சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு கடிதம் பரவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை ''ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்'' என வலியுறுத்தி எழும்பூர் பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு குவிந்தனர். அவர்களில் சில ரசிகர்கள் நக்கீரன் இணையத்திற்கு அளித்த பேட்டி...
ஆட்டோ ஆண்டாள்:
நான், சென்னை எழும்பூர் மகளிர் அணி பகுதிச் செயலாளர். சமீபத்தில் தலைவருக்கு உடல்நலக்குறைவு எனச் செய்திகள் வந்தது. அதுக்கு தலைவர் நேத்து ட்விட்டர்ல பதில் சொல்லிட்டாரு. ‘ஆமா எனக்கு உடம்பு சரியில்லை என்பது உண்மை’தானு. ஆனா தமிழகத்த காப்பத்த தலைவரால மட்டும்தான் முடியும். அவர் வரனும். அவர் கண்டிப்பா வருவாரு. அவருக்காகக் களத்தல் இறங்கி வேலை செய்யத் தயாரா இருக்கோம். தமிழகத்த காப்பாத்த தலைவரால் மட்டும்தான் முடியும் அவர் கண்டிப்பா வரனும், வருவாரு. என்று தெரிவித்தார்.
ரஜினி:
நான், மத்திய சென்னை மாவட்ட எழும்பூர் பகுதி துணைச் செயலாளர், ட்விட்டர்ல நேத்து தலைவரு, 'உடம்பு முடியல என்பது உண்மைதான், ஆனா வாட்ஸ் ஆப்ல வர அறிக்கை பொய்'ன்னு சொல்லி இருக்காரு. கண்டிப்பா தலைவர் தமிழகத்தைக் காப்பாத்த வருவாரு. தத்தளிக்கிறது தமிழகம். மக்கள் வாழவேண்டும். அதற்குத் தலைவா நீங்கள்தான் ஆள வேண்டும். தலைவர் இல்லை என்றால் இனி எப்பவும் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இல்லை. வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ்.
தலைவர் வரமாட்டாருனு எல்லாக் கட்சியிலும் சொல்லிட்டு இருக்காங்க. ஆனா தலைவர் இன்னும் சொல்லல, அப்படி தலைவர் ‘நான் வரல’னு சொன்னாருனா ரசிகர்களாகிய நாங்களும் பொதுமக்களும் இருக்கிற இடத்துலே 'உண்ணாவிரதமிருந்து அவர கண்டிப்பா வரவைப்போம்'. தமிழ் மக்கள் நல்லா இருக்கனும்னா எங்கள பாத்துக் கண்டிப்பா அவரு வருவாரு. ஏற்கனவே அவர் வர ஐடியாலதான் இருக்காரு. ஊடகங்கள் எல்லாம் தப்பா போட்றாங்க அப்படி போடாதிங்க. கண்டிப்பா தலைவர் வருவாரு தமிழகத்த காப்பாத்துவாரு.
தலைவர் மார்ச் மாசம் லீலா பேளஸ்ல 'ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்' எல்லா மக்களுக்கும் தெரியனும், 'இப்ப இல்லனா, இனி எப்பவும் இல்ல'னு மக்களுக்குத் தெரியனும் மூல முடுக்கெல்லாம் மக்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சேருங்கனு சொன்னாரு. அத எப்படி சேர்ப்பதுனு யோசன பண்ணி, தலைவர் படம் போட்ட டீ-ஷர்ட்ல 'தலைவரும் நீயே, முதல்வரும் நீயே'னு முன்னாடிப்பக்கமும், பின்னாடிப்பக்கமும், மே மாசம் 31ஆம் தேதியில இருந்து, இன்று 152வது நாளான இன்னிக்கு வரைக்கும் இதத்தான் நான் போட்டுட்டிருக்கன்.
கல்யாணம், வாழ்வு, சாவு, நல்லது, கெட்டதுனு எல்லாத்துக்கும் நாங்க இதத்தான் போட்டுட்டிருக்கோம். இதுவரைக்கும் 320 பனியன் அடிச்சு இருக்கேன். எல்லா மாவட்டத்துலையும் தெரிஞ்ச நண்பர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கேன். நைட் ஒரு மணிக்கு எழுப்பினாலும் இந்த டீஷர்ட்தான் போட்டிருப்பேன். ஒரு நாளைக்கு 300, 400 பேரு இந்த டீஷர்ட் பாக்குறாங்க. எங்களால் முடிஞ்ச விழிப்புணர்வு இது. வாக்குச் சாவடியில, கையில் மை வெச்சிகிட்டு வெளியேவந்ததும் இந்த டீஷர்ட்ட கழட்டிடுவேன். அதுவரைக்கும் என் பிரச்சாரம் தொடரும்.” என்றார் தீவிரமாக.