Skip to main content

என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க... அதிமுக அமைச்சர்களிடம் எகிறிய அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சி! 

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரையும் தங்கமணியையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த சந்திப்பில் அமைச்சர்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இது குறித்து விசாரித்தோம்.

 

admk



"டெல்லியைப் போல சென்னை வண்ணாரப் பேட்டையில் நடக்கும் போராட்டம் முடிவுக்கு வராமல் இருப்பதும், இத்தகைய போராட்டங்கள் தமிழகம் முழுக்க வெடிப்பதும் எடப்பாடி அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அதேசமயம், குடியுரிமைச் சட்டத்தோடு இணைந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தும் முகமாக ஏப்ரல் 1-ந்தேதி முதல் கணக்கெடுப்பை எடப்பாடி அரசு துவங்க வேண்டும்.

இதனை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், எடப்பாடியை சந்தித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நெருக்கடி தந்திருக்கிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துகின்றன. 9-ந்தேதி சட்டமன்றம் கூடுகிறது.
 

admk



சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களுக்கு எதிராக, சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க.வும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்த நிலையில், ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களுடன் இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என ஆலோசித்தார் எடப்பாடி. மற்ற மாநிலங்கள் நிறைவேற்றியது போல நாமும் தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்றும், டெல்லியை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்க வேண்டாம் என்றும் இருவேறு கருத்துக்களை அமைச்சர்கள் சொல்ல, அமித்ஷாவை சந்தித்துப் பேசுவது என தீர்மானித்தனர். இதனையடுத்து, அவரது அப்பாயின்ட் மெண்ட் கேட்டு தொடர்பு கொண்டபோது, "ஹோம் மினிஸ்டரே (அமித்ஷா) உங்களை அழைக்கத்தான் திட்டமிட்டிருக்கிறார். உடனே புறப்பட்டு வாருங்கள்' என தெரிவித்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவசரம் அவசரமாக ஜெயக்குமாரையும் தங்கமணியையும் அனுப்பி வைத்தார் எடப்பாடி'' என்கிறார்கள் அரசுக்கு நெருக்கமான உயரதிகாரிகள்.

அமித்ஷாவுடனான அமைச்சர்களின் சந்திப்பு குறித்து டெல்லியில் விசாரித்தபோது, "மத்திய உளவுத்துறை கொடுத்திருந்த ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசிய அமித்ஷா, "குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறுவது சாத்தியமே இல்லைன்னும் இதில் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லைன்னும் பிரதமர் தெளிவுபடுத்திய பிறகும், தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தை உங்களால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை' என சொல்ல, அரசின் முயற்சிகளை விளக்கிய மாநில அமைச்சர்கள் "எந்த சமாதானத்தையும் முஸ்லிம்கள் ஏற்காத நிலையில்தான், உங்களை சந்தித்து ஆலோசிக்க நினைத்தோம்' என சொல்லியுள்ளனர். "தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டத்துக்கு உங்க அரசின் சப்போர்ட் இருக்கு. போராட்டம் நடத்திக்குங்க. ஆனா, எங்களை எதிர்க்காதீங்க என முஸ்லிம் லீடர்களிடம் சொல்லியிருக்கீங்கன்னு உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுது. எதுக்கு இந்த டபுள் கேம்?' என கடுமை காட்டியிருக்கிறார் அமித்ஷா.

 

bjp



இதனை மறுத்துப்பேசிய அமைச்சர்கள் இருவரும், "போராட்டத்துக்கு அனுமதிக்கலைன்னா கோர்ட்டுக்கு போய்டுறாங்க. அப்புறம் அனுமதி கொடுக்க வேண்டியதிருக்கு. சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு வழி இல்லையா?' என கேள்வி எழுப்ப, "இது மத்திய அரசின் பாலிஸி மேட்டர். ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த சட்டம். பரிசீலிக்க முடியுமான்னு ஈசியா கேட்கிறீங்க?' என்று காட்டமாகப் பேசிய அமித்ஷா, "சட்டத்துக்கு எதிராக நீங்க தீர்மானம் நிறைவேற்றினாலும் நிறைவேற்றாமல் போனாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அது உங்க இஷ்டம். ஆனா, சட்டம்- ஒழுங்கு சரியா இருக்கணும். அதுல பிரச்சனைன்னா சும்மா இருக்க மாட்டேன். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வழியைப் பாருங்க' என எச்சரித்திருக்கிறார். அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமைச்சர்கள் அடுத்த ப்ளைட்டைப் பிடித்து சென்னைக்கு திரும்பி விட்டனர்'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.


டெல்லியில் இந்தச் சந்திப்பு நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சென்னையில் எடப்பாடியை சந்தித்தார் தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ். அந்த சந்திப்பிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்கிற அமித்ஷாவின் உத்தரவை வெளிப்படுத்தியுள்ளார் முரளிதரராவ்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கும் முடிவில் இருக்கிறது மோடி சர்க்கார். அ.தி.மு.க.வுக்கு வாய்ப்புகள் குறித்தும் அமித்ஷா சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. "முதலில் உங்கள் முதல்வரை (எடப்பாடி) தெளிவாக ஒரு முடிவை தெரிவிக்கச் சொல்லுங்கள். அமைச்சரவையில் சேர்க்கிறதா வேண்டாமான்னு பிரதமர் பிறகு முடிவு செய்வார்' என அமைச் சர்களிடம் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. அனைத்தையும் சென்னை திரும்பியதும் எடப்பாடியிடம் அமைச்சர்கள் விவரித்துள்ளனர்.

இதற்கிடையே, மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இணையுமா என்பது பற்றி விசாரித்த போது, "மத்திய அமைச்சரவையில் மகனுக்கு வாய்ப்பு வாங்கணும்ங்கிறது ஓ.பி.எஸ்.சின் கனவு. அதேபோல எடப்பாடியின் சிபாரிசில் அமைச்சராகணும்ங்கிறது வைத்திலிங்கத்தின் கனவு.


ஆனால், எடப்பாடியோ, சட்டமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தேவையில்லைன்னு நினைக்கிறார். மத்திய அமைச்சரவையில் சேர்ந்துகொண்டால் கூட்டணி வைத்தாக வேண்டிய நிர்பந்தம் உருவாகும். அதனால் மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறுவதை எடப்பாடி விரும்பவில்லை'' என்கிறார்கள்.

இந்த டெல்லி பயணத்தில், கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருக்கும் செட்டில்மெண்ட் சரி செய்யப்பட்டிருக்கிறது என்றும் மேல்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.