சாத்தான் குளம் இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கனிமொழியும், உதயநிதியும் அடுத்தடுத்து சென்று வந்த சம்பவம் தி.மு.க.-வில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் பரவி வருகிறது.
சாத்தான்குளம் காவல்துறையின் கொடூர தாக்குதலில் நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் மனசாட்சி உள்ள மனிதர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்தும், ஜெயராஜ் குடும்பத்துக்கு நீதி கேட்டும் உடனடியாகக் களத்தில் குதித்தது தி.மு.க.!
தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் சாத்தான் குளம் பிரச்சனைனையைக் கையிலெடுத்த கனிமொழி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கேட்டு, களத்தில் இறங்கினார். தமிழக காவல்துறை தலைவர் திரிபாதியைச் சந்தித்து முறையிட்டார். மத்திய உள்துறை அமைசகம் வரை பிரச்சனையை எடுத்துச் சென்றார் கனிமொழி.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியை தங்கள் கட்சி நிதியிலிருந்து ஒதுக்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த நிதியை ஜெயராஜ் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வருமாறு கனிமொழிக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின். அதன்படி ஜெயராஜ் குடும்பத்தினரைச் சந்தித்து நிதி உதவியை வழங்கியதோடு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் கனிமொழி.
அவர் சென்று வந்த மறுநாள் திடீரென சாத்தான்குளம் புறப்பட்டு சென்ற தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. எப்போதும் இருக்கும் என உறுதி கொடுத்துவிட்டு திரும்பினார்.
கனிமொழி சென்று வந்த மறுநாள் உதயநிதியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தது, தி.மு.க.-வில் சலசலப்பைச் சத்தமில்லாமல் ஏற்படுத்தியிருகிறது. கனிமொழியின் வளர்ச்சிக்கு உதயநிதி மூலம் தடை போடப்படுகிறதா? என தி.மு.க.-வில் உள்ள மற்ற அணிகளின் நிர்வாகிகளிடம் எதிரொலிக்கச் செய்கிறது. மூத்த மா.செ.க்கள் பலரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் போது, இந்தச் சம்பவங்களைத்தான் அசை போடுகிறார்கள்.
தி.மு.க.-வில் சத்தமில்லாமல் எழுந்துள்ள இந்தச் சலசலப்புகள் குறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’தி.மு.க.-வில் ஸ்டாலினுக்கு பிறகு கனிமொழியின் செயல்பாடுகள்தான் தமிழக அரசியலில் பேசப்படுகிறது. அவரின் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. மக்கள் நலன் சார்ந்து அவர் வைக்கும் கோரிக்கைகளுக்கும் மரியாதை கிடைக்கிறது. தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் மாவட்டத்தின் அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறார், முதல் ஆளாகக் களத்தில் நிற்கிறார். அதே ரீதியில்தான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பத்திலும் காவல்துறைக்கு எதிராகவும்; தமிழக அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறார். இது, தென் மாவட்டங்களில் தி.மு.க.-வுக்கு நற்பெயரை கொடுத்துள்ளது. கனிமொழியின் செயல்பாடுகள் பரபரப்பாகவும் ஊடகங்கள் மத்தியில் எதிரொலித்தன.
இவைகள் தி.மு.க.-வில் உள்ள சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே கனிமொழியின் வேகத்துக்குத் தடை விதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உதயநிதியை வைத்து அதனை நிறைவேற்ற அவரை களத்தில் இறக்கினர். அதன்படி அமைந்ததுதான் உதயநிதியின் சாத்தான்குளம் பயணம். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், தொகுதி எம்.பி.என்கிற வகையில், கனிமொழியை இயக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். அவரின் உத்தரவுப்படியே கனிமொழியும் நடந்து கொள்கிறார். அப்படியிருக்க, மறுநாளே உதயநிதி சாத்தான் குளம் போக வேண்டிய அவசியம் எதற்கு? அதனால்தான் கனிமொழியின் வளர்ச்சி இளைஞரணிக்கு பிடிக்கவில்லையோ என்கிற சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட அரசியல்கள் தி.மு.க.-வை பாதிக்கும்‘’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய மாநில நிர்வாகிகள்.
தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ’’சாத்தான்குளம் சம்பவம் எப்படிப் பார்த்தாலும் ஜீரணிக்க முடியாதவை. தி.மு.க. இளைஞரணி இது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது. காவல்துறையின் கொடூர தாக்குதலால் இரண்டு அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதை உதயநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். தி.மு.க. இளைஞரணி சார்பில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது தமக்கு ஆறுதலாக இருக்கும் என நினைத்தார் உதயநிதி. அந்த நினைப்புதான் அவரை சாத்தான் குளத்துக்கு அனுப்பி வைத்தது. அப்படியிருக்கும் போது அவர் போய் வந்தததற்கு உள் நோக்கம் கற்பிப்பது தேவையற்ற அரசியல்! மேலும், கனிமொழி வேறு யாரோ கிடையாது. உதயநிதியின் அத்தை. அவரது வளர்ச்சி கட்சியின் வளர்ச்சியாகத் தான் பார்க்கப்படுகிறதே ஒழிய அவர் மீது உதயநிதி பொறாமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இளைஞரணியின் அரசியல் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத்தான் உதயநிதி திட்டமிடுகிறார். குடும்பத்திற்கு கலகத்தை உருவாக்க இப்படிப்பட்ட செய்திகளை கட்சியின் சீனியர்களே பரப்புவதுதான் கவலையளிப்பதாக இருகிறது‘’ என்கிறார்கள் வருத்தமாக!
இதற்கிடையே ஜெயராஜ் குடும்பத்திற்கு நீதி கேட்டு முகக் கவச பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார் கனிமொழி!