![vajpayee](http://image.nakkheeran.in/cdn/farfuture/KHGBiCuc0BXZYXb0ZCNdoiHjzhSqTmaO3-Xq9V8wdu4/1534441726/sites/default/files/inline-images/vajpayee_4.jpg)
10 முறை 6 வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில் பிறந்த வாஜ்பாய் அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்தார். வாஜ்பாய் தந்தை கிருஷ்ணா பிஹாரி பள்ளி ஆசிரியர்.
தொடக்கத்தில் இருந்தே படிப்பில் ஆர்வமாக இருந்த வாஜ்பாய், கல்லூரி படிப்பில் இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றை பயின்றதோடு இளங்கலை படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் கான்பூர் டி.ஏ.வி. கல்லூரியில் எம்.ஏ. அரசியல் முதுகலை பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக இயங்கினார்.
சட்டம் பயில வேண்டும் என்ற ஆசையை தனது தந்தையிடம் தெரிவித்தார் வாஜ்பாய். அப்போது சட்டப் படிப்பின் மீதான தனது ஆசையையும் அவரது தந்தை கூறவே, இருவரும் ஒன்றாகவே கல்லூரிப் படிப்பை மேற்கொண்டனர். ஒரே அறையில் தங்கியிருந்தாலும், இருவரும் வெவ்வேறு வகுப்புகளில் படித்தனர்.
இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்த இந்த தருணத்தில் வாஜ்பாய் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக சட்டப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட அவர், பத்திரிக்கையாளராக மாறினார். ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களில் பிழைத்திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
![vajpayee](http://image.nakkheeran.in/cdn/farfuture/pWENjMLF0h6iNEkuKsPk24wh6_4PjCPmfJ_Jf-Av1NU/1534442272/sites/default/files/inline-images/vajpayee%20450000.jpg)
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் சென்றபோது கைது செய்யப்பட்டார். 23 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வெளிவந்த வாஜ்பாய், ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் இணைந்து பணிகளை மேற்கொண்டார். அப்போது சாகும் வரை உண்ணாவிரம் இருந்த ‘பாரதிய ஜன சங்’-ன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கைது செய்யப்பட்டார்.
சிறையிலே ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து வாஜ்பாய் முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கடின உழைப்பால் அந்த அமைப்பின் துணைத் தலைவராக உயர்ந்தார். ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பை வாஜ்பாய் ஏற்றார்.
சிறந்த அரசியல் செயல்பாடுகள், முக்கியத் தலைவர்களிடம் நன்மதிப்பையும் பெற்றார் வாஜ்பாய். 1962ல் மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய் நாடாளுமன்றத்திற்குள் இரண்டாவது முறையாக நுழைந்தார். மக்களவை உறுப்பினராக 10 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாஜ்பாய்.
1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியபோது இந்திரா காந்தியை எதிர்த்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ் நாராயணன், சரன்சிங், ஆச்சார்ய கிர்பாலினிஇ ஜார்ஜ் பெர்ணான்டஸ், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் நீண்ட கால தனது நெருங்கிய நண்பருடன் சிறை வாசம் அனுபவித்தவர் வாஜ்பாய். அந்த நண்பர் லால் கிஷன் அத்வானி என்கிற எல்.கே.அத்வானி.
![vajpayee](http://image.nakkheeran.in/cdn/farfuture/sy5cSiTuyeQnMMNAt_WYN-UImsqCAwAehy5CI3Xoh6k/1534442394/sites/default/files/inline-images/vajpayee%20450001.jpg)
நாடு சுதந்திரம் பெற்று சுமார் 30 ஆண்டுகள் வரை காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் ஆளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சிறு கட்சிகள் ஒன்றிணைந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த திட்டமிட்டன. அந்த நேரத்தில் இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டது.
இதனால் மக்கள் பெருமளவில் ஜனதா கட்சி கூட்டணிக்கு வாக்களித்தனர். ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 1977ஆம் ஆண்டு களம் இறங்கி வெற்றி கண்டது. இந்தக் கூட்டணியில் வாஜ்பாய்யின் ஜன சங் உள்பட பல கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மொரார்ஜி தேசாய்யை பிரதமராகக் கொண்டு இந்த ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால் பதவிக்கு வந்த ஜனதா கட்சி, மக்கள் கொடுத்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கூட்டணியை உருவாக்கி அதில் வெற்றிப் பெற்ற அவர்களால், கருத்து முரண்பாடுகளால் ஒற்றுமையாக நீண்ட நாட்கள் செயல்பட முடியவில்லை.
பதவிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் அக்கட்சிகளுக்குள் சண்டை முற்றி அவர்கள் அரசு வீழ்ந்தது. ஒரு பதவி காலம் கூட முழுமையாக ஜனதா கட்சியால் ஆள முடியவில்லை என்பதால் மக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளித்தனர்.
