Skip to main content

சீமான், திருமா பேசிய மேடையிலேயே அவர்களை விமர்சித்த இயக்குநர் கௌதமன்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.  இந்நிகழ்ச்சியில் திருமாவளவன், சீமான், பெ.மணியரசன், இயக்குநர் கௌதமன் முதலானவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பேசிய இயக்குநர் கௌதமன் சீமான் மற்றும் திருமாவளவனின் அரசியல் நிலைபாடுகளை பற்றி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " தற்போது எனக்கு முன்பு அண்ணன் திருமாவளவன் இங்கு சிறப்பாக தன்னுடைய கருத்துக்களை பேசினார். அவர் பேசி முடித்ததும் நான் சில கருத்துக்களை பேச வேண்டும் இருங்கள் என்று கூறியுள்ளேன். நாம் பல விஷயங்களை பற்றி பேசுகிறோம். ஆனால் உடனடியாக அதை மறந்துவிட்டு வேறு ஒன்றிற்கு சென்று விடுகிறோம். சில வருங்களுக்கு முன்பு ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை இழந்தோம். அதற்காக நாம் எதுவும் செய்யவில்லை. இந்தி எதிர்ப்பு போரில் இந்திய ராணுவம் நம்முடைய தமிழ் பிள்ளைகளை கொன்றார்கள். சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரை கொன்றார்கள். நாம் என்ன செய்தோம். அதை பற்றி படிக்கிறோம், பேசுகிறோம். படுத்து தூங்கிவிடுகிறோம். வேறு எதையும் செய்யவில்லை. அப்படி ஏதாவது இந்த 50 ஆண்டுகாலத்தில் செய்திருக்கின்றோமா? தமிழன் ஆள்வதற்கான வழியை ஏதாவது உருவாக்கி வைத்துள்ளோமா? சுதந்திரத்துக்கு பிறகு ஏதாவது அந்த மாதிரியான போராட்டங்களை முன் எடுத்துள்ளோமா என்றால் அப்படி எதுவும் இல்லை. இந்த கருத்தில் இங்கு இருப்பவர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். 
 

j



தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும். அதற்கான வழி என்ன? மேடையில் தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழன் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் என்ன வியூகம் வகுத்துள்ளோம் என்று பார்க்க வேண்டும். சகோதரர் திருமாவளவனும் இதை சொன்னார். இங்கே இருப்பவர்களும் அதையே சொல்கிறோம். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது நடக்குமா என்றால் நடக்காது. இங்கு மதம், சாதி என்று பல்வேறு குறுக்கீடுகள் இருக்கின்றது. புரிதல் இருந்தும் அதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுவதில்லை. தமிழ் கடல் என்று நாம் அழைக்கின்ற நெல்லை கண்ணன் ஐயா சிரித்துக்கொண்டே பேசிய கருத்துக்கு சிறை தண்டனை கொடுத்துள்ளார்கள். ஆனால் வைரமுத்து பற்றி பேசக்கூடாத வார்த்தைகளில் பேசிய ஹெச்.ராஜா சுதந்திரமாக இருக்கிறார். நெல்லை கண்ணன் ஐயா போன்று நாளைக்கு யாரை வேண்டுமானாலும் தூக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய போகிறோம். கத்திபாரா பாலத்தை பூட்டியதற்காக ஆட்டோ டிரைவர்களை சாட்சி சொல்ல காவல்துறையினர் அழைத்து வந்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களை பார்க்கவில்லை என்று கூறி, எங்களை காப்பாற்றி சென்றார்கள். தமிழனை காப்பாற்ற வேண்டும் என்றால் மேடையில் உள்ள தலைவர்கள் மற்றும் மேடையில் இல்லாத தலைவர்களும் இதை உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். நான் தனியாகத்தான் நிற்பேன் என்று சொல்லும் சீமான் அண்ணனும், கூட்டணியோடுதான் நிற்பேன் என்று சொல்லும் அன்புமணி அவர்களும், வேறு வழியே அல்ல என்று கூறி திமுகவோடும் அல்லது அண்ணா திமுகவோடும் கூட்டணிக்கு செல்லும் திருமாவளவன் அவர்களும் நீங்கள் ஒருபோதும் தமிழினத்துக்கு நல்லது செய்யவில்லை என்பதை மட்டும் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். பிரபாகரன் சொல்லியிருக்கிறார் லட்சியத்துக்காக கவுரவத்தை இழக்காலம் என்று, ஆனால் நீங்கள் எல்லாம் கவுரவத்துக்காக லட்சியத்தை இழந்தவர்களாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விடுவீர்கள்" என்றார்.