திரைப்படங்களில் அனைவரையும் சிரிக்கவைத்த காமெடி நடிகை மதுமிதா, சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்று நம் அனைவரையும் பதற வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு என்ன நேர்ந்தது, எதனால் அவர் தற்கொலை முயற்சிக்கு சென்றார் என்பது குறித்தான கேள்விகளை அவரிடம் நேரடியாக முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது. நலமாக இருக்கிறீர்களா?
நான் நன்றாக இருக்கிறேன். உடல்நிலை 90 சதவீதம் சரியாகிவிட்டது. மனநிலை சரியாகி கொண்டே இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்ற எண்ணம் எதனால் உங்களுக்கு வந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல் சீசனில் இருந்தே என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் அதில் கலந்து கொள்ள விரும்பவில்லை. அதனால் அவர்களின் அழைப்பை நிராகரித்தேன். ஒருகட்டத்தில் அவர்கள் என்னை தொடர்ந்து அழைத்தார்கள். எனக்கு தெரிந்தவர்கள் கூட நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போகலாமே? என்று என்னிடம் தெரிவித்தார்கள். பிறகு, நானும் அதில் கலந்து கொள்ளலாமே என்று நினைத்து என் கணவரிடம் இதுதொடர்பாக விவாதித்தேன். அவரும் உனக்கு பிடித்திருந்தால் கலந்து கொள் என்று என்னிடம் தெரிவித்தார். எனக்கு அதிகம் கோபம் வரும். இதுபத்தி நான் அவர்களிடம் கூறியபோது அவர்கள், நீங்கள் நீங்களாகத்தான் இருக்க வேண்டும், அதை அடிப்படையாக வைத்து தான் நிகழ்ச்சியை கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்கள். எனக்கு அவர்கள் கூறியது பிடித்திருந்தது. எனக்கு ஏற்ற வகையில் இருந்ததால் நான் அதில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.
நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை பற்றிய புரிதல் இருந்ததா? தமிழ் பெண் என்று சொல்லும் நீங்கள் நிகழ்ச்சியில் தாலி அணியாமல் சென்றது ஏன்?
இதை பற்றி நான் முன்பே சொல்லி இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் எனக்கு நேரடியாக அமையவில்லை. நான் முதலில் ஷோவுக்கு போகும் போது திருமணம் ஆகி மூன்று மாதங்கள்தான் ஆகி இருந்தது. ஷோவுக்கு போகும்போது கேரவேனில் வைத்து நாம் கொண்டு செல்லும் பொருட்களை எல்லாம் பார்ப்பார்கள். பெரிய சைஸ் நகைகளை எல்லாம் தவிர்க்க சொன்னார்கள். மைக்கில் அது உரசும் என்பதால் சொல்கிறோம் என்றார்கள். தாலி அணிய வேண்டாம் என்று சொன்னபோது. நான் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் தான் ஆகி உள்ளது, நான் தமிழ் கலாச்சார முறைகளை அதிகம் பின்பற்றும் பெண், ஆகையால் என்னால் தாலி அணியாமல் இருக்க முடியாது என்று கூறினேன். ஆனால் அவர்கள், இந்த சீசனில் நிறைய டாஸ்க் இருப்பதால், யாராவது தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் உங்களுக்கு தான் கஷ்டமாக இருக்கும், ஆகையால் நீங்கள் அணியாமல் வந்தால் இதை தவிர்க்கலாம் என்று கூறினார்கள். அவர்கள் சொல்வது எனக்கு சரி என்று பட்டதால், நானும் அதற்கு சம்மதித்தேன். என் கணவரிடம் இது பற்றி கூறியபோது அவரும் இதற்கு ஒத்துக்கொண்டார். எனவே இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
உங்களை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?
பத்திமா மேடம் உனக்கு நிறைய ஆதரவு வெளியில் கிடைக்கும் என்று கூறியதில் இருந்து போட்டியாளர்களில் சில பேர் என்னை எதிரியாகவே பார்த்தார்கள். அவர்களால் நேரடியா எதுவும் செய்ய முடியாததால், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அதனால் காவிரியை பற்றி நான் பேசிய விஷயங்களை பெரிதுபடுத்தி என்னை காயப்படுத்தினார்கள். அந்த வீடியோவை வெளியிட்டால் அங்கு என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் தெரியவரும். ஆனால் இந்த நிமிடம் வரை அதை ஏன் வெளியிடவில்லை. அவர்கள் மீதுள்ள குற்றம் இதன் மூலம் தெரியவரும் என்று நினைக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தினம்தினம் அரசியல் பேசுகிறார்கள். சில விஷயங்கள் காட்டப்படும். சில விஷயங்கள் அதில் வராது. நிகழ்ச்சி 40 நிமிடங்கள் மட்டுமே ஒளிப்பரப்பாகிறது. அதில் அவர்களுக்கு தேவையானதை மட்டும் ஒளிபரப்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.