தமிழீழ விடுதலைக்காக இலங்கை ராணுவத்தை எதிர்த்து போர் செய்தவர்கள் விடுதலை புலிகள். இன்று அவர்கள் பெரும் கூட்டமைப்பாக இல்லை என்பது உண்மை என்றாலும்கூட, கடல் கடந்து இருக்கும் தமிழ்நாட்டின் அரசியலையும்கூட இன்றுவரை நடத்தும் காரணிகளில் ஒன்றாக அவர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இறுதிப்போரில் விடுதலை புலிகள் தோல்வியடையும்வரை அவர்கள் ஒரு தனி அரசாங்கத்தையே அங்கு நடத்திக்கொண்டிருந்தனர் என்பது உண்மை. அது ஒரு சாதாரண நிர்வாகமாக இருக்கவில்லை. அரசு பேருந்துகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், காவல்துறை, இராணுவம், உளவுப்பிரிவு, என முழு தனி அரசையே நடத்தினர். அந்தவகையில் அவர்களின் முக்கிய தொடர்பு சாதனமாக இருந்தது புலிகளின் குரல் என்ற வானொலி. புலிகளின் குரல் ஒலிக்கத்தொடங்கியது 1990ம் ஆண்டின் இதேநாளில்தான்.
தொடக்கத்தில் இது இரவு 8 முதல் 9 என ஒருமணிநேரம் மட்டுமே ஒலிபரப்பப்பட்டது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப்பட்டது. இசைப்ரியா, சக்திவேல், நாவண்ணன், தியாகராசா பிறேமராசன், ஆதிலட்சுமி சிவகுமார் போன்ற பல படைப்பாளிகளை இந்த வானொலி உருவாக்கியது. இந்த வானொலி ஒரு பொழுதுபோக்கு வானொலியாக இல்லாமல், போர் காலங்களில் மக்கள் - புலிகளுக்கிடையேயான தொடர்பாக இருந்தது. புலிகள் மக்களுக்கு இதன் வழியாக பல அறிவுரைகளை வழங்கினர். அவற்றுள் மிக,மிக முக்கியமானது எந்தெந்த பகுதி மக்கள் எங்கெங்கு செல்லவேண்டும் எனக்கூறியது. இதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். மக்களை வெவ்வேறு பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தியபின் புலிகள் அங்கு களமிறங்கி அந்த இடங்களையெல்லாம் மீட்டனர். நிலத்தை மீட்டதில் புலிகளின் குரலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சிங்கள மக்களுக்காகவும், இலங்கை ராணுவத்திற்காகவும் புலிகளின் குரல் சிங்கள சேவையை தொடங்கியது.
புலிகளின் குரல் கடந்துவந்த பாதை மிக,மிக கடுமையானது. போர் காலங்களிலும் மற்ற சில நேரங்களிலும் அடிக்கடி விமானத்தாக்குதலுக்கும், எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும். யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது போகும் வழியில் கிடைக்கும் நேரங்களில் ஒலிபரப்பை மேற்கொண்டனர். கிடைக்கும் நேரங்களிலெல்லாம் அங்குமிங்கும் அவசர,அவசரமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இலங்கை அரசும் இதற்கு நிறைய இடர்பாடுகளை அளித்தது. புலிகளின் குரல் ஒலிபரப்பாகி கொண்டிருந்த அலைவரிசையில் பேரிரைச்சலை உருவாக்கியது. அப்போதெல்லாம் அலைவரிசையை மாற்றி ஒலிபரப்பிக்கொண்டிருந்தது, அந்தக் குழு. பல வானொலிகள் குறிப்பிட்ட மாவட்டத்திலோ, வட்டத்திலோ மட்டுமே கேட்க முடியும். அப்படி இருக்கையில், புலிகளின் குரலை தமிழ்நாடு வரை கேட்க வைத்தது, அந்த வானொலியின் சாதனைகளுல் ஒன்றாகும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டபின் புலிகளின் குரல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தது. 23 தடவை விமான குண்டுவீச்சிற்கு ஆளாகி மீண்டெழுந்த இவ்வானொலி நிலையம், 2006ம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் விமானப்படை தாக்குதலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. விடுதலை புலிகள் வலுப்பெற, புலிகளின் குரல் மிக முக்கியபங்காற்றியது. புலிகளின் குரலை அடக்கியதும், விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.