்று கூறினார். உடனே அமீர், "இறைவன் சத்தியமாக நான் இடஒதுக்கீட்டை நினைவில் வைத்துக்கொண்டு பேசவில்லை" என்று கூறினார். அதற்கு ரஞ்சித், "இப்படி இங்கு இருக்கும் சாதி நிலையை, வேறுபாட்டைப் பற்றி முழுமையாகத் தெரியாமல், உணராமல் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் உங்கள் மேல் எனக்குக் கோபமில்லை. சித்தாந்தம்தான் எதிரி, யாரும் யாருக்கும் எதிரியில்லை" என்று கூறிவிட்டு "விவாதங்கள் தொடரும், அமீர் அண்ணனுக்கு நன்றி" என்று மேடையை விட்டு இறங்கினார். அமீர், "நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னால் சாதியின் வலியை முழுமையாக உணரவே முடியாது. நீங்கள் அதற்கான வழியைச் சொன்னால், நாங்கள் முழுமையாக உங்களுடன் நிற்போம்" என்று பேச்சை முடித்தார்.
இந்தப் பேச்சைப் பார்த்தவர்களுக்கு மீண்டும் இருவருக்குமிடையே தொடர்ந்து கருத்து முரண் இருப்பது போலத் தோன்றியது. அமீர், தனது பேச்சில் கடைசி வரை விளக்கம் அளித்தார். இதற்கு முன்னதாக 'விடுதலை சிறுத்தைகள்' வன்னியரசு பேசும்பொழுது அமீர், தன் படத்திற்கு வைத்திருக்கும் 'சந்தனத்தேவன்' என்ற பெயரை மாற்ற வேண்டுமென கூறினார்.