ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து 1996-லிருந்து தமிழகத்தின் ஹாட்டாபிக்காக ஓடிக்கொண்டிருந்தது. 2017 டிசம்பர் 31—ஆம் தேதி, "நான் அரசியலுக்கு வருவது உறுதி' என ரசிகர்கள் முன்பாக உறுதியாக அறிவித்தார் ரஜினி. ரசிகர் மன்றமாக இருந்தது ரஜினி மக்கள் மன்றம் ஆனது. ர.ம.ம.விற்கு மா.செ.க்கள், மாநில இளைஞரணி அமைப்பாளர், மகளிரணி அமைப்பாளர், ந.செ.க்கள், ஒ.செ.க்கள் என அரசியல் கட்சிக்குரிய அத்தனை வேலைகளையும் சுறுசுறுப்பாக ஆரம்பித்தார் ரஜினி.
மக்கள் மன்றத்தினரும் படு சுறுசுறுப்பாக களம் இறங்கினார்கள். ஆனால் பத்தே மாதங்களில் அதாவது 2018 அக்.23—ஆம் தேதியன்று ரஜினியிடமிருந்து வந்த திடீர் அறிக்கை ஒன்று மக்கள் மன்றத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள். தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறோம்' ரஜினியின் இந்த அறிக்கையின் முன்பகுதியைப் படித்து அதிர்ச்சியானவர்கள், பின்பகுதியை சரியாக புரிந்து கொள்ளவில்லை.
சரி தலைவர் ஏதோ ஒரு முடிவுல இருக்காரு என நினைத்து ர.ம.ம.வினரும் தங்களுக்கு கொடுக் கப்பட்ட வேலைகளை செய்து வந்தனர். ஆனால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்த பிறகு எம்.பி.தேர்தல் வந்தது, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வந்தது. கடந்த ஜனவரி மாதம் உள்ளாட்சித் தேர்தலும் நடந்து முடிந்தது. ஆனால் "இந்த தேர்தல்கள் எதிலுமே மக்கள் மன்றத்தினர் போட்டியிடக்கூடாது, நானும் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை' என ரஜினி ஓப்பனாக அறிவித்ததும் மன்றத்தினரிடையே ஒருவித சோர்வை ஏற்படுத்தியது.
"காலா' படம் முடியட்டும் என காத்திருந் தனர். "பேட்ட'க்குப் பிறகு அரசியலில் பொளந்து கட்டுவார் என நம்பினார்கள். தர்பார்'க்கு அடுத்து தலைவரின் அரசியல் தர்பார் ஆரம்பமாகும் என்ற ஆவலில் இருந்தனர். ஆனால் ரஜினி சன் பிக்சர்ஸின் "அண்ணாத்த'வில் பிஸியாகிவிட்டார். இப்படி சினிமா பிஸிக்கிடையில்தான், கடந்த 05—ஆம் தேதி ர.ம.ம.வின் மா.செ.க்கள் கூட் டத்தைக் கூட்டினார்.
கூட்டம் முடிந்து போயஸ்கார்டன் வீட்டுக்குத் திரும்பிய பின் பேட்டி கொடுத்த ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து விரைவில் சொல்வேன். எனக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது, அதை பிறகு சொல்கிறேன்'' என்றார். ஆனால் நம்மிடம் பேசிய மா.செக்கள் பலரும் "அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து ரொம்பவே யோசிக்கிறாரு. ஏன்னா உறுப்பினர்கள் சேர்ப்பு, பூத் கமிட்டி அமைப்பது போன்றவற்றில் அவர் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை'' என்றனர். இதை 2020 மார்ச்.07-10 நக்கீரன் இதழ் அட்டைப்படக் கட்டுரையில் மிகத் தெளிவாக எழுதியிருந்தோம்.
