Skip to main content

நீதிமன்ற காட்சிகளால் வசூல் அள்ளிய திரைப்படங்கள்! - அந்த வரிசையில் நேர்கொண்ட பார்வை?

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

கோர்ட் சீன்களால் சில சினிமாக்கள் இன்றுவரையிலும் பேசப்படுகின்றன. குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் பேசும் உணர்ச்சிகரமான வசனங்களும்,  வழக்கறிஞர் முன்வைக்கும் வாதங்களும், சில திரைப்படங்களை பலம்கொண்ட தூணாகத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. அதனாலேயே, அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் பெரும் வசூலை ஈட்டியிருக்கின்றன.

 

nerkonda parvai



இந்த நேரத்தில் இதை எழுதக் காரணம், நாளை (8-ஆம் தேதி) ரிலீஸாகவிருக்கும் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வைதான்! ஆம். இத்திரைப்படத்திலும் கோர்ட் சீன்கள் உயிரோட்டத்துடன் இருப்பதாக, படம் வெளிவருவதற்கு முன்பே சிலாகிக்கப்பட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. காரணம் – பாலிவுட்டில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி கண்ட ‘பிங்க்’ படத்தின் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. அதில் அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் ரோலில்தான் நேர்கொண்ட பார்வையில் அஜித் நடித்திருக்கிறார்.

சினிமா பார்ப்பதற்குத் தியேட்டர்களுக்குச் சென்ற ரசிகர்களுக்கும், யூ டியூபில் ட்ரெயிலர் பார்த்து ரசித்த 13 மில்லியன் பார்வையாளர்களுக்கும், நேர்கொண்ட பார்வையில் வரும் அந்த நீதிமன்றக் காட்சியில் பேசப்படும் வசனங்கள் அத்துப்படி. பரபரவென காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அத்திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இவை -

“ஆர் யு எ வெர்ஜின்? நீங்க கன்னித்தன்மையோடு இருக்கீங்களா? இல்லியா?”

“இல்ல..”

“இந்தமாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் இந்த மாதிரிதான் நடக்கும்.”

“அப்படியெல்லாம் நடக்காது. நடக்கக் கூடாது.”

“சொல்லுங்க.. இப்படி நிறைய்ய.. நிறைய்ய.. நிறைய்ய.. நிறைய்ய..”

“ஒருத்தர் மேல நீங்க விசுவாசத்தைக் காட்டுறதுக்காக.. இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க?”

‘நேர்கொண்ட பார்வை நிச்சயமாக வெற்றிபெறும்’ என்று தல ரசிகர்கள் பெரிதாக நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், இதற்குமுன் கோர்ட் சீன்களால் வெற்றிகண்ட, சில திரைப்படங்களின் வசனங்கள் கண்முன்னே காட்சியாக விரிகிறது.

 

parasakthi



67 வருடங்களுக்கு முன் வெளிவந்தது பராசக்தி. சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான அத்திரைப்படத்தில், நீதிமன்றக் காட்சியில் இடம்பெற்ற கலைஞரின் வசனங்கள் கூர்மையானவை.

“நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆனால்.. இந்த வழக்கு விசித்திரமும் அல்ல. வழக்காடும் நானும் புதுமையான மனிதனும் அல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வசாதாரணமாக தென்படக்கூடிய ஒரு ஜீவன்தான் நான்.

கேளுங்கள் என் கதையை! தீர்ப்பெழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்!”

இதோ இந்த பூசாரி! கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான். பராசக்தியின் பெயரால்! உலக மாதாவின் பெயரால்!

என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் வீட்டு பள்ளியறையிலே ஒரு நாள், மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியிலே ஒரு நாள், இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை!

இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்!”

நேர்கொண்ட பார்வைக்கெல்லாம் முன்னோடியாக, ஒரு பெண்ணுக்காக, அதாவது தன் தங்கைக்காக, அண்ணனே குற்றவாளிக் கூண்டிலேறி, குமுறித் தீர்த்த பராசக்தி வசனங்கள் காலத்தால் வெல்ல முடியாதவை!

 

 

gowravam



அதே சிவாஜிகணேசன் நடிப்பில் 1973-இல் ரிலீஸானது கௌரவம். இதில் சிவாஜிக்கு இரட்டை வேடம். இருவருமே வழக்கறிஞர்கள். மனைவியைக் கொலை செய்த மேஜர் சுந்தரராஜனுக்கு, தன் வாதத்திறமையால் விடுதலை வாங்கித் தந்துவிடுவார் பாரிஸ்டர் ரஜனிகாந்த் என்ற கேரக்டரில் நடித்த  ‘பெரியப்பா’ சிவாஜி. அதே மேஜர் சுந்தரராஜனுக்கு,  அவர் செய்யாத கொலைக்குத் தண்டனை வாங்கித் தருவார், மகனாக நடித்த ‘சின்ன’ சிவாஜி. ‘குற்றவாளி ஒரு தடவை சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்தாலும், இன்னொரு தடவை மாட்டியே தீருவான்..’ என்ற கருத்தை ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதியவைத்த அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்களைப் பார்ப்போம்!

“இடியாடிக் கொஸ்டின். ஒரு டாக்டரைப் பார்த்து கேட்கிற கேள்வியா இது? உன் பேஷண்டை எப்படித் தெரியுண்ட்டு?”

