சசிகலா தற்போது சிறையில் இருக்கிறார். அமமுகவை தினகரன் தனிக்கட்சியாக பதிவுசெய்து பொதுச்செயலாளர் ஆகிவிட்டார்.
கட்சியை பதிவுசெய்யுமுன் பொதுச்செயலாளர் சசிகலாதான், நான் துணை பொதுச்செயலாளர்தான் எனக்கூறிய தினகரன் தற்போது சசிகலா தலைவர், நான் பொதுச்செயலாளர் எனக்கூறுகிறார். சட்ட பிரச்சனைகளை கணக்கில்கொண்டுதான் நான் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறேன் எனவும் கூறினார். சசிகலாவை வெளியே எடுப்பதற்கான வேலைகளும் நடந்துவருவதாக கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, முதலிலிருந்தே ஈ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் தினகரனை கட்சியில் இணைக்கமாட்டோம், அவரை சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டாலும், இணைத்துக்கொள்வோமே தவிர அவரை இணைக்கமாட்டோம் எனக்கூறினர். தற்போது நடைபெற்ற பிரச்சாரங்களிலும் தினகரனைத் தாக்கிப் பேசினார்கள். ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சசிகலா குறித்து பேசவில்லை.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே சசிகலாதான். அவர் இன்றும் அந்த நன்றியுடன் இருக்கிறார் என்றும், அதனால்தான் அவர் சசிகலா குறித்து பேச மறுக்கிறார் என்றும் ஈ.பி.எஸ். ஆதரவு, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அதிகமாக பிரித்தது அமமுகதான் என்ற பேச்சும் எழுந்து வருகிறது.
ஒருவேளை அதிமுகவின் வாக்கை அமமுக அதிகமாக பிரித்தால், அதைத்தொடர்ந்து சசிகலாவை வெளியில் எடுப்பது, அதிமுக, அமமுகவை இணைப்பது, பழையபடியே சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக நிர்மாணிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடரும் எனவும் கூறுகின்றனர். இவையெல்லாம் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் தெரியும்.