Skip to main content

ரஜினிக்கும் கமலுக்கும் என்ன வேறுபாடு?

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

ரஜினி முதலில் கட்சி தொடங்குவாரா? கமல் முதலில் கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்தபோது கமல் முந்திக் கொண்டார்.


உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பழமொழி புகழ்பெற்றது.

அந்த அடிப்படையில் கமல் தனது நண்பர்களாக வெளிப்படையாக காட்டியவர்கள் அனைவருமே கருப்பு மற்றும் சிவப்புக்காரர்கள். இடதுசாரிகள்.


 

KAMAL - RAJINI


 

கமலை வம்பிழுக்காதீர்கள். அவர் அரசியலை நன்கு கற்றுக்கொண்டு வருவார் என்று பாரதிராஜா சொன்னார். பொதுவாகவே, கமல் ஒரு விஷயத்தை பேச வேண்டுமென்றாலும், திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றாலும் அதுகுறித்து நன்றாக தெரிந்துகொள்ள விரும்புவார் என்பார்கள்.

 

 

 

அந்த அடிப்படையில் புதிய பாணியில் தனது பாணியில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். கமல் படங்களைப் போலவே ஏ, பி, சென்டர் ரசிகர்களை கவரும் கட்சியாக அது உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்றுகூட சொல்லலாம்.

 

கட்சி தொடங்கிய விஷயத்தில் கமல் தன்னை ஒரு தமிழனாகவும், தமிழ் குடும்பங்களின் பிள்ளையாகவும் காட்டிக்கொண்டார். தனக்கு முன்னோடியாக குறிப்பிட்ட பல தலைவர்களில் பெரியார் இருக்கிறார். கலைஞரைக்கூட பிடிக்கும் என்றார்.

 

 

ஆனால், ரஜினி தனது கட்சி தொடங்கும் வேலையை இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறார். கட்சியைத் தொடங்கி, தமிழ்நாடு முழவதும் வார்டுகள் அளவில் கிளைகள் ஏற்படுத்தும் வேலைகளை முடித்தால்தான் கட்சியை முழுமையாக இயக்க முடியும் என்பது ஆரம்ப அரிச்சுவடி.

 

2017 டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு பல்கலைக்கழகத்தில் எம்ஜியார் சிலையைத் திறந்து வைத்த ரஜினி, தனது அரசியல் வருகை உறுதி என்றார். அப்போது, எம்ஜியாரைப் புகழ்ந்த அவர், எம்ஜியார் ஆட்சியைக் கொடுப்பேன் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.

அப்புறம் பல சமயங்களில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கட்சி தொடங்குவது பற்றிய கேள்விக்கு நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று மழுப்பத் தொடங்கினார். அவருக்கு எந்திரன் 2.0 படத்தை வெளியிட முடியாமல் இழுத்தடிப்பதும், காலா படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வராத நிலையும் பெரிய பிரச்சனையாக இருப்பதாக கூறப்பட்டது. ஒருவழியாக காலா படத்தை வெளியிட தேதி குறித்தாகிவிட்டது. அதற்கான புரமோஷன் நடைபெற வேண்டிய நிலையில்தான் தூத்துக்குடிக்கு போனார்.


 

KAMAL - RAJINI


 

கமல் போராட்டம் நடக்கும்போதே போனார். அந்த மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டிடம் பணம் கேட்டதாக தனக்கு தகவல் வந்ததாக வார்த்தையை விட்டு வாங்குப்பட்டார். உடனே அதை மடைமாற்ற ஒரு சின்னப்பையனை கோஷம்போட வைத்து சமாளித்தார். சில பெண்களிடம் பேசி செண்டிமென்ட் சீன் போட்டார். 


பிறகு, கலவரத்துக்கு பிறகு மறுநாளே மருத்துவ மனைக்கு போனார். காயம்பட்டவர்களை சந்தித்தார். வெளியில் வந்து தனது வேதனையை பகிரந்துகொண்டார். எதற்கெடுத்தாலும் போராடுவதைக் காட்டிலும் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற கருத்தையும் பதிவு செய்தார். ஆனால், அவர் சொன்ன விதம் ஏற்கும்படியாக இருந்தது. ரத்தக்களறிக்கு எதிரான கருத்தாக இருந்தது.

 

ஆனால், ரஜினி தூத்துக்குடிக்கு கிளம்பும்போது சென்னையிலேயே இதுபற்றிக் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த ரஜினி…

 

“நான் ஒரு நடிகன். நான் அங்குபோவது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடும். நடந்து முடிந்த சம்பவங்களுக்கு ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக்கொள்வது எனக்கு பிடிக்காது” என்று சொல்லியிருந்தார்.