”அவ இருந்து கெடுத்தா.. இவ செத்துக் கெடுத்தா.."

“ஏன்டா அபிஸ்டு.. இதெல்லாம் உண்மையா?”

“இன்சூரன்ஸ் பத்தி சொன்னது உண்மைதான் சார்.. ஆனா.. நான் கொலை செய்யல..”

“பின்ன ஏன்டா அந்த இன்சூரன்ஸ் பத்தி என்கிட்ட சொல்லல.. இது சாதாரண விஷயமா என்ன?” நாட் அன் இன்சிடென்ட்.. பட் எ பாய்ண்ட்.”

டயலாக் டெலிவரியின்போது பெரியப்பா சிவாஜி சிங்கம்போல உறுமுவார். இருந்தாலும், இரண்டாவது  வழக்கில் சின்ன சிவாஜியிடம் பெரியப்பா சிவாஜி தோற்றுப்போவார். அந்த நேரத்தில், பெரிய சிவாஜியின் வாழ்நாள் லட்சியமான ‘ஜஸ்டிஸ்’ போஸ்ட் தேடிவரும். அதற்கு முன்பாகவே, அவர் உயிர் பிரிந்துவிடும்.

‘தன் நிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும். இதுதான் கௌரவம்! என டைட்டில் கார்டு போட்டு படத்தை முடிப்பார்கள்.

 

vidhi scene



சிவாஜி நடித்த படங்கள் மட்டுமல்ல. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்த ‘விதி’ திரைப்படமும்கூட, கோர்ட் வசனங்களால் பெரும் வெற்றி பெற்றது. நேர்கொண்ட பார்வையைப் போலவே, விதியும் ரீமேக் சினிமாதான்.  ‘நியாயம் காவலி’ என்ற தெலுங்கு சினிமாவின் மறுபதிப்பே விதி. இதுவும், பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு எதிரான வாதங்களை, 1984 காலக்கட்டத்திலேயே பேரழுத்தத்துடன் முன்வைத்த சினிமா. ஆண் ஒருவனால் அநீதி இழைக்கப்பட்ட பெண்ணிடம், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எத்தனை கேவலமாக நடந்து கொள்வார்; கேள்வி கேட்பார் என்பதை, துணிந்து காட்சிப்படுத்தி இருந்தார்கள் விதியில். சாம்பிளுக்கு அந்த கோர்ட் சீன் வசனங்கள் -

“அப்படி அவர் உன்னை என்னதான் செஞ்சாரு? என்ன செஞ்சாரு? கமான்.. ”

“இறுக்கிக் கட்டிப்பிடிச்சிட்டாரு..”

“அவரோட பிடியில இருந்து விடுபட நீ முயற்சி பண்ணலியா?”

“முயற்சி செய்தேன்.. முடியல..”

“அந்த முயற்சி போராட்டத்துல ராஜாவோட நிலைமை என்ன? அவரு உன்ன எப்படி பிடிச்சாரு? எங்கே பிடிச்சாரு? அவருடைய கை உன் உடம்புல எந்த பாகத்துல பட்டுச்சு? அப்ப உனக்கு எப்படி இருந்துச்சு? எந்தவிதமான உணர்ச்சி ஏற்பட்டுச்சு? அந்த உணர்ச்சி உனக்கு வேணும்போல இருந்ததா? வேண்டாம் போல இருந்ததா? நடந்ததை நடந்தபடி சொல்லணும். உண்மையைச் சொல்லணும். இல்லைன்னா விடமாட்டேன். டெல் மி.. டெல் மி..”

பாதிக்கப்பட்ட பூர்ணிமா ஜெயராமிடம், அவர் கதறக் கதறக் கேள்விகளால் துளைப்பார் வழக்கறிஞரான ஜெய்சங்கர்.  ‘அட, கொடுமையே! கோர்ட்டில் ஒரு பெண்ணிடம் இப்படியெல்லாமா கேள்வி கேட்பார்கள்!’ என்று பெண் ரசிகர்களை ‘உச்’ கொட்ட வைத்து, வசூலை வாரிக்குவித்தது விதி. 

ஒரு காலத்தில் 'வசன கேசட்' என்ற பெயரில் திரைப்படங்களின் வசனங்களை மட்டும் ஒலி வடிவத்தில் குழாய் ஸ்பீக்கரில் கேட்டு ரசிப்பார்கள் கிராமத்து சினிமா ரசிகர்கள். இன்றோ திரையரங்குகளில் பார்க்கும் படங்களில் கூட அதிக வசனங்கள் இருந்தால் 'பேசிக்கிட்டே இருக்காய்ங்கப்பா' என்று சொல்லும் காலம். வசனங்களை குறைத்து காட்சிகளைப் பிரதானப்படுத்தும் வழக்கம் மெல்ல வந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் கூட நீதிமன்ற காட்சிகளை முன்னிலைப்படுத்தும் படங்கள் இன்றும் வெற்றி பெறக் காரணம் என்ன தெரியுமா? அன்றிலிருந்து இன்றுவரையிலும் சில விஷயங்களில், சினிமாவில் காட்சிகளும்  ரசிகர்களின் ரசனையும் மாறாதிருப்பதுதான்.