Skip to main content

இந்த உலகம் யாருக்காகவும் காத்திருக்காது; மனித வாழ்வை உணர வைக்கும் ஜென் கதைகள்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 zen story and Jay zen interview

 

ஜென் கதைகளின் பல்வேறு சிறப்புகள் குறித்து ஜெய் ஜென் நமக்கு விளக்குகிறார்.

 

நம்முடைய உடல் இயங்குவதற்கு தத்துவங்கள் தான் எரிபொருள். அவை தான் உங்களுடைய எண்ணங்களை உருவாக்குகின்றன. ஜென் கதைகள் காலத்துக்கு ஏற்றவாறு தத்துவங்களை எப்போதும் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். ஒரு மடாலயத்தில் சிறுவயதில் ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். தன்னுடைய வேலைகளைச் சரியாகச் செய்யும் அவர் ஒரு கட்டத்தில் குருவாக மாறுகிறார். காலையில் விழித்த பிறகும் இரவு தூங்குவதற்கு முன்பும் மடாலய மணியை அடிக்கும் பழக்கம் அங்கு இருந்தது. ஒருநாள் அவர் இறந்து போகிறார். ஆனால் அடுத்த நாள் காலையிலும் மணி அடிக்கிறது. இது தான் கதை. 

 

நீங்கள் உண்மையாக ஒரு விஷயத்தைச் செய்தால் உங்களுக்குப் பிறகும் அதை வேறு யாராவது நிச்சயம் தொடர்வார்கள். ஜென் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒருவன் எளிமையாக வாழ்வான். பகட்டைப் புரிந்துகொண்ட அளவுக்கு எளிமையை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. ஒரு மடாலயத்தில் குருவிடம் சீடர் கேட்கிறார் "நான் வந்து பல நாட்கள் ஆகிறது. நான் எப்போது துறவி ஆவது?" என்று. "என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்துவிட்டு வா" என்றார் குரு. அந்த நண்பரிடம் சென்றபோது ஒவ்வொரு வேளையும் உணவு உண்ட பிறகு பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைக்கச் சொன்னார். தொடர்ந்து ஐந்து நாட்கள் இதைச் செய்தார் சீடர். 

 

"நீ போகலாம்" என்றார் நண்பர். ஏன் இவை அனைத்தும் நடந்தது என்று குருவிடம் கேட்டார் சீடர். நடந்த அனைத்தையும் குரு கேட்டறிந்தார். "நீ துறவியாக முடியாது" என்றார் குரு. ஏன் என்று சீடர் வினவினார். "காலையில் எழுந்து ஏன் அனைத்தையும் கழுவி வைக்கவில்லை?" என்று கேட்டார் குரு. "இரவு தானே கழுவி வைத்தேன்?" என்றார் சீடர். "இரவிலிருந்து காலைக்குள் அந்தப் பாத்திரங்களில் தூசி படியாது என்று யார் உன்னிடம் சொன்னது? இந்தப் புரிதல் உனக்கு வரும்போது நீ துறவியாக முடியும்" என்றார் குரு. சீடருக்கு அப்போது புரிந்தது. ஜென் கதைகளை கேட்கக் கேட்க சலிப்பே வராது. 

 

ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறது. அதை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து பிடித்தார். கையில் வைத்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பட்டாம்பூச்சியின் உடலைத் திருப்பிப் போட்டார். ஒரு கம்பியை எடுத்து அதன் வயிற்றில் பெருக்கல் குறி போட்டார். அதன் உடலில் ரத்தம் வழிந்தது. அதைப் பார்த்து சிரித்தார். அதனால் பறக்க முடியவில்லை. இவை அனைத்தும் ஒரு துறவிக்கு கனவாக வந்தது. திடீரென்று எழுந்து பார்த்தபொழுது அவருடைய வயிற்றில் பெருக்கல் குறி போட்டிருந்தது. பட்டாம்பூச்சிக்கு காரணம் தெரியாதது போல் அவருக்கும் காரணம் தெரியவில்லை. அதோடு முடிகிறது கதை. 

 

ஜென் கதைகள் அனைவருக்கும் எளிதில் புரியும்படி இருக்கும். அவற்றுக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் கிடையாது. ஒரு துறவியும் நானும் ஒரே இடத்தில் இருந்தபோது இருவரும் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு அவர் சொன்னார் "நம் இருவருக்கும் இடையே மிகுந்த நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வளவு நேரம் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தது" என்று. அதீத நம்பிக்கை இருப்பதால்தான் காதலர்கள் ஒருவரை ஒருவர் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையின்மையால் தான் விவாகரத்து செய்பவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே விரும்புவதில்லை. 

 

ஒருமுறை இமயமலையில் ஒரு துறவியிடம் ஒருவர் வந்து "உலகத்தில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன?" என்று கேட்டார். அவரிடம் அந்தத் துறவி "அருகிலிருக்கும் செடியில் ஒரு காம்பில் உள்ள இலைகளை மட்டும் பிடுங்கி வாருங்கள்" என்றார். அவரும் அதைச் செய்தார். "இதில் ஏதாவது இரண்டு இலைகள் ஒன்று போல் இருப்பதை எனக்குக் காட்டி விடுங்கள்" என்றார். ஒவ்வொன்றுமே ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாகத் தான் இருந்தன. "நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம் என்பது உங்களுக்குப் புரிந்தால் இதுவும் புரியும்" என்றார் துறவி.