ஜன சங் கட்சியும் உட்கட்சி மோதலில் மோசமான நிலையை அடைந்தது. அரசியலில் மீண்டும் உத்வேகம் காட்ட வேண்டும் என்ற நோக்கம் ஜன சங் கட்சியின் தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடம் உருவெடுத்தது. வாஜ்பாய் நிர்வாக திறனால் கவரப்பட்ட ஜன சங் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் 1980ஆம் ஆண்டு வாஜ்பாய் அவர்களை தலைமையாகக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியை தொடங்கியது. 1984ஆம் ஆண்டு பாஜவிடம் இரண்டு இடங்கள் இருந்தன. ஆனால் ஒரு சில ஆண்டுகளால் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் வாஜ்பாய்.
இந்த நேரத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைகள் அரங்கேறின. இதனை எதிர்த்து குரல் கொடுத்த கட்சிகளில் முக்கியமானது பாஜக. 1992ஆம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவங்கள் பாஜகவின் செல்வாக்கை இந்துக்கள் மத்தியில் உயர்தின.
இதற்கு உதாரணமாக 1992 முதல் 1995 வரை நடந்த டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றிப் பெற்றது. 1996ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தனிப் பெரும் கட்சியாக இருந்த பாஜகவை ஆட்சி அமைக்குமாறு குடியரசுத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா அழைப்பு விடுத்தார்.
ஆனால் அதே நேரத்தில் மே 31ஆம் தேதிக்குள் பெரும்பாண்மையை நிருபிக்க வேண்டும் என்று வாஜ்பாய்க்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் மே 27ஆம் தேதியே நாடாளுமன்றத்தை கூட்டினார் வாஜ்பாய். இதில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரும்பாண்மையை நிருபிக்க 272 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் பாஜகவிடம் வெறும் 161 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர்.
இந்த நிலையில் பாஜக மதவாத கொள்கைகளை கொண்டதாக கூறி இதர கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டன. விவாதங்கள் நடந்தன. இறுதியில் விவாதங்களுக்கு பதில் அளித்து வாஜ்பாய் 90 நிமிடங்கள் பேசினார். பேச்சின் கடைசியில், தனது அரசுக்கு பெரும்பாண்மை இல்லாததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெறவில்லை. குடியரசுத் தலைவரை சந்தித்து வாஜ்பாய் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற 13 நாளில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.
ஆனால் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காகவே நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கோரவில்லை என்று வாஜ்பாய் மீது விமர்சனங்கள் எழுந்தது. பாஜக இல்லாத மதசார்பற்ற அமைச்சரவை அமைக்கப்பட்டால் ஆதரவு தர தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை அமைத்து பிரதமராக தேவ கௌடா பதவியேற்றார்.
அதன் பின்னர் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி மீண்டும் வெற்றி பெற்றது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த சிரோன் மணி அகாளிதளம், சிவசேனா போன்வற்றோடு சேர்ந்து, அதிமுக மற்றும் பீஜூ ஜனதா தளம் ஆகியவற்றோடு சேர்ந்து போட்டியிட்டது. தெலுங்கு தேசம் கட்சி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
எளிதாக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வாஜ்பாய் அவர்களை பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஆதரவை வாபஸ் பெற்றதால் கூட்டணி உடைந்தது. அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து 1999 ஏப்ரல் 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. அரசுக்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 270 வாக்குகளும் விழுந்தன. சற்று நேரம் அமைதியாக இருந்த வாஜ்பாய், அங்கு இருந்தவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு வெளியேறினார்.
இதுவே இந்திய வரலாற்றில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வீழ்ந்த அரசாகும். கடந்த முறை 13 நாட்கள் பதவி வகித்த அவரால், இரண்டாவது முறை 13 மாதங்களே பதவி வகிக்க முடிந்தது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 1999ல் நடந்த பொதுத்தேர்தலில் 303 இடங்களை வென்றது. இதில் பாஜக மட்டும் 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராகவும், எல்.கே.அத்வானி துணை பிரதமராகவும் பதவியேற்றனர். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆண்டது. 24 கட்சிகளை கொண்ட ஒரு பிரச்சனையான கூட்டணியை ஒருங்கிணைத்து கயிறு மேல் நடப்பதை போன்று ஐந்து ஆண்டுகளையும் நிறைவு செய்தார் வாஜ்பாய்.
![vajpayee](http://image.nakkheeran.in/cdn/farfuture/uR8cpxvDJJ8sZ6jZgUuBlAxUTkU8nwK0V9UW_b_wfzw/1534442528/sites/default/files/inline-images/vajpayee%20450002.jpg)
2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. மூன்று முறை பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் 2004 தேர்தலில் படுதோல்வி காரணமாக 2005 டிசம்பரில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அரசியல் பிரமுகர் என்பதை கடந்து புத்தகம் வாசிக்கும் பழக்கம், இந்திய இசை, இந்திய நடனம் ஆகியவற்றை ரசிப்பதோடு சிறந்த கவிஞரும் கூட.
இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.
1992ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1993ல் கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார். 1994ல் ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்.
இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 27 மார்ச் 2015 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.