புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார்.
புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்களின் எண்ணை உயர உள்ளதால் புதிய நாடாளுமன்றம் அதற்கேற்ப இருக்கைகள் அதிகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்கிறாரே?
“இந்திய சுதந்திரத்துக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு துணையாகவும் கடைசி கால கட்டத்தை கழித்த சாவர்க்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகள் சிறையிலேயே தங்கள் வாழ்நாட்களை கழித்த நேரு போன்றோர் எத்தனையோ தலைவர்களை ஒதுக்கி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக தேடப்பட்ட சாவர்க்கர் படத்தை வணங்கி இந்த பாராளுமன்றத்தை திறந்து வைத்துள்ளார்கள். இது ஜனநாயக படுகொலையாகவும் இந்திய இறையாண்மையை தீங்கு விளைவிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
சீனாவை விட 135 கோடிக்கு மேல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது இந்தியா வளர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தொகுதிகளை பிரிப்பதற்காக தான் அதிக இருக்கைகள் கொண்ட புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாஜக அதிக வாக்கு வாங்கும் இடங்களான மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தன்னுடைய வசதிக்கேற்ப தொகுதிகளை அதிகப்படுத்தி தென்மாநிலங்களில் உள்ள தொகுதியை குறைப்பதற்கான சதி திட்டமா? என்பதே பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஆங்கிலேயர் கட்டிய பழைய பாராளுமன்றம் கிட்டதட்ட 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது. ஆனால் மோடி கட்டிய இந்த புதிய பாராளுமன்றம் எத்தனை ஆண்டுகள் இடியாமல் இருக்கும் என்பதை உத்தரவாத்தை தரமுடியுமா? எதற்கு அவசர அவசரமாக புதிய பாராளுமன்றத்தை கட்டினார்கள்?. என்ற கேள்விகளும் எழுகிறது.
ஆரம்பத்தில் இந்த புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக முதல் முதலில் முன்மொழிந்தது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அவருடைய மகளான அப்போது பேரவை தலைவராக இருந்த மீரா குமார். அதன் பிறகே இந்த அரசு பாராளுமன்றத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டது.
புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்காக அன்றைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது திறப்பு விழாவுக்கு இன்றைய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவும் அழைக்கப்படவில்லை. இவை மட்டுமில்லாமல், பாராளுமன்ற திறப்பு விழாவில் உரையாற்றிய மோடி, முதல் முதலில் பாராளுமன்றத்தை கட்டுவதற்கு முன்மொழிந்த மீரா குமார் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இந்த விழா தீண்டாமையை கடைப்பிடித்தே நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.