அடுத்த இதழான 2020 மார்ச்.11-13 நக்கீரனிலும் கட்சித் தலைவராக மட்டும் தான் இருந்து, ஆட்சித் தலைவராக அதாவது முதல்வராக ஒரு நியாயவானை முன்னிறுத்துவது குறித்து ரஜினி யோசித்து வருவதாக "பாட்சாவின் ‘பாபா’ டெக்னிக்!' என்ற தலைப்பில் ராங்-கால் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் 12—ஆம் தேதி காலை 8 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜராகவும் என 11—ஆம் தேதி காலை ர.ம.ம.வின் மா.செ.க்களுக்கு ரஜினியிடமிருந்து உத்தரவு பறந்தது. அப்போது கூட பெரும்பாலான மா.செ.க்கள், கட்சிப் பெயரையும் திருச்சியில் மாநாடு நடத்தப் போகும் தேதியையும் தங்கள் தலைவர் அறிவிக்கப்போறார் என மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஆனால் ஒரு சில மா.செ.க்களுக்கோ, ஏதோ நடக்கப் போகுது, கண்டிப்பாக பாஸிட்டிவாக இருக்கப் போறதில்ல என தெரிந்துவிட்டது.
12—ஆம் தேதி காலை 7.30 க்கே மா.செ.க்கள் அனைவரும் மண்டபத்தில் ஆஜராகிவிட்டனர். அனைவரும் போயஸ்கார் டன் வீட்டிற்கு வரவும் என ரஜினியிடமிருந்து தகவல் வந்ததும் அலறியடித்து அங்கே ஓடினார்கள். ஆனால் ரஜினியோ அவர்களிடம் எதுவும் பேசாமல் 10 மணிக்கு லீலா பேலஸ் ஓட்டலுக்குக் கிளம்பிவிட்டார். "அங்கே தலைவர் பேசுறத இங்கே டி.வி.யில பாருங்க, அத முடிச்சுட்டு வந்ததும் உங்களிடம் பேசுவார்' என ரஜினி வீட்டிலிருந்தவர்கள் மா.செ.க்களிடம் சொல்லியுள்ளனர்.
ஒட்டுமொத்த மீடியாவும் லீலா பேலஸில் குவிந்திருக்க, சரியாக 10.31—க்கு பிரஸ் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் எண்ட்ரியானார் ரஜினி. மேடையில் சேர் எதுவும் போடவில்லை, ஸ்டேண்டிங் மைக் மட்டும்தான். நேராக மைக் முன் வந்த ரஜினி, இடதுபுறம் திரும்பி, தண்ணீர் என சைகை மூலம் காண்பிக்க, தண்ணீர் பாட்டிலையும் டிஷ்ஷு பேப்பரையும் வைத்தார் உதவியாளர்.
"எனது அழைப்பை ஏற்று இங்கே வந்த மீடியாக்களுக்கு நன்றியும் வணக்கமும். நான் அரசியலுக்கு வரப்போறதா 2017 டிச.31ஆம் தேதி சொன்ன போது இங்கே சிஸ்டம் சரியில்லை, அதை சரி செய்ய வேண்டும் என சொன்னேன். அதற்காக மூன்று திட்டங்களை வைத்திருக்கிறேன். அதில் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி தொடர்பானது. இரண்டாவது திட்டம் நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இப்போதிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 60 வயதிற்கு மேலாக இருக்கிறது.
அதனால் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு 60—லிருந்து 65 சதவிகிதம், வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.கள் இவர்களுக்கு வாய்ப்பு. மூன்றாவது திட்டம் கட்சித் தலைமையையும் ஆட்சித் தலைமையையும் பிரிப்பது. இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்துப் பார்த்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலைக் கொண்டு வர வேண்டும்'' இப்படி ரஜினி பேசியது எல்லாமே ஏற்கனவே எழுதி சரி பார்க்கப்பட்ட அறிக்கைதான்.
இதற்கடுத்து ரஜினி பேசியது தான் மக்கள் மன்றத்தினருக்கு ஹை வோல்டேஜ் அதிர்ச்சியைக் கொடுத்தது. தமிழகத்தில் டி.எம்.கே., ஏ.டி.எம். கே.ன்னு இரண்டு மிகப்பெரிய கட்சிகள் இருக்கு. டிஎம்கே.விடம் படைபலம், பணபலம், பூத் கமிட்டி பலம் இருக்கு. ஆளும் கட்சியான ஏ.டி.எம்.கே.விடம் கஜானா பலம் இருக்கு. இவர்களுடன் போட்டி போட்டு அரசியல் நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த தலைவர் பேரரறிஞர் அண்ணா. தம்பி வா தலைமை ஏற்க வான்னு சொல்லி எழுச்சியை ஏற்படுத்தினார். இந்திய மாநிலங்கள் முழுவதிலும் காங்கிரஸ் ஆட்சி செய்த போது தமிழ்நாட்டில் மட்டும் மாநிலக் கட்சியை ஆட்சியில் உட்கார வைத்தனர். எனவே மீடியா நண்பர்களே தமிழ்நாட்டில் அப்படி ஒரு எழுச்சி உருவாக நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு எழுச்சி உருவானால் அப்ப வர்றேன் நான்'' என பேசியபடி இடது கையை ஆவேசமாக நீட்டினார் ரஜினி.