 

துப்பாக்கிச்சூடு நடந்து முடிந்து 8 நாட்களுக்குப் பிறகு அவர் செல்கிறார். துப்பாக்கிச் சூடு நடந்து இரண்டு நாள் வரை அமைதி காத்த அவர், கமல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்ற பிறகு ஒரு வீடியோ வெளியிட்டார். அதில்கூட…

 

“போலீஸாரின் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது” என்றுதான் கூறியிருந்தார்.

 

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சென்னையிலிருந்து தூத்துக்குடி போகும்போதே, காலா பட புரமோஷனுக்காக ரஜினி புறப்பட்டுவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல்களும் புறப்பட்டுவிட்டன.

 

அதற்கு ஏற்றபடி, சோகம் கப்பியிருந்த ஒரு இடத்துக்கு போகிறவர், முன்கூட்டியே தூத்துக்குடி விமான நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் கார்களில் தனது மன்ற நிர்வாகிகளை வரும்படி செய்து கூட்டம் சேர்த்தார். மருத்துவமனை வளாகத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை மனிதாபிமானம் உள்ளவர்களால் ஏற்க முடியாது.

 

மருத்துவமனைக்குள் சந்தோஷ் குமாரை சந்திக்கும்வரை அவர் சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறார். அந்த இளைஞரிடம் வந்தபோது அவர் ரஜினியைப் பார்த்து “யார் சார் நீங்க?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு “நான் ரஜினிகாந்த்பா” என்று ரஜினி கூறியிருக்கிறார்.


 

KAMAL - RAJINI

 
 

 

 

“சென்னையிலிருந்து தூத்துக்குடி வர 100 நாள் ஆகுமா?” என்று அந்த இளைஞர் கேட்ட கேள்விதான் ரஜினியை ஆத்திரமடையச் செய்தது. மருத்துவமனையில் இருந்து வேகமாக வெளியேறிவிட்டார். தன்னை மிகப்பெரிய ஆளாக கற்பனை செய்து அந்த கற்பனை உலகத்திலேயே தமிழக முதல்வராக அவர் வாழ்ந்து வருகிறார். அவருடைய கற்பனை உலகத்தை அந்த இளைஞர் சிதைத்துவிட்டார். அது ரஜினியை காயப்படுத்திவிட்டது.

 

உடனே, தன்னை எதிர்த்து கேள்வி கேட்டவரை சமூகவிரோதிகளாக புரிந்துகொண்டுவிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் மருத்துவமனை முன்பாகவே தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பல கருத்துகளை அவர் வெளியிட்டார். போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்திருந்தனர் என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

 

 

 

இதே குற்றச்சாட்டைத்தான் பாஜக தலைவர்களும், தமிழக முதல்வரும் தெரிவித்திருந்தனர். அதே கருத்தை ரஜினி தூத்துக்குடியில் வெளிப்படுத்தியது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்குள் தலைவர்கள் பலர் ரஜினியின் கருத்து விஷம் தோய்ந்தது என்றும், மக்களைக் கொச்சப்படுத்துவது என்றும் கூறினார்கள்.

 

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய ரஜினியிடம் தலைவர்களின் கருத்து குறித்து கேட்டபோது, அவர் மேலும் ஆவேசமடைந்து, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளிலும், தூத்துக்குடி போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள்தான் கலவரத்துக்கு காரணமாக இருந்தார்கள் என்று போலீஸுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார்.

 

ரஜினி யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்பது அம்பலமாகிவிட்டதாக பாஜக மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ரஜினியை பிரித்து மேய்கின்றனர்.

 

கமல் முறைப்படி கட்சியை தொடங்கி, தனிப்பட்ட பாதை அமைத்து மக்களை நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில்,

 

கட்சியே தொடங்காமல் மக்கள் விரோத சக்திகளின் குரலாய், மக்களுக்கு எதிரான குரலை ரஜினி வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

இப்போது, அவருக்காக ஒரு ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரஜினி கட்சியைத் தொடங்க வேண்டியதில்லை. அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்ற யோசனையை சிலர் முன்வைக்கிறார்கள். ஆக, ரஜினி இனியாவது கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது ஏற்கெனவே இருக்கிற கட்சியில் இணையப் போகிறாரா? என்பதே இப்போதுள்ள குழப்பம்.