Skip to main content

“அதில்தான் அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் வெற்றி பெறுவார்கள்” - ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Dmk candidate prakash interview at lok sabha election in erode

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...

ஈரோடு மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்ட பிறகு, நேரடியாக திமுக வேட்பாளராக அறிமுகமாவது நீங்கள் தான். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

“எங்கள் கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்களை கூட எங்கள் வேட்பாளராகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இதுவரைக்கும் அவர்களை மாற்று வேட்பாளராக நாங்கள் பார்க்கவில்லை. அதனால், நான் தான் முதல் வேட்பாளர் என்று நான் பார்க்கவில்லை. திமுக கூட்டணியில் இருக்கிற வேட்பாளர்கள் யார் நின்றாலும் அது தி.மு.க. வேட்பாளராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்”.

உங்களைப் பற்றி விசாரித்ததில், நீங்கள் எம்.எல்.ஏ சீட்டு கேட்டதாகவும், அதற்கு பதில் தேசிய அளவில் எம்.பி சீட்டு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறதே?

“எங்கள் தலைவர் எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை நான் சிறப்பாக செய்வேன் என்று வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்திற்கு நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால் அதற்கு முன்பு பாராளுமன்றத்திற்கு தான் வாய்ப்பு கேட்டேன். 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு கேட்டேன். அதே போல் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கும் கேட்டேன். அதன் பின்பு, மூன்று முறை சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு கேட்டேன். சட்டமன்றத்தில் எப்படி முதல்வர் கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்தினோமா அதே போல் பாராளுமன்றத்தில் எங்கள் கூட்டணியில் ஆட்சி அமைக்கும் கட்சியினுடைய திட்டத்திற்கு எங்களுடைய தலைவர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு அந்த திட்டத்தை இங்கு கொண்டு சேர்ப்பதில் நான் முக்கிய பங்களிப்பேன்”.

தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் மாநில அரசுக்கு துரோகம் தான் செய்கிறது. அதனால் 40 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவுடன் அதிமுக தான் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அதேபோல் மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் இதை தகர்த்து நீங்கள் எப்படி ஆட்சியை பிடிப்பீர்கள்?

“நாம் அனைவரும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம். வெளி மாநிலத்தில் இருந்தால் கூட ஒருவேளை சந்தேகம் வரலாம். தமிழ்நாட்டினுடைய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் யார் இரண்டாவது இடத்தை பிடிப்பார்கள் என்ற போட்டிதான் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இருக்கிறது. அதில் தான் அவர்கள் வெற்றி பெற முடியும் என்பதே தவிர ஒரு போதும் முதலிடத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாது

40 தொகுதிகளிலும் எங்கள் தலைவரின் சாதனை திட்டங்கள் தான் முதலிடத்தில் இருக்கிறது. எங்கள் தலைவர் சொன்னால், அதை நாட்டு மக்கள் ஆணித்தரமாக நம்புவார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது எப்போதுமே தேர்தலில் ஒரு கதாநாயகன் போல தான். ஏனென்றால், அவர்கள் சொன்னால் அதை செய்வார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அதனால் 40 தொகுதிகளிலும் முகமாக தெரிவது மு.க.ஸ்டாலின் மட்டும்தான்”.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் வலுவான வேட்பாளரை நாங்கள் நிறுத்தியிருக்கிறோம். அதனால் நாங்கள் தான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்களே?

“அவரை நாங்கள் அ.தி.மு.க வேட்பாளராகவே நாங்கள் பார்க்கவில்லை. பா.ஜ.க வேட்பாளராக தான் பார்க்கிறோம். ஏனென்றால், அவரது விளம்பரங்கள் அனைத்தும் பா.ஜ.க.வை சார்ந்ததாக தான் இருக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் தான் இருக்கிறார்கள். அதனால் அவரை அ.தி.மு.க வேட்பாளராக நாங்கள் பார்க்கவில்லை. அவரை அவரது கட்சி நிர்வாகிகள் கூட அப்படிப் பார்க்கவில்லை. அதுதான் உண்மை”.

தி.மு.க மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் வைத்து வருகிறது. அதைத் தாண்டி மக்களிடத்தில் உங்கள் கட்சி கொள்கைகள் அனைத்தையும் எப்படி எடுத்துச் செல்வீர்கள்?

“எங்களது வாரிசு அரசியல் தான். எனது அப்பா 50 ஆண்டுகளாக தி.மு.கவின் கிளை செயலாளர் தான் இருந்தார். ஒரு கிளைச் செயலாளர் மகனுக்குத்தான் இந்த சீட்டை கொடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த கட்சியில் உறுப்பினராகி 34 வருடமாக இந்த கட்சியில் பணியாற்றி வருகிறேன். உழைப்பில் தான் நாங்கள் வாரிசுகளே தவிர போலியான வாரிசுகள் எல்லாம் கிடையாது. அதனால், நாங்கள் உழைப்பின் வாரிசு”.

இந்த தொகுதியில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் குடிநீரில் கலந்து மாசுபடுகிறது. இது பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. அதற்கு தீர்வு என்ன?

“2019 ஆம் ஆண்டில் கலைஞரின் ஆட்சியில் சாயக்கழிவு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ.750 கோடி மதிப்பீட்டில் கழிவு நீரை கடலுக்கு கலக்கும் திட்டத்தை அறிவித்தார். அப்போது மத்தியில் நமது கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளவில் மாநில அரசும், ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கி இந்த செயல் திட்டம் உருவானது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் வந்தது. இதை அ.தி.மு.கவின் ஆட்சியில் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். மத்தியில் மோடி வந்த பிறகும் அதை கிடப்பில் போட்டு விட்டார். இப்போது எங்களுடைய தேர்தல் அறிக்கையில் எங்கள் குழுவிற்கு நான் மூன்று திட்டத்தை தான் சொன்னேன். ஒன்று பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். அதே போல், அகில இந்திய அளவில் கேன்சர் இன்ஸ்டியூட் வேண்டும் என்றும், அதற்குண்டான சிகிச்சை மையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

பேட்டி தொடரும்...