எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பன்னீர் செல்வம் ஆதரவாளர் கண்ணன்ஜி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு " எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு மாதங்கள் நிறைவடைந்து கடந்த 11ம் தேதியே அவரின் பதவி காலாவதியாகிவிட்டது.
அதையும் தாண்டி அவர் ஏற்கனவே இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டதாகத் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆகையால் அவர் இந்த இரண்டு பதவிகளையும் தற்போது இழந்துள்ளார். இவர் எங்கே மெகா கூட்டணியை அமைப்பார் என்று தெரியவில்லை. வேண்டுமானால் இரண்டு மணிகளின் உதவியுடன் ஊழல் கூட்டணி வேண்டுமானால் அவரால் அமைக்க முடியும். அதையும் தாண்டி இவரால் எதையும் செய்ய முடியாது.
இவர் எங்கே கட்சியில் முன்னேறினார். பெட்டி பெட்டியாக அடித்து முன்னேறினார் என்று ஊருக்கே தெரியும். மத்திய மாநில அரசுகள் அவர் எவ்வளவு அடித்துள்ளார் என்பதைக் குறித்துக்கொண்டே வருகிறார்கள். இன்னும் ஒரு சில மாதங்களில் எடப்பாடிக்குச் சிறையா? அல்லது தனி அறையா என்பது முடிவாயிருக்கும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆகையால் அவர் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக நாடாளுமன்ற கூட்டணி தொடர்பான பேச்சு எழுகின்றபோது அண்ணன் எடப்பாடி பழனிசாமி வெளியில் இருக்கமாட்டார். இன்னும் சொல்லப்போனால் அதிமுகவில் கூட அவர் இருக்கமாட்டார். விஷம் பாலில் விழுந்தாலும், பாலில் விஷம் விழுந்தால் உயிருக்கு ஆபத்து. அதைப்போல எடப்பாடி விஷம் போல, அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் ஒருங்கிணைப்பாளருக்கு இல்லை. பழனிசாமி நடத்துவது ஒரு கம்பெனி; அதிமுக இல்லை. அதனால் எடப்பாடி அரசியலுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்துவிட்டது என்பது உறுதி. அது விரைவில் நடக்கப்போகிறது. அப்போது அவர் நிச்சயம் சிறையிலிருந்து பார்ப்பார் என்பது மட்டும் உறுதி.
எடப்பாடிக்கு அதிமுகவின் கொள்கையாவது தெரியுமா என்றால் தெரியாது. புரட்சித் தலைவர் அண்ணாயிசம்தான் நம்முடைய கொள்கை என்று கூறினார். ஆனால் இன்றைக்கு எடப்பாடியின் கொள்கை என்னவாக இருக்கிறது. கொள்ளை அடிப்பதை எல்லாம் கொள்கையாக வைத்துள்ளார். இவர் அதிமுகவை வெற்றிபெற வைக்கப்போகிறாரா? அவரே இன்னொரு முறை தேர்தலில் நின்றால் வெற்றிபெற முடியாது என்பதுதான் நிஜம். ஆகையால் எடப்பாடியின் பொய் பித்தலாட்டம் சில மாதங்கள் கூட எடுபடாது.
இவர் வெற்றுப் பேச்சை நம்பி இவருடன் இருப்பவர்கள் கூட இவரை விட்டு சீக்கிரமாய் வெளியேறி விடுவார்கள். தனிமரமாகத்தான் இவர் இருக்கப்போகிறார். எனவே இவரை யாரும் சீண்டப்போவதில்லை. நம்பிக்கை துரோகம் செய்த அவரை யாரும் மறக்கவும் மாட்டார்கள். நமக்கும் இதேபோல் செய்துவிட வாய்ப்பு இருப்பதாகவே அனைவரும் நினைப்பார்கள். எனவே எடப்பாடியின் மெகா கூட்டணி என்பதெல்லாம் குழந்தைகள் கூடி கோபுரம் கட்டுவதைப் போலத்தான். கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை" என்றார்.