Skip to main content

மண் சோறு சாப்பிட்டும் பட ஓடவில்லையே ராஜா.... தர்பார் குறித்து சீமான் கிண்டல்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிராமங்கள் தோறும் சென்று கூட்டங்களில் கஸந்து கொண்டு உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அதே பாணியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய, மாநில அரசுகளை தாக்கி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " தற்போது பெரும் முதலாளிகளின் வேட்டை காடாக பூமி மாற்றப்பட்டு வருகின்றது. அமேசான் காடுகள் தீப்பற்றி எரிகின்றது. ஒரு இடத்தில் தீப்பற்றி எரிகிறது என்றால், அதை இயற்கையாக நடக்கிற ஒரு நிகழ்வாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் 650 இடங்களில் ஒரே நேரத்தில் காடுகள் தீப்பற்றி எரிகின்றது. 400க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்கிறார்கள். பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்ற அமேசான் காடுகள் பற்றி எரிகின்றன.

 

hj



ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அந்த தீயில் கருகி மாண்டுள்ளது. அதில் உள்ள விலை மதிக்க முடியாத மரங்களை எடுத்துக்கொள்ள சில நிறுவனங்கள் துடிக்கின்றன.  அந்த இடங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டை காடாக மாற்ற  நினைக்கின்ற போது, அங்கு இருக்கும் பழங்குடி இன மக்கள் அதை தடுக்கிறார்கள். உனக்கு அது காடு, எனக்கு அது வீடு வெளியேறு என்று அந்த பழங்குடியினர் தொடர்ந்து போராடுகின்றார்கள். போராடி, போராடி கடைசியாக நீதிமன்றம் செல்கின்றான். நீதிமன்றம் வன வேட்டைக்கு தடை விதிக்கின்றது. உடனடியாக காடு முழுவதும் பற்றி எரிகின்றது. உலகத்தின் நுரையீரல் புகையாக போய்க்கொண்டிருந்தது. இன்றைக்கு தன்னுடைய வாழ்விடங்களையும், உடமைகளையும் அடுத்தவர்கள் பறித்துக்கொள்ள கூடாது என்று போராட்டம் நடத்திய மக்களைதான் இன்று மாவோயிஸ்ட்டுகள் என்று அழைக்கின்றோம்.

நம்மை எப்படி மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுகின்ற போது நம்மை எப்படி பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக சித்தரித்தார்களோ அதைபோன்றே இவர்களையும் சித்தரித்துள்ளார்கள்.   இத்தனை ஆண்டுகாலமாக காடுகளை பராமரித்து காத்தவர்களையே அவர்களால் காடுகளுக்கு ஆபத்து என்று காடுகளை விட்டு அவர்களை விரட்ட பார்க்கிறார்கள். அருகில் இருக்கும் கேரளாவை பார்க்கிறோம். அடத்தியான மரங்களை ஒவ்வொரு வீடுகளுக்கு அருகிலும் நாம் பார்க்கிறோம். அதை போல் நம்முடைய மாநிலம் ஏன் இல்லை என்ற எண்ணம் நமக்கெல்லாம் ஏற்படுகின்றது. ஏன், எட்டுவழிச்சாலைகள் எல்லாம் உங்கள் மாநிலத்தில் அனுமதிக்கவில்லை என்று கேரள முதல்வரை பார்த்து கேட்டால் அது எங்கள் மாநிலத்தில் உள்ள வளங்களை எல்லாம் அழித்துவிடும் என்று அவர் பதில் கூறுகிறார்.

இன்றைக்கு இந்த மண்ணை ஆள துடிக்கின்றவர்கள், பல லட்சம் ரசிகர்கள் தனக்காக இருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் மரக்கன்றுகளை நட வைத்து இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்தார்களா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. இந்த நூற்றாண்டிலும் மண் சோறு சாப்பிடும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அப்படி மண் சோறு சாப்பிட்டும் படம் ஓடவில்லை. மேகம் மறைத்துவிட்டதால் ஒரு ஸ்டாரும் மின்னவில்லை. கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட எந்த இனமும் போராட வராது. காந்தி சொல்வதை போல உழைக்காமல் உண்பதும் ஒருவித திருட்டுத்தான் என்று சொல்லுவார். திண்ணையில் சும்மா உட்கார்ந்திருந்தால் அவன் இந்த சாதி, மதம் என்று பேச தோன்றும். உழைக்காமல் இருப்பவர்களுக்கு சோறு இல்லை என்று சொல்லிவிட வேண்டும். இவர்களை நினைக்கும் போது சிரிப்புத்தான் வருகிறது" என்றார்.