அதே டான்ஸ், அதே பாட்டு, அதே மேளத்துடன் வருவேன்: அதிமுக எம்எல்ஏ பேட்டி

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுகுட்டி. டி.டி.வி. தினகரனை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனனை ஆதரித்து ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்தார். குரூப் டான்சர்களோடு இவரும் ஆடி, பாடி ஓட்டு கேட்ட விதம் வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இரட்டை இலை சின்னம் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார்.
உங்கள் அணிக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது பற்றி...?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இரட்டை இலை யாரிடம் இருக்க வேண்டுமோ, அவர்களிடம் வந்துவிட்டது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது புதிய தெம்பை அளித்துள்ளது. இனி ஒன்றாக இணைந்து தொண்டர்கள் கட்சி பணியை மேற்கொள்வார்கள். தீர்ப்பு எதிராக வந்திருந்தால் சலசலப்பாகியிருக்கும். தீர்ப்பு சாதகமாக வந்ததால் தினகரன் பக்கம் போக நினைத்தவர்களெல்லாம் பிரேக்காகிவிட்டார்கள்.
தினகரன் ஆதரவாளர்கள் உங்கள் அணிக்கு வர வாய்ப்புள்ளதா...?
வந்துவிடுவார்கள். வரக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. எல்லோரும் வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.
மத்தியில் இருக்கும் பா.ஜ.க.தான் உங்கள் அணிக்கு கட்சி, சின்னம் கிடைக்க காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்களே...?
அப்படியென்றால் 8 மாதங்கள் இழுக்க வேண்டிய அவசியமில்லையே. கடைசி தொண்டன் வரைக்கும் கட்சியும், சின்னமும் சொந்தம். இரட்டை இலைக்கும் தினகரனுக்கும் என்ன சம்பந்தம். கட்சியையும், சின்னத்தையும் தேவையில்லாமல் சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன...
ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21 என்று அறிவிப்பு வந்துள்ளதே...?
அடிச்சி தூள் கிளப்பிடுவோம்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆர்.கே.நகருக்கு வருவீர்களா...?
கண்டிப்பாக வருவேன்.
அந்த டான்ஸ் உண்டா...?
ஓட்டு கேட்டு ஒரு வாரம் தங்கியிருந்து அதே டான்ஸ், அதே பாட்டு, அதே மேளத்துடன் வருவேன். டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் நிற்பதாக சொல்லியிருக்கிறாராம். ஆனால் ஜெயிக்கப்போவது இரட்டை இலைதான்.
-வே.ராஜவேல்