கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா இயற்கையின் விளைநிலம். பச்சைப் பசேலென்று படர்ந்து அடர்ந்துள்ள காடுகளும், மலைகளும், பாய்ந்தோடும் அருவிகளும், ஜிமிக்கி கம்மல்களும், கறுப்புச் சட்டைகளும் கேரளத்தின் அடையாளத்தைப் பறைசாற்றுகிறது. இனி கேரளத்தின் அடையாளமாக நிம்மி கோஷியும் நம் நினைவு அடுக்குகளில் நிறைந்து இருப்பார். திருமணம் ஆனதும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் பணிவிடை செய்து கிடப்பதே விதியென நினைக்காமல், தனக்கான விதியைத் தானே எழுதத் துடிக்கும் பல்லாயிரம் பெண்களில் நிம்மி கோஷியும் ஒருவர். ஐக்கிய நாடுகளில் இருந்து ‘திருமதி அழகிகள்’ கலந்துகொள்ளும் “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் 2020” அழகிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள தயாராகி வருகிறார் நிம்மி கோஷி.
மத்திய அரசு அலுவலராக நிம்மியின் அப்பா இருந்ததால், கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, பெங்களுரு, புதுவை, ஹைதராபாத், பூனே, திருவனந்தபுரம் என எல்லா ஊர்களும் எல்லாப் பண்பாடுகளும் பழக்கம் ஆகிவிட்டதாக பகிர்ந்துள்ளார் நிம்மி. முதுகலைப்பட்டம் முடித்துள்ள நிம்மி கோஷிக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆசிரியையாகப் பணியாற்றி வரும் நிம்மி, இப்பணியின் மூலம் நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்கி சமூகத்தின் உண்மையான சொத்துகளாக மாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். திருமணமான பெண்களுக்கு வாய்ப்புகள் அருகி வரும் காலத்தில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் திருமதிகள் வெற்றி பெறுவதாக நிதர்சனம் பேசுகிறார்.
சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மீது தீவிர காதல் கொண்ட நிம்மி, அதை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். மேலும், வசதியற்ற மாணவர்களுக்கு இலவசமாக பரதநாட்டிய வகுப்புகளை எடுத்து வருகிறார். கேரளாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள் எனக் கேட்ட போது? “நான் வெற்றிகளைப் பொருளாதார அளவீடுகளைக் கொண்டு அளவிடுவதில்லை, மாறாக வாழ்க்கைத் தரத்தை வைத்தே மதிப்பிடுகிறேன்” என்கிறார் நிம்மி. எனது பெற்றோர்கள் எதற்காககவும் என்னை அழவிட்டதில்லை, பிரச்சனைகளை நேர்மையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள கற்றுத் தந்துள்ளனர் என்கிறார்.
ஒரு நாடு நாகரிகமான நாடக இருக்கும் பட்சத்தில் அங்கே பெண்கள் சரி சமமாக மதிக்கப்படுவர். தனக்கான துணையைத் தானே தேர்வு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றவர்களாகவும் இருப்பர் எனக் கூறியுள்ள நிம்மி, அழகு என்பதற்கு நமது சமூகம் பல்வேறு தவறான கற்பிதங்களைக் கொண்டுள்ளது என்கிறார். அழகு என்றால் பிறரை வசீகரிப்பது, கவர்ச்சியை வைத்து பல விசயங்களைச் சாதித்துக் கொள்வது என்பதெல்லாம் அழகுக்கான அர்த்தம் அல்ல. பாலைவனத்தில் பூத்த பூக்களும், ஆழ்கடலில் கிடக்கும் விலைமதிப்பற்ற கற்களும் கடைசி வரை யாராலும் கொண்டாடப்படுவதே இல்லை. இதுபோல்தான், பலரின் திறமைகள் பேசப்படாமல் போனதற்குக் காரணமே, இச்சமூகம் அழகின் மீது கொண்டுள்ள தவறான அபிப்பிராயங்களே. என்னைப் பொறுத்தவரை உண்மையான அழகு என்பது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் யாராவது ஒருத்தருக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் யாருக்காகவாவது பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதுதான் அழகு. மற்றபடி உடல் அழகு என்பது கூடுதல் சிறப்பாக வேண்டுமானால் இருக்கலாம்.
எனது பெற்றோரின் உந்துதலால் சிறு வயதிலிருந்தே கலை நிகழ்சிகளில் கலந்து கொள்வேன், அப்படித் தான் முதன் முதலாக தேசிய அளவிலான ‘மிஸ்சஸ் இந்தியா எர்த் -2019’ அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன். அதன் இறுதிச் சுற்று வரை முன்னேறினேன். அதில் நான் ‘மிஸ்சஸ் இந்தியா எலகன்ட்” விருதைப் பெற்றேன். இதன்மூலம், எனக்கு “மிஸ்சஸ் இந்தியா யுனைட்டெட் நேஷன் -2020” விருது கிடைத்தது. இதனால், வருகிற 26 அக்டோபர் 2020 அன்று, ஐக்கிய நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் -2020” போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்க இருக்கிறேன். எனக்கு இது மிகவும் பெருமையான தருணம். மிகவும் தீவிரமாக இதற்காக பணியாற்றி வருகிறேன். இந்தியாவின் சார்பாக நான் மகுடம் சூடப் போகும் அந்த மகத்தான நாளை எண்ணி காத்திருக்கிறேன். இதுவரை நடைபெற்ற யுனைட்டெட் நேஷன் போட்டியில் இரண்டு இந்தியப் பெண்கள் மகுடம் சூடியுள்ளனர் நான் மூன்றாவதாக இருப்பேன் என நம்பிக்கை மிளர சொல்கிறார் நிம்மி.
அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது நிம்மி சொன்ன பதில், “வரும் தலைமுறைக்கு இந்த உலகை இன்னும் மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்ல விரும்புகிறேன். மரம் ஒருபோதும் தன் கனிகளை தானே உண்பதில்லை, ஆறு ஒருபோதும் தன் நீரை தானே குடிப்பதில்லை, சூரியன் தனக்காக மட்டுமே ஒளிர்வதில்லை, ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் இயற்கையின் விதி” என்று சொல்லி முடித்தார்.
இரண்டு குழந்தைகளின் அம்மா, ஆசிரியை, குடும்பத் தலைவி என்னும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் நிம்மி போன்றோரை நாடே எழுந்து, கைத்தட்டி, உச்சிமுகர்ந்து பாரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!
மகுடம் சூட வாழ்த்துகள் நிம்மி சேச்சி....!