‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசிவருகின்றனர். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலீம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.-வின் கொள்கைகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தார்கள். ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது எப்படி சாத்தியம்? நடந்து முடிந்த மக்களைவை தேர்தலில்கூட சில மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடத்தினார்கள். ஒரு மாநில தேர்தலுக்கே இந்த அளவு கஷ்டப்படும்போது, இந்தியா முழுமைக்கும் அனைத்து தேறுதலைகளையும் நடத்திவிடுவோம் என்று கூறுவது எளிதான காரியம் அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தும் விதமாக பா.ஜ.க. அவர்களுக்கு அனுகூலமான விஷயங்களைச் செய்ய நினைக்கிறார்கள். மத்திய அரசு இதற்கு ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இதற்கான சட்டத்தை முதலில் கொண்டு வரவேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புதல் தருவார்களா? என்ற கேள்வியும் எழும். காரணம் ஒரே நாடு ஒரே தேரலுக்கான சட்டம் இயற்ற பல்வேறு அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டி வரும்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்றத்தேர்தல் வரப்போகிறது. ஆனால் 2029ல் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தினால், தமிழ்நாட்டில் மூன்று வருட ஆட்சிதான் நடக்கும். மூன்று வருட ஆட்சியோடு களைக்கப்படுமா? இல்லையென்றால் 2026 தேர்தல் நடத்தாமல் நேரடியாக 2029ல் நடத்துவார்களா? அந்த இடைப்பட்ட மூன்று வருடம் ஜனாதிபதி ஆட்சி வருமா? என பல்வேறு கேள்விகள் எழும். சமீபத்தில் கூட சில மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. அதனால் இந்த சிக்கலை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்ற விஷயம் இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அரசியல் சாசன பிரிவு 83,85,172,174,386 சட்டங்களைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அதனால் இது தேவையா? என்ற கேள்வியைத்தான் எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். ஏனென்றால் ஒரு இடைத்தேர்தலைக்கூட ஒரே நேரத்தில் நடத்த முடியாமல் இருக்கிறோம். இதையே கடினமாக நடத்தும்போது, ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தும்போது வரும் குழப்பங்களை எப்படிக் கையாளப்போகிறார்கள்?.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த முக்கிய காரணமாக தேர்தல் செலவுகளைச் சொல்கிறார்கள். ஆனால் தேர்தல் செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் பல்வேறு சட்டமன்றங்களை குடியரசு ஆட்சி அமல்படுத்த நினைக்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த அரசு துறைகளும் ஒன்றிய அரசு பக்கம் போக வாய்ப்பிருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் குடியரசு ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். முன்னதாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பொம்மை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றங்களை எளிதாக களைக்க முடியாது. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பிரிவு 386 சட்டத்தை திருத்தி, பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் குடியரசு ஆட்சி கொண்டு வருவதற்கான திட்டத்தை கொண்டு வரப்பார்க்கிறார்கள்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் 2029ஆம் ஆண்டிற்கு முன்பு ஆட்சியை களைத்துவிட்டு நேரடியாக ஒன்றிய அரசு ஆட்சிக்கு கொண்டு வந்து அதன் மூலம் 2029ல் பெரும்பான்மை ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாய்பாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அதனால் அவ்வளவு எளிதாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதே போல் பா.ஜ.க மைனாரிட்டி ஆட்சி செய்வதால், பீகார் முதலமைச்சர் நிதீஸ் குமார் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்வதும் கேள்விக்குறிதான். ஏனென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது அவர்களுக்கும் பாதிப்புதான். இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது பெரிய விஷயம் இல்லை. காரணம் அது பா.ஜ.க. அமைச்சரவை அவர்கள் எடுத்த முடிவு. அதனால் வருகின்ற குளிர்கால கூட்டுத்தொடரில் எதிர்க்கட்சிகள் விவாதிக்கத்தான் போகிறார்கள். அதில் பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்பார்கள். அப்போது உண்மைத்தன்மை வெளிப்பட்டுவிடும். ஒருவேளை எதிர்க்கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் பா.ஜ.க.-வின் கூட்டணிக் கட்சிகள் எப்படி ஒப்புக்கொள்வார்கள் என்பது முக்கியமானதாக உள்ளது. அப்படி அவர்கள் ஒப்புதல் மூலம் இந்த சட்டத்தை கொண்டுவந்தால் இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துடும் என்றார்.
Published on 14/12/2024 | Edited on 14/12/2024