பேச ஆரம்பித்த 15 நிமி டங்களில் ஒரு நிமிஷம் என்றவாறு இடதுபுறம் இருந்த பெரிய டிஜிட்டல் ஸ்கிரீனைக் கைகாட்டினார் ரஜினி. சில நிமிடங்கள் தாமதமானதும் "என்னாச்சு' என மைல்டாக கோபம் காட்டினார். ஸ்கிரீன் ஓடத் தொடங்கியது. "1996-லேயே முதல்வர் பதவி என்னைத் தேடி வந்தது. அப்போ 46 வயசுலேயே அதை வேணாம்னு சொன்னவன். இப்ப 68 வய சாகுது. இப்ப போய் முதல்வர் பதவின்னா அதவிட பைத்தியக் காரத்தனம் வேறெது வும் இருக்க முடியாது'' இது 2017-ல் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடையே ரஜினி பேசியது, இதுவரை வெளியில் வராதது.
அந்த ஸ்கிரீன் சீன் முடிந்ததும் "இப்ப எனக்கு 71 வயசாகுது, மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கேன்'' என்ப தையும் குறிப்பிட்டார் ரஜினி. 11.01-க்கு பேச்சை முடித்து, கேள்வி களைத் தவிர்த்துவிட்டு, விறுவிறுவென காரில் ஏறி போயஸ்கார்டன் வீட்டிற்குச் சென்று மா.செ.க்களிடம் 45 நிமிடம் மனம் விட்டுப் பேசினார் ரஜினி.
ரஜினியின் மாற்று அரசியல் குறித்து வடமாவட்ட மா.செ. ஒருவரிடம் பேசிய போது, "இதுக்காங்க இத்தனை வருஷம் பாடுபட்டோம்? இளைஞர்களுக்கு வாய்ப்புன்னு சொல்றாரு, ஏன் எங்க மன்றத்துல இளைஞர்களே இல்லையா? எங்களுக்கு சம்பந்தமேயில்லாத ஆளு எம்.எல்.ஏ.ஆக நாங்க ஏன் கஷ்டப்படணும்? மன்றத்தினர் செயல்பாடு எப்படி இருந்தாலும் மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடுவாங்க, தைரியமா கட்சி ஆரம்பிக்கங்கன்னு தலைவருக்கு ஆலோசனை சொல்லும் ரெண்டு பேர் சொல்லியும் அவர் கேட்கல'' என்றார் கவலையுடன்.
தென்மாவட்ட மா.செ. ஒருவர் நம்மிடம் பேசும் போது, எழுச்சி எழுச்சின்னு பேசிருக்காரு. மக்களிடம் போராட்டமோ, எழுச்சியோ ஏற்பட்டாலே இவருக்குப் பிடிக்காதே, அப்புறம் எப்படி எழுச்சி ஏற்படும். ஒண்ணுமே புரியலங்க'' என்றார் விரக்தியாக.
ஆனால் நெல்லை மாவட்ட ர.ம.ம.வின் இணைச் செயலாளர் பகவதிராஜன் தலைமையிலான ரசிகர்கள் ரஜினியின் புதிய அறிவிப்பை பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அதேபோல் தென்சென்னை கிழக்கு மா.செ. 'சினோரா' அசோக் நம்மிடம் பேசும் போது, "தலைவர் எதிர்பார்க்கும் எழுச்சியை தமிழ் நாட்டில் கண்டிப்பாக ஏற்படுத்துவோம்'' என்கிறார் நம்பிக்கையுடன்.
"அண்ணாத்த' ரஜினியின் லேட்டஸ்ட் அறிவிப்பால் ரசிகர்களுக்கு ஏமாற்றமோ இல்லையோ பா.ஜ.க.வின் அகில இந்திய மேலிடம் படு அப்செட்டாகி விட்டது.
-ஈ.பா.பரமேஷ்வரன், து.ராஜா