Skip to main content

தியேட்டரை திறக்கணும்னா மினிஸ்டரை கவனிங்க... அ.தி.மு.க. அமைச்சருக்குத் தொடர்பா? அதிர வைத்த ஆடியோ தகவல்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

theatre


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், மிகப்பெரிய மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் அதிலுள்ள தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கனவு தொழிற்சாலையான திரைத்துறை மிகப்பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ள தொழில். பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டில் உள்ளவர்கள் என பல்வேறு தரப்பினருடைய பணமும் இதில் புழங்கும்.
 


தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்பதால், "பொன்மகள் வந்தாள்' ஓ.டி.டி. தளத்தில் ரிலீசானது. இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனால்தான் அதிக வசூலைப் பார்க்க முடியும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லி வருகின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அமைச்சர், அதிகாரிகளுக்கு ரூ. 5 கோடி லஞ்சமாகக் கேட்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சிங்காரவேலன், சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் அலுவலகத்தில் கொடுத்த புகார் திரையுலகினர் உள்பட பலரையும் 'ஷாக்' ஆக வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஒரு திரையரங்கத்தின் உரிமையாளர், அவர் சார்ந்துள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கான வாட்ஸப் குரூப்பில் பகிர்ந்து கொண்ட ஒரு ஆடியோ செய்தி எங்களுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரித்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தி, ஐந்து அம்ச கோரிக்கைகளைத் தீர்மானமாக இயற்றி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் அணுகி தங்களது கோரிக்கைகளின் அடிப்படையில் அரசாணை பிறப்பித்துத் தருமாறு கேட்டதாகவும், அதற்கு அரசு தரப்பில் ரூ.5 கோடி லஞ்சமாக கேட்கப்பட்டதாகவும், இதற்காக அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களிடமும் பணம் வசூல் செய்ததாகவும் தெரியவருகிறது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்குத் தர வேண்டும் என்று கூறி திரையரங்க சங்க நிர்வாகிகள் வசூல் வேட்டையை நடத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது அந்த மனு.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதத்துடன் இணைக்கப்பட்ட ஆடியோவும் வைரலாகத் தொடங்கியுள்ளன. அதில் உள்ள சங்கதிகள் அதிர வைக்கின்றன.
 

 


''டிக்கெட் ரேட்டை பொறுத்த வரையில் அரசே ஏற்றிக் கொடுத்து விட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். எல்லாவற்றையும் கிளீயர் பண்றத்துக்கு மந்திரி 5 கோடி பணம் கேட்கிறாருன்னு சொல்லி பேசி தமிழ்நாடு பூரா வசூல் பண்ணாங்க. எவ்வளவு வசூல் பண்ணாங்க. எவ்வளவு மந்திரிகிட்ட கொடுத்தாங்க. மந்திரிகிட்ட கொடுத்ததுல எந்தக் கோரிக்கையும் ஏற்கவில்லை. மெயின்டனன்ஸ் சார்ஜ் மட்டும் ஏ/சி தியேட்டருக்கு ஒரு ரூபாய் இருந்ததை 4 ரூபாயா ஆக்குனாரு. ஏ/சி இல்லாத தியேட்டருக்கு 50 பைசா இருந்ததை 2 ரூபாயா ஆக்குனாரு. இதுதான் நடந்தது. மீதி எதையுமே காதுல மந்திரி எடுத்துக்கல. எவ்வளவு தமிழ்நாட்டில் வசூல் பண்ணாங்க. எவ்வளவு கொடுத்தாங்க. அதுதான் இன்னைக்கு உள்ள கேள்வி. மீதிப் பணம் யாருக்கிட்ட இருக்கு? எவ்வளவு இருக்கு?

இப்ப உள்ள சங்க நிர்வாகிகள் நீடிக்கிற வரைக்கும் மிடில் கிளாஸ் தியேட்டர் ஓனர்ஸ் வாழ முடியாது. மேக்சிமம் தியேட்டர்களை வைத்திருப்பதாலும் அவங்க பகுதி மந்திரிக்கு பினாமின்னு சொல்றதாலும் அவர் செல்வாக்கா இருக்கிறதுக்கு நம்மள ஊறுகாயா பயன்படுத்துறாரு.

மார்ச் 17இல் இருந்து 3 மாதமாக தியேட்டரை மூடி வைச்சிருக்கோம். தியேட்டர் பிரச்சனை நிறைய இருக்கிறது. அதற்காக ஒரு மனு கொடுத்திருக்கலாம். அரசு செய்யுது, செய்யல அது அடுத்த பிரச்சனை. தலைவரா இருந்து என்ன பயன்? 100 தியேட்டரில் 90 தியேட்டர்கள் லீஸ் பார்ட்டித் தான் நடத்துறாங்க. அவரும் லீசுக்கு நடத்துறாரு. மிடில் கிளாஸ் தியேட்டர் நடத்த முடியல. சம்பளம் போட முடியல. மந்திரி 5 கோடி கேட்குறாருன்னு வசூல் பண்ணியது எங்கே போனது. அதுக்கு முதல்ல விளக்கம் சொல்ல சொல்லுங்க.

தமிழ்நாடு கவர்மெண்ட்டே நாங்கதான். கொங்கு மண்டல மந்திரி நாங்க எது சொன்னாலும் கேட்பாரு. துறை மந்திரி என்ன சொன்னாலும் கேட்பாரு. நாங்க சொன்னா மந்திரிங்க எல்லாரும் கேட்பாங்கன்னு சொல்றார்ல. தமிழ்நாட்டுல தியேட்டர் திறப்பதெல்லாம் மத்திய அரசு முடிவு பண்றது. இவர் செய்த தவறை பத்தி சென்ட்ரல் கவர்மெண்ட் ஹோம் செகரட்டரியிடம் மனு கொடுப்போம். அதுக்கான ஏற்பாட்டைப் பண்ணுங்க. கரெக்டா இருக்கும்'' என முடிகிறது அந்த ஆடியோ.
 

http://onelink.to/nknapp


இந்த ஆடியோவில் பேசப்பட்டிருக்கும் சங்கதிகள் உண்மையா? நோய்த் தொற்று நேரத்திலும் தியேட்டர் திறப்பைக் காரணம் காட்டி வசூலும் கல்லா கட்டுதலும் நடக்கிறதா? லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை தொடங்கி நேர்மையாகத் தொடர்ந்தால், வெள்ளித்திரையில் பளிச்செனத் தெரியும் படம் போல எல்லாமும் தெரிந்துவிடும்.

- வேல்.