கரோனா நோயாளிகளிடம் சுகாதாரத் துறையும் மருத்துவமனையும் காட்டிவரும் அலட்சியம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பிரபல கோஷா மருத்துவ மனையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மிகமிக அலட்சியாமாகக் கையாளப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கே கரோனா பாஸிட்டிவ் ஆன பெண்களுக்காக சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு கரோனா தாய்மார்களுக்குப் பிறக்கும் சிசுக்ளைத் தனியாக பாதுகாப்பான தூரத்தில் வைத்துப் பராமரிக்காமல், தொற்றுள்ள தாயருகிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் சிசுக்களும் கரோனாத் தொற்றுக்கு ஆளாகி, ஆபத்தைச் சந்தித்து வருகின்றன என்கிறார்கள் பலரும்.
இது குறித்து நம்மிடம் பேசிய கார்த்திகேயன் “எனது நண்பரின் மனைவிக்கு கரோனா பாதித்த நிலையில், அவரை பிரசவத்துக்காக கோஷா மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே மருத்துவர்களைத் தவிர அனைத்துப் பணியாளர்களும், பாதுகாப்புக் கவச உடைகள் அணியாமல் வெறும் மாஸ்க்கும் கிளவுஸும் போட்டுக்கொண்டு நோயாளிகளிடம் சென்று வந்துகொண்டு இருந்தார்கள்.
அதைவிடவும் கொடுமை என்னவென்றால் கரோனா வார்டுகளில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் எளிதாகப் போய் வருவதைப் பார்த்ததும் அதிர்ந்து போனோம். வார்டுக்குள் போய்வரும் நோயாளிகளின் உறவினர்கள், சகஜமாக வெளியே தேநீர்க்கடைகள் வரை நடமாடுவதன் மூலம் நோய் பரவுமே என்ற கவலை அங்கே யாருக்கும் இல்லை.
சில கரோனா கர்ப்பிணிகளுக்கு அருகில் விதிமுறைகளுக்கு மாறாக, அவர்களது தாயாரோ மாமியாரோ இருந்து உதவிக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில், என் நண்பரின் மனைவிக்கு கடந்தவாரம் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தையை உடனே தாயிடம் இருந்து விலக்கி வைக்காமல் அருகிலேயே வைத்துவிட்டார்கள். அதனால் குழந்தைக்கும் தொற்று ஏற்படுமோ என்று என் நண்பரும் அவர் மனைவியும் கலக்கமடைந்தார்கள். அவர்கள் பயந்தது போலவே அடுத்த இரண்டொரு நாளில் குந்தைக்கும் கரோனா என்று சொல்லிவிட்டார்கள். தாய்ப்பால் மூலம் சிசுக்களுக்கு கரோனா பரவாது என்றாலும், தாயின் எச்சில், மூச்சுக் காற்று, தும்மல் போன்றவற்றால் சிசுக்களுக்கு கரோனா பரவாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
இப்போது நண்பரின் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மருத்துவமனையின் அலட்சியம்தான் என்று கருதத் தோன்றுகிறது. இனி குழந்தையின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று பயந்துகொண்டு இருக்கிறோம்” என்கிறார் கவலையாய்.
இதேபோல் வேளச்சேரி ஏரிக்கரை வீட்டு வசதிக் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தொண்டை வலியோடு, வாசத்தை உணரும் திறனும் குறைந்ததால், கிண்டியில் இருக்கும் கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு கரோனா பரிசோதனைக்காகப் போயிருக்கிறார். அவர்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குப் போகும்படி கைகாட்ட, அவர் நேராக வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
ஆனால் மறுநாளே மாநகராட்சி அலுவலர்கள் அவர் வீட்டு முகப்பில் கரோனா நோயாளி என அடையாளப் படுத்தும் ஸ்டிக்கரை ஒட்டியிருக்கிறார்கள். அவர்கள் கிங் இன்ஸ்டியூட் நுழைவு கேட்டில் கொடுத்த முகவரியை வைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நபர், தனக்கு டெஸ்டே எடுக்கப்படவில்லை என்று சொன்ன பிறகு அவர்கள் திரும்பிச் சென்றாலும், அடுத்தடுத்த இதேபோன்ற டீம்கள் அடிக்கடி வந்து பீதியூட்டுகிறதாம். இனியாவது உரியவர்கள் கவனம் கொள்வார்களா?