நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. இந்த முறை புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும், இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இதில், அதிமுக மூன்றாவது அணியாக களம் இறங்குகிறது. இந்த முறை அதிமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை புதுச்சேரி மக்களவை திருபுவனை தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தனை அறிவித்தது.
அதிமுக தலைமை இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு அளித்தது புதுச்சேரியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வேட்பாளர் அறிமுகம் புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் முடித்த தமிழ்வேந்தன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 34 வயதான தமிழ்வேந்தன், புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் உள்ளார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த தமிழ்வேந்தன் தீவிரமாக கட்சிப்பணிகளை முன்னின்று செய்து வந்தார். இவரின் செயல்பாடுகளை கவனித்த புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பரிந்துரை செய்ய சீட் உறுதியானது என சொல்கின்றனர் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
வேட்பாளர் தேர்வு பற்றி புதுச்சேரி அதிமுகவினர் பேசுகையில், இளம் வயதான தமிழ்வேந்தன் மீது அதிமுக தலைமை நம்பிக்கை வைத்து முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக துணிச்சலுடன் அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வேந்தன். மீனவர் சமுதாயத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் எளிமையான குடும்ப பின்னணியில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையை நேரில் கண்டதால் நன்கு படித்து தமிழ்வேந்தன் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ முடித்தார். அதன் பின், ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலுக்கு சென்று அதிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனிடையே, பொருளாதார ரீதியாக பின்தங்கி கல்வி கற்கும் மாணவர்கள், சுய தொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள், விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்கள், வயதானவர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களின் உணவுக்கான ஏற்பாடுகள் என தனது வருமானத்தின் ஒரு பகுதியை சத்தம் இன்றி செலவு செய்து வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த 2013 ஆம் ஆண்டு, திராவிடக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட தமிழ்வேந்தன் அதிமுகவில் இணைந்து மக்கள் சேவையை அரசியல் களத்திலும் தீவிரமாக செய்து வந்தார். இதையெல்லாம் கவனித்த அதிமுக தலைமை சரியான நேரத்தில தமிழ்வேந்தனுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டு புதுச்சேரிக்கு பரப்புரைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழ்வேந்தனை அறிமுகப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டிய தமிழ்செல்வன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தனது பலத்தை காண்பித்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ''புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்..'' என புதுச்சேரி மக்களின் பிரதான கோரிக்கையை முன்வைத்து பேசியிருந்தார். இந்த முறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்பதே அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது.
போதையின் பிடியில் இருந்து புதுச்சேரியை மீட்கும் கட்சி அதிமுக என்றும், புதுச்சேரியின் முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த கட்சியும் அதிமுக தான் என பிரச்சாரத்தில் வேட்பாளர் தமிழ்வேந்தனின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வக்பு போர்டு வாரியம் அமைக்க போராடியது, ஜிப்மரில் உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு போராட்டம், பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கவும் ரேஷன் கடைகள் திறக்கவும் நடத்தப்பட்ட போராட்டம் என அதிமுக கட்சியின் கள செயல்பாடுகளை முன்வைத்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வருகின்றனர். எளிய பின்னணியில் வளர்ந்த வந்த தமிழ்வேந்தன் முதல் முறையாக போட்டியிடும் திருபுவனை மக்களவைத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.