"பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீ டு பிரச்சனை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்" என்கிற ரீதியில் கருத்து கூறியிருந்தார் சக்திமான் தொடர் நடிகர் முகேஷ் கண்ணா. இந்தக் கருத்துக்கு பலரும் முகேஷ் கண்ணாவை கடுமையாக சாடி வருகின்றனர்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா,
''சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா பெண்கள் குறித்து கூறிய கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் கருத்துக் கூறியுள்ளார்.
அடி முட்டாள் தனமாக பேசும் அவருக்கு படிப்பறிவும் அடிப்படை நாகரீகமும் தேவைப்படுகிறது. இந்த கருத்திற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்கு துணையாக இல்லாதவர்கள் ஆண்களே கிடையாது.
பண்பற்ற மனிதரின் நடிப்பை சிறு குழந்தையாக இருந்தபோது ரசித்து விட்டோமே என்று வெட்கப்படுகிறேன்.
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல ஒரு படி மேலே உள்ளார்கள் என்பதுதான் உண்மை. அவர்களை பலதுறைகளில் வளரவிடாமல் ஆணாதிக்க சமூகம் அடிமையாக்கி வருகிறது. போகப்பொருளாக பார்த்து வருகிறது.
இனிமேல் பெண்கள் குறித்து இதுபோன்ற கருத்து சொல்லும் யாராக இருந்தாலும் கவனமாக இருக்கவும். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.
இதுபோன்று கருத்து தெரிவிப்பவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களைப் போன்றவர்களால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன'' என கடுமையாக சாடியுள்ளார்.
இதனிடையே முகேஷ் கண்ணா, ''என்னை போல பெண்களை மதிப்பவர்கள் யாரும் கிடையாது என்பதை என்னால் மிகவும் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். பெண்கள் பணிபுரியக்கூடாது என்று நான் சொல்லவே இல்லை. என்னுடைய பேச்சுகளை தவறான முறையில் திரிக்க வேண்டாம் என்று என்னுடைய நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்'' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.