பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அமித்ஷாவின் சென்னை வருகை குறித்து பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசனிடம், நக்கீரன் இணையதளம் தொடர்புகொண்டு கேட்டபோது,
அமித்ஷா தமிழக வருகையில் முக்கியத்துவம் என்ன?
ஒரு தேசிய கட்சியின் தலைவர், நாட்டில் அதிகமான மாநிலங்களில் ஆட்சியை வைத்திருக்கும் ஒரு கட்சியின் தலைவர் தமிழகத்திலும் கட்சியை பலப்படுத்தவும், அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கும் வருகிறார். இந்த முறை கட்சியை பலப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, இந்த இரண்டு தான் அவர் வருகையின் நோக்கம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டதா?
ஆம்.. தயாராகி வருகிறது. நாளை எங்கள் கூட்டமே தேர்தல் முன்தயாரிப்புக்கான கூட்டம் தான். இதற்காக, 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்களை நாங்கள் கூட்டத்திற்கு அழைத்துள்ளோம். இது கட்சியை அடிமட்டத்திலிருந்து உற்சாகப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போதே தயாராக தொடங்கிவிட்டோம்.
நாடாளுமன்ற கூட்டணி வியூகம் என்ன? அதற்கான முடிவு எடுத்துள்ளீர்களா?
கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. ஆனால் அதே சமயம், இங்கு இருக்கும் அரசியல் கட்சிகளின் பலம், பலவீனங்களை பற்றியும், குறிப்பாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பலம் இழந்து நிற்கும் நிலையில், அதாவது இரண்டு அரசியல் ஆளுமைகள் இல்லாத இந்த சூழல் பாஜகவிற்கு எப்படி சாதகமாகி போகிறது என்பதை கவனிப்பதற்காகவும், இங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சியின் பலம், பலவீனங்களை அறிந்து அவற்றை எப்படி பாஜகவிற்கு சாதகமாக்கி கொள்வது என்பதையும் அவர் இங்கிருந்து கலந்தாலோசனை செய்வார்.
இதில் இங்கு இருக்கக்கூடிய உயர்மட்டக்குழுவோடு பெரும் ஆலோசனைக் கூட்டமும் நடக்க இருக்கிறது. அதில் எங்களின் கருத்துகளை நாங்கள் அவரிடம் தெரிவிக்க உள்ளோம். அதன் பின்னால் அவர் கூட்டணி குறித்து முடிவு செய்வார்.
தமிழகம் வியக்கும் அளவில் பாஜக கூட்டணி அமையுமா?
நிச்சயமாக.. ‘2014ல் பாஜக தான் ஒரு கூட்டணியை முன்னெடுத்தது’. இதற்கு முன்பாக தமிழகத்தில் குறிப்பாக திராவிட கட்சிகள் ஆதிக்கம் வந்ததின் பின்னால், 1967க்கு பிறகு காங்கிரஸ் எந்த தலைமையையும் ஏற்று நடத்தவில்லை. அவர்கள் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்து வெற்றி பெறவில்லை. ஆனால் பாஜக ஒரு தேசிய கட்சி 2014 தேர்தலில் ஒரு கூட்டணியை முன்னெடுத்தது. நாங்கள் பேசியே விஜயகாந்த், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோரை ஒர் அணியில் வரவழைத்தோம். அந்த பலம் எங்களுக்கு இருந்தது. 2019 தேர்தலிலும் அதற்கான சூழ்நிலைகள் கனியும்.
எங்களை பொறுத்தவரையில் 2019 தேர்தலில் தமிழகத்திலிருந்து கனிசமாக எம்.பிக்கள் பாஜக ஆட்சியமைக்க தயார் ஆவார்கள். எந்த கூட்டணி, எப்படி அமைகிறது, எப்போது அமைகிறது, யாருடன் அமைகிறது என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தான் முடிவாகும். அதற்கான ஆரம்ப பணிகள் குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.