நாட்டின் 70-வது குடியரசு தின தொடக்கத்தை கொண்டாடி வருகிறோம். நம்மை நாமே ஆண்டுகொள்வதற்கு சட்டம் ஏற்றப்பட்டு அது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமே குடியரசு தினம். ஆனால் இந்த தினத்தை நாம் கொண்டாட இன்னொரு காரணமும் உள்ளது. வேறொரு வரலாறும் உள்ளது. இருவேறு துருவங்கள், இருவேறு பாதைகள் கொண்டு ஒரு கொள்கையை நோக்கி சென்ற இரு மனிதர்கள் இந்த குடியரசு தின வரலாற்றுக்கு பின் இருக்கிறார்கள். ஒருவர் டாக்டர் அம்பேத்கர், மற்றொருவர் மகாத்மா காந்தி.
அம்பேத்கரும் குடியரசு தினமும்!
1946-ம் ஆண்டு இந்தியர்கள் தங்களை தாங்களே ஆண்டுகொள்வதற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. ஆம், விடுதலைக்கு முன் ஆங்கிலேயர் காலத்திலே அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இந்த சபைக்கு விடுதலை இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைமை ஏற்றார். இந்த சபையின் வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். உலகிலேயே அதிக பக்கங்களைக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவினுடையதுதான். இதற்கு காரணம், உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மிக சிறப்பான அரசியல் அமைப்புச் சட்டங்கள் பலவற்றை ஒன்றாக இணைத்து உருவாக்கியதுதான்.
1946-ம் ஆண்டு தொடங்கிய இந்த அரசியல் அமைப்பு நிர்ணய சபை 1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி முழுமை பெற்றது. ஆனால், இந்திய அரசு அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, 1950 ஜனவரி 26 வரை பொறுமைகாக்கப்பட்டு அன்றுதான் நமது அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
1949 நவம்பர் மாதமே முழுமை பெற்ற அரசியல் அமைப்புச் சட்டம் ஏன் ஜனவரி 26, 1950 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரியுமா? இதற்கு காரணம் வரலாற்று முக்கியத்துவம் வாயந்த நாளான 26 ஜனவரி 1930. பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோது மகாத்மா காந்தி அன்றைய தேதியைத்தான் சுதந்திர தினமாக அறிவித்தார். எனவே அதை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் குடியரசு தினத்தை ஜனவரி 26 அன்று கொண்டாடுகிறோம்.
காந்தியும் குடியரசு தினமும்!
1947 ஆகஸ்ட் 15-தான் சுதந்திர தினம். ஆனால் 1947-ம் ஆண்டுக்கு முன்பே சுதந்திர தினத்தை கொண்டாடியிருக்கிறது இந்தியா. ஆம், இந்திய விடுதலைக்கு முன்பு 1930-ம் ஆண்டே இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதற்கு காரணம் மகாத்மா காந்தி!
வணிகத்திற்காக இந்தியாவுக்குள் வந்து, அதன்பின் கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கி அதன்மூலம் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கியது பிரிட்டிஷ். இவர்கள் அடிமைப்படுத்துவதும், நாம் அடிமையாவதும் முதலில் தெரியாமல் இருந்தாலும், பின்னாளில் இவர்களிடமிருந்தும், இவர்களின் அடிமைத்தனத்தில் இருந்தும் விடுப்பட்டு சுதந்திரமாக வாழ இந்தியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். 90-களின் மத்தியில் இந்தப் போராட்டம் வலுபெறத் துவங்கியது. அதன் ஒரு பாகம்தான் 1930 ஜனவரி 26-ல் சுதந்திர தினம் கொண்டாடிய நிகழ்வு!.
1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ‘பூரண சுயராஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்’ எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே மாநாட்டில் இந்த தீர்மானத்தின் போராட்ட வடிவம் குறித்து காந்தியே முடிவு செய்து அறிவிப்பார் எனும் வேறொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் தீர்மானத்தின் போராட்ட வடிவத்தை அறிவித்த காந்தி, 1930-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை இந்தியர்கள் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். அதனை ஏற்று நாடு முழுக்க நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி “பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்” என்ற காந்தி கொடுத்த உறுதி மொழியை முழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். ஆம், 26 ஜனவரி 1930 அன்று இந்தியா முதல் சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதன் பின் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரிட்டிஷின் கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவை விட்டு முழுவதுமாக வெளியேறியது. இதன்மூலம் அன்றைய நாளிலிருந்து நாம் முழுமையான சுதந்திரத்தை கொண்டாடிவருகிறோம்.
நமது அரசியல் அமைப்புச் சட்டம், 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த காரணத்தினால் அன்றைய தினம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அதேவேளையில் சுதந்திரம் பெறுவதற்கு 17 வருடங்களுக்கு முன்பே காந்தி இந்த நாளை சுதந்திர தினமாக கொண்டாடினார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.