Skip to main content

பெரியார் மறைந்தபோது நேர்ந்த சட்ட சிக்கல்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

இன்று மாலை காலமான திமுக தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாவின் நினைவிடம் அருகே இடம் வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். ஆனால், அங்கு இடம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், சில வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு சர்தார் படேல் சாலையில் காமராஜர் நினைவகம் அருகே இடம் ஒதுக்கப்படுவதாகவும் அரசு அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

periyar kalaignar



1973ஆம் ஆண்டு, பெரியார் வயது மூப்பாலும் நோயினாலும் உயிரிழந்த பொழுது, அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர், பெரியாருக்கு அரசு மரியாதை செய்ய விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார். அந்த சமயத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம், "இதற்கு சட்டத்தில் இடமில்லை" என்றார். "ஏன் இடமில்லை?" என்று கேட்டார் கலைஞர். "பெரியார் எந்த அரசு பதவியும் வகிக்கவில்லை. அதனால் அவருக்கு அரசு மரியாதை கொடுக்க முடியாது என்றார். கலைஞருக்குக் கோபம் வந்தது. "மகாத்மா காந்தி மரணமடைந்த போது குண்டு முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டதே... காந்தி எந்தப் பதவியில் இருந்தார்?" என்று கேட்டார். சபாநாயகம், பதில் சொல்ல திணறினார். பின், "அவர் ஃபாதர் ஆஃப் அவர் நேஷன் (Father of our nation)" என்றார். சற்றும் யோசிக்காத கலைஞர், "அப்படியென்றால் பெரியார் ஃபாதர் ஆஃப் தமிழ்நாடு... அவருக்கு அரசு மரியாதை தரப்பட வேண்டும்" என்றார்.

 

periyar death



'இதனால் பல பிரச்சனைகள் வரும், மத்திய அரசு ஆட்சேபனை தெரிவிக்கும் என்று விளக்கமளித்தார் தலைமை செயலாளர். எதற்காகவும் முடிவை மாற்ற தயாராக இல்லாத கலைஞர், "இதனால் திமுக அரசு கலைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியே" என்றார். பெரியாரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது. காமராஜர், எம்.ஜி.ஆர் என அப்போதைய அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று மும்முறை குண்டு முழங்கி முழு அரசு மரியாதையுடன் பெரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அரசிதழிலும் பெரியாரின் மறைவு குறித்த துக்க செய்தி வெளியிடப்பட்டது.