Skip to main content

மெய்வழிச்சாலைக்கு ‘ஹெல்மெட்’ தேவையில்லை!- தலையைக் காக்கும் தலைப்பாகைகள்! 

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காட்டும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டார்.

சிவகாசியிலும் அம்பேத்கர் சிலை அருகில் காவலர்கள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை ஹெல்மெட் அணியாத ஒருவர் ‘ஹாயாக’கடந்து கொண்டிருந்தார்.  தலையில் அவர் வெள்ளை டர்பன் அணிந்திருந்தார். அவரைப் பின்தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்தோம். 

“இந்திய சட்டத்தை மிகவும் மதிப்பவர்கள் நாங்கள். ஆனாலும், ஹெல்மெட் அணிய வேண்டியதில்லை. ஏனென்றால், ஹெல்மெட் அணிவதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2007-ல் தமிழ்நாடு அரசு விதிவிலக்கு ஆணை பிறப்பித்துவிட்டது. வாகன சோதனை நடத்தும்  காவல்துறையினர் ‘ஏன் ஹெல்மெட் அணியவில்லை?’என்று கேட்கும்போது, அந்த விதிவிலக்கு ஆணை நகலைக் காட்டுவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்று தூய தமிழில் நம்மிடம் விளக்கினார்‘சாலை’பழனிசெல்வராஜ். 

meivazhi sabha helmet exempting tn government abstract


அது என்ன விதிவிலக்கு ஆணை?
 

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989-ல் வரைவு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மெய்வழி சபை அல்லது மெய்வழி சாலையைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்யும்போது தலைப்பாகை அணிந்துகொண்டு, பின் இருக்கையில் பெண் அல்லது குழந்தையுடன் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹெல்மெட் அணிவதிலிருந்து மெய்வழி சாலையைச் சேர்ந்தவர்கள்  விலக்கு பெற்றதன் பின்னணி இது – 
 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலுக்கு அருகிலுள்ள கிராமம்தான் மெய்வழிச்சாலை. இங்கிருப்பவர்கள், மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் என்ற  மத அடையாளத்துடனும், வித்தியாசமான பழக்க வழக்கங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மெய்வழி சபைகள் உள்ளன.  இந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்றும் பெண்கள் அனந்தகிகள் என்றும் புதிதாக இம்மதத்தைத் தழுவியவர்கள் நன்மனத்தவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். மத விதிமுறைப்படி, ஆண்கள் தலையில் முண்டாசு அணிகின்றனர். ஏற்கனவே தலைப்பாகை அணிந்திருப்பதால் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமில்லை என்று மெய்வழி சாலையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். அதனடிப்படையில்தான், அவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமில்லை என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  

meivazhi sabha helmet exempting tn government abstract


மெய்வழிச்சபையின் சபைக்கரசர் எனப்படும் மெய்வழி சாலை வர்க்கவான் என்பவர், 2015-ல் அனைத்து நிர்வாகிகளுக்கும், வேதம் ஓதும் பாடசாலை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையே அனுப்பியிருக்கிறார். அதில், இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் நம் குலமக்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விதிவிலக்கு ஆணையின் நகல் ஒன்றினை, தவறாமல் கைவசம் வைத்திருக்க வேண்டும். இது தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 

meivazhi sabha helmet exempting tn government abstract


மெய்வழிச்சாலை என்பது கடவுள் உண்டாக்கிய ஊர் என்றும், பூலோக கயிலாயம் என்றும், அறநெறி நீதி நகரம் என்றும், சாதி மதங்களை ஒன்று சேர்த்த சமரச வேதசாலை என்றும்,  பிறவிப் பெருங்கடல் கடந்து இறையடி சேர்க்கும் எல்லை என்றும், தேவ பூமியில் நடக்கும் பரிசுத்தப் பிரயாணம் என்றும் ஆருயிர்ப்பிறவியர் என்றும் தனித்தன்மையுடன் வாழ்ந்துவரும் அனந்தர்களும்,  அனந்தகிகளும், நன்மனத்தவரும் இந்த ஹெல்மெட் விதிவிலக்கு குறித்து அலட்டிக்கொள்வதில்லை. சாதாரணமாகவே கடந்து செல்கின்றனர்.