“நம்ம உடம்புதான் நமக்கிருக்கிற ஒரே ஆயுதம். இதை இந்த ஒலகத்துக்கே தெரியப்படுத்துவோம். கூட்டுங்கடா மக்கள!”
“நெலம் ஒனக்கு அதிகாரம். நெலம் எங்களுக்கு வாழ்க்கை”
காலா படத்தில் தெறிக்கிற இந்த வசனங்களை எவ்வளவு உணர்ச்சிபூர்வமா வெளிப்படுத்துறாரோ, அந்த அளவுக்கு நிஜத்தில் காமெடியாக்கிவிட்டார் ரஜினி.
இவ்வளவு இளம்வயதில் இயக்குனர் ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து இரண்டு வாய்ப்புகளை ரஜினி வழங்கியபோதே பலரும் பொறாமையில் வெந்து தணிந்தனர். ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ரஜினியின் குரலை மாற்றி ரஜினிக்கே புதிய உத்வேகத்தை கொடுத்தது கபாலி. அதையடுத்து காலாவும் படு உக்கிரமான காட்சி அமைப்புகளோடு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
லைக்கா நிறுவனத்தின் சார்பில் சில நாட்களில் வெளியாக இருக்கிற இந்தப் படத்தின் காட்சிகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் ரஜினியின் நடவடிக்கை அமைந்தது ஏன்? என்ற கேள்வி சினிமாத் துறையினர் மத்தியில் மட்டுமல்ல, அரசியலிலும் பரவலாக எழுந்துள்ளது.
போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகும், தொழில் வளர்ச்சி இருக்காது, வேலைவாய்ப்பு இருக்காது என்றும் மக்கள் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்றும் ரஜினி கூறிய கருத்துகள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.
மக்களுடைய வாழ்க்கைக்கும் உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத்தான் மக்கள் போராடினார்கள். விவசாய நிலங்களையும் நிலத்தடி நீரையும் பாதிக்கும் மீத்தேன் வாயு, ஹைட்ரோ கார்பன் வாயு ஆகிய திட்டங்களுக்கு எதிராகத்தான் மக்கள் போராடி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை உலகளாவிய செல்வாக்குப்பெற்ற ஒரு தனியார் முதலாளிக்கு சொந்தமானது. அதுபோலவே, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்களை எடுக்க அனுமதி பெற்றிருப்பவர்களும் தனியார் முதலாளிகள்தான். ஸ்டெர்லைட் முதலாளியும், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க அனுமதி பெற்றிருக்கும் முதலாளியும் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்கள். இந்தத் திட்டங்களால் பயனடையப் போகிறவர்கள் அவர்கள்தான்.
இதை எதிர்த்து போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று சொல்லும் ரஜினிகாந்த், போலீஸாரை போராட்டக்காரர்கள் அடித்தார்கள் என்கிறார். சீருடையுடன் இருக்கும் போலீஸாரை அடித்ததால்தான் கலவரம் வந்தது என்கிறார். சமூகவிரோதிகள்தான் போலீஸாரை அடித்தார்கள் என்கிறார்.
போலீஸாருக்கு ஆதரவாக பேசும் ரஜினியின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது என்பதுடன், போலீஸ் ராஜ்ஜியத்துக்கு இவர் ஆதரவானவர் என்பதை வெளிப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்ற ரஜினி, சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தனது மன்ற நிர்வாகிகள் சுமார் ஆயிரம்பேரை மருத்துவமனை முன் கூடும்படி செய்து கொண்டாட்ட மனப்பான்மையை ஏற்படுத்தியிருக்கிறார். சிரித்தபடி கையாட்டிக்கொண்டே மருத்துவமனை முன் இறங்கி பாதுகாப்புடன் சென்றுள்ளார்.
ஆனால், அங்கே எல்லோரும் தன்னை வணங்கி வரவேற்பார்கள் என்று நினைத்திருக்கிறார். அந்த நினைப்புக்கு மாறாக, அவரிடம் ஒரு இளைஞர் கேள்வி எழுப்பியதால் வெகுண்டு மருத்துவமனை முன்பே பேட்டி அளித்திருக்கிறார். இதெல்லாம் ரஜினியின் மறுபக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது.
அதேசமயம், மத்திய பாஜக அரசுக்கும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கும் சாதகமான கருத்தை வெளிப்படுத்தி தன்னைச்சுற்றி ஒரு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், மருத்துவமனையில் அந்த இளைஞர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை, ஆறுதலான பதிலை அளிக்க முடியாத தனது தோல்வியை திசைதிருப்பவே இந்த பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அரசியலை அறிந்தவர்களுக்கு தெரியும்.
தமிழகத்தில் மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்திவிட்டு, போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திவிட்டு, போராடிய மக்களை குறிபார்த்து சுட்டுக்கொன்ற அரசப்பயங்கரவாதத்தை நியாயப்படுத்திவிட்டு, சில நாட்களில் வெளியாகும் காலா திரைப்படத்தில் மக்களைக் கூட்டியும் தனியாளாகவும் போராடப் போகும் ரஜினியை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள் அனல்பறக்கின்றன.
மக்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் கார்பரேட் முதலாளிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கும் திட்டங்களை எதிர்த்து போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று கூறும் ரஜினியிடம் தென்மாவட்ட மக்கள் சார்பில் சில கேள்விகளை முன்வைப்போம்.
“ரஜினி அவர்களே, தென்மாவட்டங்களை வளமாக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று கூறப்படும், சேது சமுத்திரத் திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுகவும் இணைந்து செயல்படுத்தியது உங்களுக்குத் தெரியுமா? அந்தத் திட்டம் நிறைவேறினால் சிங்கப்பூர் துறைமுகமும், கொழும்புத் துறைமுகமும் பாதிக்கப்படும் என்கிற நிலை இருந்தது தெரியுமா? தென் மாவட்ட மக்களுக்கு மிக்பபெரிய வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரியுமா? அந்த திட்டத்தை கடலுக்கடியில் இருக்கும் வெறும் சுண்ணாம்புப் பாறையை ராமர் பாலம் என்று பெயர்சூட்டி, அதை சேதப்படுத்தக்கூடாது என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்து தடுத்து குட்டிச்சுவராக்கியது யார் என்பது தெரியுமா? அப்போதெல்லாம் எங்கே போயிருந்தீர்கள் ரஜினி அவர்களே…?”
ரஜினி தனது அரசியல் வாழ்க்கையையும், சினிமா வாழ்க்கையையும் ஒருசேர தொலைக்கப் போகிறாரா? தமிழக மக்களின் எண்ணத்தை புரிந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போகிறாரா?
வரும் நாட்களில் ரஜினியின் நடவடிக்கைகள் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என்று எதிர்பார்க்கலாம்.