சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் வேல் யாத்திரை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் சற்று காட்டமாகவே பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் வருமாறு, "பாஜகவினர் வேல் யாத்திரை மேற்கொள்வதை பற்றி கேட்கிறீர்கள், அதை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்களுக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய எந்த வழியும் கிடையாது. ஆனால் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக இன்றைக்கு வேல் எடுத்துக்கொண்டு ஓடலாமா என்று பார்கிறார்கள். டிசம்பர் 6 வரைக்கு அந்த பேரணியை நீண்டிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. அந்த நாள் அம்பேத்கர் உடையது. பாபர் பசூதி இடிக்கப்பட்ட நாள், அந்த நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்ற காரணத்தில் தானே மசூதியை இடித்தீர்கள். இதை தான் அண்ணனே திருமா தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா? நிச்சயம் பதில் சொல்ல மாட்டார்கள்.
வட இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்ததை போன்று இங்கேயும் செய்யலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் இந்த பாச்சா நிச்சயம் பலிக்க போவதில்லை. நிச்சயம் அவர்கள் ஏமாந்துதான் போவார்கள். எனவே தமிழக மக்கள் அவர்களின் போலி முகத்திரையை கிழிப்பதற்கு மிகவும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்மை ஏமாற்றி விட பார்ப்பார்கள். அதற்கெல்லாம் நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. அரசும் அதனை அனுமதிக்கக்கூடாது. நான் இதே அரசிடம் கேட்கிறேன். கடந்த முறை நான் வேல் பேரணி நடத்த அனுமதி கேட்டபோது என்னை நகர அனுமதித்தீர்களா? கோயிலுக்கு முன்பு ஒரு நூறு அடி நடந்து போய்கொள்கிறேன் என்று கேட்டதற்கு இந்த அரசு எனக்கு அனுமதி கொடுத்ததா? வேல் எடுத்துக்கொண்டு ஒரு 10 அடி கூட என்னை செல்லவிடாமல் தடுத்தார்கள். அப்படியே கோயிலில் போய் கும்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்லிவிட்டீர்கள். இவர்கள் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தமிழகத்தில் ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு சாதி, மதம், சாமி இதை தாண்டிய எந்த கோட்பாடுகளும் அவர்களுக்கு கிடையாது. இதை வைத்தே அனைத்து இடங்களிலும் அரசியல் செய்துவிட்டு போய்விடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். பாகிஸ்தான், பசு மாடு இதைவிட்டால் பாஜகவுக்கு பாலிஸி கிடையாது, எந்த கொள்கையும் கிடையாது. பாலியல் வன்கொடுமை, பொருளாதார சீரழிவுக்கு பேசாத வாய்கள் பாரதமாதாகி ஜே என்று கோஷமிட மட்டும் வாய் திறக்கும். அந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்பதை கற்றறிந்த அறிஞர்கள், சான்றோர் பெருமக்கள் உணர வேண்டும். எனவே நாங்கள் இதனை எதிர்க்கிறோம் என்று எங்கள் மீது சேற்றை வாரி பூசத்தான் பார்க்கிறார்களே தவிர இதில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். சரியான ஒன்றை எதிர்ப்பதற்கு நாங்கள் என்ன பைத்தியகாரர்களா, தவறு செய்தால் எதிர்ப்போம். தவற்றை அவர்கள் திருத்தும் வரை போராடுவோம். எனவே வேல் பேரணியால் தமிழகத்தில் எந்த எழுச்சியும் எழ போவதில்லை என்பது மட்டும் உண்மை" என்றார்.